தமிழ் சினிமாவில் ஒலிக்கும் புதிய குரல்!யார் கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும்.. பூச்செடி பூக்களை நித்தம் பூமிக்கு பரிசளித்துக்கொண்டேதான் இருக்கிறது. அதனை கவனித்து நுகர்வதும், கண்டுகொள்ளாமல் நகர்வதும் அவரவர் கொடுப்பினை.சென்னைக்கு மிக அருகிலிருக்கும் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து பாட்டெழுத வந்திருக்கிறார் செந்தமிழ்.
இதுவரை இவரது மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டு, அவை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முனைவர் ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து சிறுகதைகள், பாடல்கள் எழுதி வரும் இந்த இளம் பாடலாசிரியரிடம் பேசினோம்.

“உங்களைப் பற்றி...?”

“சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம் வெள்ளத்தூர். அப்பா தமிழாசிரியர். அதனாலேயே என்னை கண்டிப்பதாக இருந்தாலும் தண்டிப்பதாக இருந்தாலும் திருக்குறள், நாலடியார் போன்ற நூல்களிலிருந்து மேற்கோள் காண்பித்து அறிவுரை சொல்வார்.

அப்போது எனக்கு அதன் பொருள் தெரியாது. ஆனால் மனதில் பதிந்தது. ஒரு கட்டத்துக்குப் பிறகு அப்பா சொன்ன அறிவுரைகள் ஞாபகத்துக்கு வந்ததும் தமிழ் இலக்கியங்களை தேடிப் பிடித்து வாசிக்க ஆரம்பித்தேன்.

நான் படிச்சது என்ஜினியரிங். பாட்டோடு பாட்டாக நான் படிச்ச படிப்புக்கு ஏத்தமாதிரி இதுவரை வேலை செய்து வருகிறேன். கல்லூரிப் படிப்பை காஞ்சிபுரத்தில் படித்ததால் மறைந்த நா.முத்துக்குமார் அண்ணனுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்தான் கவிதை எழுதுவது, தொகுப்பு வெளியிடுவது, சினிமா பாடல்கள் எழுதுவது என்று என் பார்வையை விசாலக்கிமானார்.”

“உங்களுடைய முதல் பாடல்?”

“முதன்முதலாக இயக்குநர், தயாரிப்பாளர் ஏ.ஆர்.கே. ராஜராஜா மொழிமாற்றுப் படங்களில் பாடல் எழுதும் வாய்ப்பை வழங்கினார். தற்போது இயக்குநர் முனியப்பக் குமாரின் ‘மோசமான கூட்டம்’, சாம்பார்ராஜனின் ‘மாட்டுக்கு நான் அடிமை’, இயக்குநர் சுகிரின் ‘நளின
காந்தி’, இயக்குநர் ஏழுமலையின் ‘அதர்மம்’ போன்ற படங்களில் பாடல்கள் எழுதியுள்ளேன். முப்பதுக்கும் மேற்பட்ட தனிப்பாடல்கள் எழுதியுள்ளேன்.
சாம்.சி.எஸ், சாஜன் மாதவ், உமர் எழிலன், ஷாஜகான், மோகன் சிவா, கார்த்திகேயன், சபேஷ் சாலமன் மற்றும் முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி வருகிறேன்.”

“சினிமா தவிர்த்து எழுதிய பாடல்கள்...?”

“கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களின் துயரை எடுத்துரைக்கும் பாடல் அனைவரின் நெஞ்சையும் பாதித்தது. தற்போது விவாதப் பொருளாகியிருக்கும் அய்யப்பன் கோயிலுக்கு பெண்களின் வருகை நிகழ்வு பற்றி நான் எழுதிய பக்திப் பாடலை பெண்ணின் குரலில் ஒலிக்க வைத்தோம். பிளாஸ்டிக் விழிப்புணர்வு பாடல் எனது வரிகளில் கானா பாலா பாடி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போது கானா சுதாகர் குரலில் நான் எழுதிய ‘பிடாரி' பாடலை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் வலையொளியில் கண்டு மகிழ்ந்துள்ளனர்.”

“உங்கள் படைப்புகள் பற்றி...?”

“இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன். இன்னும் நிறைய செய்ய வேண்டும். ‘அம்மாவின் கையும் பேசும்’, ‘மீண்டும் பள்ளிக்கு போகலாம்’, மற்றும் ‘ஆச்சரியக்குறிகளோடு ஒரு கேள்விக்குறி’ என்ற மூன்று கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளேன். கடந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் என்னுடைய படைப்புகளை இயக்குநர் பாக்யராஜ் வெளியிட்டார்.

‘ஊஞ்சலோடு ஜன்னல்,… ஜன்னலோடு மரம்’ என்ற ஹைக்கூ நூலையும் வெளியிட்டுள்ளேன். இப்போது பிரபலமான வார இதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறேன். அதைத் தொடர்ந்து சென்னை வானொலி நிலையத்தில் ‘கவிதைச்சரம்’ நிகழ்ச்சியில் கவிதையும் பாடி வருகிறேன்.
‘ஆச்சரியக்குறிகளோடு ஒரு கேள்விக்குறி’ என்ற கவிதை நூலை ‘அமெரிக்க உலகத் தமிழ் பல்கலைக்கழகம்’ சிறந்த நூலாக தேர்வு செய்து விருது வழங்கியது.

தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கத்தின் முப்பெரும் விழாவில் எழுத்துத் துறையில் ‘கலைமணி’ விருதும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. தற்போது சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எனது படைப்புகள் ‘புதுக்கவிதையில் செந்தமிழின் படைப்புகள் ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் முனைவர் ஆய்வுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.”

“சினிமாவில் உங்கள் லட்சியம்?”

“பிழைப்புக்காக பல்வேறு வகை பாடல்களை எழுதினாலும், காலம் கடந்து நிற்கத்தக்க வகையில் சமூக முன்னேற்றத்துக்கான கருத்துள்ள பாடல்கள் எழுத வேண்டும்.”“இப்போ வர்ற படங்களில் பாடல்கள் குறைந்துள்ளதைப் பற்றி?”

“நம்முடைய கலாச்சாரத்தைப் பொறுத்தவரை வாழ்வோ சாவோ, பாடல்களைச் சுற்றியே இருக்கும். ஒரு பெரிய நிகழ்வை பத்து வரிகளில் பாடல்கள் வழியாகக் கடத்த முடியும். ஒரு மனிதனுக்குள் இருக்கும் எல்லா உணர்வுகளையும் பாடல்கள் வழியே வெளிப்படுத்தமுடியும். இப்போ பாடல் இல்லாமல் படம் எடுப்பதை புது முயற்சியாக வரவேற்கலாம். ஆனால் இந்த நடைமுறை எல்லா கட்டத்துக்கும் பொருந்தாது.”

“உங்களுக்குப் பிடித்த பாடலாசிரியர்?”

“வாலி. அப்போது இருந்த கண்ணதாசன் ஐயா முதல் இப்போதுள்ள கார்க்கி வரை எல்லோரிடமும் தன்னுடைய ஆளுமையைச் செலுத்தியிருக்கிறார். இன்டர்நெட் பிரபலமாகாத காலத்திலேயே காதல் வைரஸ் என்று அவரால் பாடல் எழுத முடிந்தது. எப்படிப்பட்ட சிச்சுவேஷனாக இருந்தாலும் அவருடைய வார்த்தைக் கையாடல் அருமையாக இருக்கும். ஐந்து தலைமுறைக்கும் பொருந்தக் கூடிய காதல் பாடல்களை எழுதியுள்ளார். அவருடைய பாடல்களை தனிப்பட்ட விதத்தில் நான் ஆய்வுக்கும் எடுத்துக் கொண்டுள்ளேன்.”

- சுரேஷ்ராஜா