GAME OVER



வீடியோ கேம் விபரீதம்!

குடும்பத்தைப் பிரிந்து ஒரு பெரிய பங்களாவில் வீல் சேர் துணையோடும் வேலைக்கார அம்மா துணையோடும் வசிக்கிறார் டாப்ஸி. சஸ்பென்ஸ் த்ரில்லர் வீடியோ கேம்களை கண்டிபிடிப்பதுதான் அவருடைய வேலை. வீடியோ கேம் விளையாடுவது அவருடைய முக்கிய பொழுதுபோக்கு.

அவருடைய கையில் வீடியோகேம் பிளேயர் வடிவில் மூன்று இடங்களில் பச்சை குத்திக்கொள்கிறார். பச்சை குத்திக் கொண்ட இடத்தில் எரிச்சல் அதிகமாகிறது. அதனால் அதை நீக்கப் போகும்போது பச்சை குத்தியதில் ஒரு பிழை நேர்ந்திருக்கிறதை கண்டுபிடிக்கிறார். அப்போது பச்சை குத்திய அந்த வீடியோ கேம் மூலம் நிகழப் போகும் விஷயங்களை அறிந்ததும் அதிர்ந்து போகிறார். அதன்பின் தொடர் துன்பங்களை சந்திக்கும் டாப்ஸி அவற்றிலிருந்து மீண்டாரா இல்லையா என்பது மீதிக் கதை.

முழுப்படத்தின் வெயிட்டும் டாப்ஸியின் தோள் மீது இறக்கி வைக்கப்பட்டுள்ளது. அவரும் சுமைதாங்கி போல் ஜஸ்ட் லைக் தட் எனுமளவுக்கு சர்வ சாதாரணமா எல்லா உணர்ச்சிகளையும் மிக அழகாக வெளிப்படுத்துகிறார். மொத்தத்தில் டாப்ஸியின் பங்களிப்பை சொல்வதாக இருந்தால் ஒன் வுமன் ஆர்மி போல பின்னிப் பெடல் எடுத்துள்ளார்.

அடுத்ததாக ரசிகர்களின் கவனத்தை அதிகமாக ஈர்ப்பவர் கலாம்மாவாக வரும் வினோதினி. கொடுத்த வேடத்துக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார். வேலைக்கார அம்மாவாக இல்லாமல் டாப்ஸியின் சொந்த அம்மா போல கவனிக்கும் பாங்கு பாராட்டுக்குரியது. க்ளைமாக்ஸ் காட்சியில் எதிரியை வீழ்த்தும் காட்சியில் சபாஷ் வாங்குகிறார்.

ரான் எதான் யோகனின் பின்னணி இசை பாராட்டும்படி உள்ளது. ஏ.வசந்தின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது. திரைக்கதைக்குத் தேவையான அளவு லைட்டிங் செய்திருக்கிறார். சில காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன.ஊருக்குள் நடக்கிற சைக்கோ கொலைகள், டாப்ஸியின் வாழ்வில் புத்தாண்டு அன்று நடந்த கொடூரம், பச்சை குத்துவதால் ஏற்படுகிற விளைவுகள் உட்பட பல அடுக்குகளில் அமைந்த திரைக்கதை புத்திசாலித்தனம்.

முதல்பாதியில் ஸ்லோமோஷனில் நகரும் திரைக்கதை படத்தின் பலவீனம். இரண்டாம் பாதியின் இறுதிப்பகுதி மிக விறுவிறுப்பு. இயக்குநர் அஸ்வின் சரவணன் பெரிய ஆள் பலத்தை துணைக்கு அழைத்துக் கொள்ளாமல் வித்தியாசமான கதைக்களத்தை நம்பி படம் எடுத்திருக்கிறார். அவருடைய இந்த முயற்சி பாராட்டுக்குரியது.

பிரச்சனையின் போது மன உறுதியோடு போராடினால் வெற்றி நிச்சயம் என்கிற கருத்தை அழுத்தமாகச் சொல்லியதன் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துக் கொள்கிறது இந்த கேம்.