சிலுக்குவார்பட்டி சிங்கம் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் டைட்டில்ஸ் டாக்-114

எனக்கு சொந்த ஊர் சென்னை. நான் பிறந்து, வளர்ந்த ராயபுரமும் ஒருவகையில் எனக்கு சிலுக்குவார்பட்டிதான். அந்த ஊரில் பிறந்து வளர்ந்த எனக்கு நடந்தவைகள் எல்லாமே சிலிர்க்க வைக்கும் ரகம்.அப்பா கம்யூனிஸ்ட்.
அம்மா இல்லத்தரசி. நாங்கள் மொத்தம் ஆறு பேர். அப்பாவுக்கு வெல்டிங் தொழில். அப்பா சின்ன வயதிலேயே தவறிவிட்டார். இப்போது நாங்கள் எல்லோரும் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் இருக்கிறோம் என்றால் அதற்கு அம்மாவின் தியாகமும் ஒரு காரணம்.

கம்யூனிஸ்ட் குடும்பம் என்பதால் சின்ன வயதிலேயே உழைப்பு, நேர்மை, உண்மையின் முக்கியத்துவத்தை சொல்லிச் சொல்லி வளர்த்தார்கள். கஷ்ட ஜீவனமாக இருந்தாலும் வீட்ல எங்களை பட்டினி போட்டதில்லை.என்னுடன் பிறந்தவர்களில் நான்கு பேர் பிரான்ஸ்லே செட்டிலாகிட்டாங்க. எனக்கும் இளம் வயதிலேயே பேங்க் வேலை கிடைத்தது. ஒருகட்டத்தில் டி.வி, சினிமாவில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவே வி.ஆர்.எஸ். கொடுத்துவிட்டேன். என் வாழ்க்கையில் நடந்தவற்றை நினைக்கும்போது எல்லாமே சிலிர்க்க வைக்கும்.

உழைப்பும் நேர்மையும்தான் என்னை உயர்த்தியுள்ளது. நாங்க தர்மம் செய்யக்கூடிய அளவுக்கு பெரிய குடும்பம் இல்லை. ஆனால், அம்மா அக்கம் பக்கத்துல உள்ளவங்களுக்கு முடிந்தளவுக்கு உதவி செய்வார். வீட்டுக்கு யாராவது வந்தால் வெறும் வயிற்றோடு திருப்பி அனுப்பமாட்டார். உலை வைக்கும்போது ஒரு பிடி அரிசி எக்ஸ்ட்ரா போட்டுதான் சமைப்பார்.

அப்போதெல்லாம் நான் கடவுள் பக்தி அதிகம் கொண்டவனாக இருந்தேன். இப்போது பக்தியில் அவ்வளவு நாட்டம் இல்லை. காரணம் இப்போது மக்கள் ஒரு கையில் பக்தியையும், இன்னொரு கையில் அநியாயத்தையும் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். போலி பக்திமான்களின் இதுபோன்ற நடவடிக்கைகள் என்னை பக்தியிலிருந்து பின்வாங்க வைத்துவிட்டது. நான் கடவுள் மறுப்பாளனாக மாறி யிருப்பது பலருக்கு சிலிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாவற்றுக்கும் காரணம் மக்களின் பேராசை. கோயில் இடமாக இருந்தாலும் ஏழையின் நிலமாக இருந்தாலும் சரி, அந்த நிலத்தை அபரிக்க ஆசைப்படுகிறார்கள். கோயிலுக்கு என்று நிதி கேட்டுவிட்டு அந்தப் பணத்தை அமுக்கி அடாவடி செயல்களினால் சிலிர்க்க வைத்திருக்கிறார்கள்.
நான் நடிகனாக மாறியதும் என்னுடைய அடையாளமாக இருக்கும் கைசுற்றலும் நான் கனவிலும் நினைக்காத விஷயங்கள்.

 எங்க ஏரியாவில் ஒரு கோயில் இருந்தது. அந்தக் கோயிலுக்கு சுற்றுச்சுவர் என்ற பெயரில் ஒரு சுவர் சாய்ந்த நிலையில் இருக்கும். நான் நடிகனாக மாறினால் கோயில் சுவரை கட்டிக் கொடுப்பதாக வேண்டிக்கொண்டேன். நான் நினைத்தபடி அரசு வேலை, சினிமா இரண்டிலும் வாய்ப்பு கிடைத்தது. பிற்காலத்தில் நான் கொடுத்த வாக்கையும் நிறைவேற்றிவிட்டேன்.

 இந்த நிகழ்வுகள் அனைத்தும் என்னை சிலிர்க்க வைத்துள்ளது. ஏன்னா நான் பத்தாம் வகுப்பு வரைதான் படித்துள்ளேன். ஆனால் என் வாழ்க்கையில் நடந்தவைகள் டிகிரி முடித்தவர்கள் கூட தொட முடியாத உயரம்.குழந்தைப் பருவத்திலிருந்து நாடகங்களில் நடித்து வருகிறேன். என்னுடைய நடிப்பை பலர் பாராட்டியிருக்கிறார்கள். திரையில் கஷ்டப்பட்டு நடிக்கும் என் போன்ற கலைஞர்களுக்கு அந்தப் பாராட்டு கொடுக்கும் சிலிர்ப்பை வார்த்தையால் வர்ணிக்கமுடியாது. அது ஒரு பரவசம்.

‘சிகரம் தொடு’ படத்தில் ஒரு குளோஸ் அப் காட்சி. ‘அண்ணே நீங்க நல்ல நடிப்பீங்க. எனக்கு 8 சிவாஜி எக்ஸ்பிரஷன் வேண்டாம். 2 சிவாஜி நடிப்பு போதும்’ என்று இயக்குநர் கெளரவ் கேட்டார். அதை  புரிந்து நடித்த போது இயக்குநர் என்னை பாராட்டிய அந்த அனுபவத்தை எப்போது நினைத்தாலும் சிலிர்க்க வைக்கும்.

கை சுத்துவது எனக்கு கிடைத்த வரம். எப்படி எனக்குள் அந்தப் பழக்கம் வந்தது என்று தெரியவில்லை. பொது இடங்களில் எங்கு போனாலும் மக்கள் கையை சுத்தி சுத்தி பேசச் சொல்கிறார்கள். ‘வேலாயுதம்’ படம் பண்ணும் போது ‘மனோகரை எனக்கு ரொம்ப பிடிக்கும்’ என்று விஜய் சார் சொன்னதாக சந்தானம் என்னிடம் தெரிவித்தார். கோடிக்கணக்கில் ரசிகர்களை வைத்துள்ள விஜய் சார் அடுத்தவர்களின் நடிப்பை பாராட்டிப் பேசுவதை கேள்விப்படும்போது யாருக்குத்தான் சிலிர்ப்பு ஏற்படாது. நடிகைகளில் நயன்தாராவும், காமெடி நடிகர்களில் நாகேஷ் சாரும்  என்னைச் சிலிர்க்க வைத்துள்ளார்கள்.   

என்னுடைய வாழ்க்கையை கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிப் பார்க்கும்போது எல்லாமே சிலிர்க்க வைக்கத்தக்க வகையில் இருக்கிறது. இது வெறும் வார்தை அல்ல. புத்திசாலியான மனைவி, அருமையான மகள். என்ஜினியரிங் முடித்துள்ளார். பேர் சொல்லும் பிள்ளையாக என்னுடய ஒரே மகன் ‘ஸ்பாட்’ படத்தில் நான்கு நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கிறார். சொந்தமா வீடு, கார் வைத்துள்ளேன். ஓர் அழகான குடும்பம் அமைவது எவ்வளவு பெரிய பாக்யம்.

என்னுடைய வாழ்க்கையில் சிலர் நன்மை செய்து சிலிர்க்க வைத்திருக்கிறார்கள். என் சம்பாத்தியத்தை ஏமாற்றியும் சிலர் சிலிர்க்க வைத்திருக்கிறார்கள். ஆனால் மோசடி மனிதர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்ததில்லை.

இளைஞர்களுக்கு என்னுடைய ஆலோசனை இதுதான். சின்ன வயதிலேயே சிந்திக்க ஆரம்பித்துவிடுங்கள். உங்கள் துறை எது என்று கனவு காண ஆரம்பியுங்கள். நான் நடிகனாக வேண்டும் என்ற ரூட் பிடித்து நடிக்க வந்துவிட்டேன். நான் நினைத்தது நடந்தும் விட்டது. அதுபோல் நீங்கள் என்னவாக வரவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை செயல்படுத்து வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுங்கள். துணிந்து செய்யுங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

தொகுப்பு : சுரேஷ் ராஜா

(தொடரும்)