காணாமல்போகும் மாணவன்!இயக்குநர் பாலாவின் உதவியாளர் நந்தன் சுப்பராயன் இயக்கும் படம் ‘மயூரன்’. இந்தப் படத்தில் நடிக்கும் பெரும்பாலான நடிகர்கள் கூத்துப்பட்டறையில் பயிற்சி எடுத்தவர்களாம்.“மயூரன் என்றால் விரைந்து உன்னை காக்க வருபவன், வெற்றி புனைபவன் என்று பொருள். சாதாரண குடும்பத்தின் கனவுகளைச் சுமந்துகொண்டு விடுதியில் தங்கி பொறியியல் உயர்கல்வி படிக்க வரும் மாணவன், ஒரு நள்ளிரவில் காணாமல் போனால் என்னவாகும் என்பதே கதை.

மொத்த குடும்பத்தின் ஒற்றை ஆதாரமான அவனைத் தேடிச் செல்கையில் காணாமல்போனதின் மர்ம முடிச்சுகள் மேலும் மேலும் இறுகி, அது சிக்கல்களையும், பிரச்சனைகளையும் உருவாக்குகின்றது.கல்லூரி விடுதிகள் என்பது வெறுமனே தங்கிப் போகும் வாடகைச் சத்திரம் அல்ல.

அது வாழ்க்கையை செதுக்கும் பட்டறைக் களம். அவர்களது எதிர்காலத்தை நல்ல விதமாகவோ மோசமானதாகவோ மாற்றும் ரசவாதக் கூடம். நட்பு, அன்பு, நெகிழ்வு, குற்றப் பின்னணி, குரூர மனம் எனும் பல்வேறு மனித இழைகளால் நெய்யப்பட்ட உலகம்தான் கல்லூரி விடுதிகள்.

சாதாரண கூழாங்கற்கள், வைரக்கற்களாகவும்.. வைரக்கற்கள் கண்ணிமைக்கும் வினாடி களில் காணாமல் போகவும் வாய்ப்பு உள்ள இடம். அங்கு ஏற்படும் பிரச்சனைகள் ஒரு தனிமனித வாழ்வை எவ்வாறு தலைகுப்புற கவிழ்த்துப் போடுகிறது என்பதைப் பற்றித்தான் படம் பேசுகிறது.

ஓர் அருமையான கதைக் களத்தை விறுவிறுப்பான திரைக்கதை தேன் தடவி உருவாக்கியிருக்கிறேன். வேல.ராமமூர்த்தி, ஆனந்த்சாமி, அமுதவாணன், அஸ்மிதா மற்றும் கைலாஷ், சாஷி, பாலாஜி ராதாகிருஷ்ணன், ரமேஷ்குமார், கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தோஷ் சிவன் உதவியாளர் பரமேஷ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். ஜூபின், ஜெரார்ட் இசையமைக்கிறார்கள். ஃபினாகில் பிலிம் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. இயக்குநர் பாலா சாரிடம் ‘நந்தா’, ‘பிதாமகன்’ போன்ற படங்களில் உதவியாளராக இருந்தேன். சாருடன் இருந்த காலம் பொற்காலம். இது என்னுடைய குருநாதர் பாலா சார் படம் போல் அழுத்தமான படமாக இருக்கும். ஆனால் பிரசன்டேஷன் என்னுடைய ஸ்டைலில் இருக்கும்’’ என்கிறார் நந்தன் சுப்பராயன்.

- ரா