கண்ணுக்குள் நூறு நிலவுகளை மின்ன விட்டவர்!மின்னுவதெல்லாம் பொன்தான்-31

ஓர் இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா பேசிக்கொண்டே போக, கேட்டவர்கள் எல்லாம் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.“இளையராஜாவை விட தேவேந்திரன் இசையில் மகா பெரியவர். இளையராஜா கும்மிப் பாட்டு, நாட்டுப்புறப் பாட்டுகளில் இருந்து இசையைத் தேடிக் கண்டுபிடித்துத் தருகிறவன்.

தேவேந்திரன் முறைப்படி இசை கற்றவர். இசையின்  குருவாக இருந்தவர், அவருக்கு எல்லா ராகங்களும் அத்துப்படி.”எந்தவொரு கட்டத்திலும் இளையராஜாவை விட்டுக் கொடுக்காதவர் பாரதிராஜா. ராஜாவின் பால்யகால நண்பரும் அல்லவா?

அப்படியிருந்தும் இளையராஜாவுக்கு மேலாக ஓர் இசையமைப்பாளரை அவர் அப்படி புகழ்ந்து தள்ள வேண்டியதின் அவசியம் என்ன?

தேவேந்திரன், தமிழ்த் திரையிசையில் உருவாக்கிய சில பாடல்களைக் கேட்டால் உங்களுக்கு, பாரதிராஜா மீது கோபம் வராது.

“கண்ணுக்குள் நூறு நிலவா,  இது ஒரு கனவா,  கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா…”
” புத்தம் புது ஓலை வரும்  இந்த பூவுக்கொரு மலை வரும்”“தென்றலிலே மிதந்து வரும் தெய்வமங்கை வாழ்க”
தமிழ் சினிமாவில் ‘மெலடி’ என்று பட்டியலிட்டால் தேவேந்திரனின் பாடல்களைத் தவிர்க்கவே முடியாது.

1987ம் ஆண்டு வெளிவந்த ‘வேதம் புதிது’ படத்தில்  ராகம் புதிதென வந்தவர் இந்த தேவேந்திரன்.  இவரை அறிமுகப்படுத்தியவர்  பாரதிராஜா அல்ல. அவரது மைத்துனர் மனோஜ்  குமார். அவரின் முதல் படமான ‘மண்ணுக்குள் வைரம்’ படத்தில்தான்  தேவேந்திரன் இசை அமைப்பாளராக அறிமுகமானார்.  சிவாஜி,  சுஜாதா நடித்த படம்.

அந்தப் படம் பெரிய வெற்றி பெறாவிட்டாலும் தேவேந்திரனின் மண்வாசனையுடன் கூடிய இசையும், பாடல்களும் ரசிகர்களிடம் பேசப்பட்டது.
அந்தப் படத்தைப் பார்த்து விட்டுத்தான் பாரதிராஜா, தனது ‘வேதம் புதிது’ படத்தில் தேவேந்திரனை இசை அமைக்க வைத்தார். அப்போது இளையராஜாவுக்கும், பாரதிராஜாவுக்கும்  பனிப்போர் ஒன்று நடந்து கொண்டிருந்ததும் தேவேந்திரனுக்கு வாய்ப்பு கிடைக்கக் காரணமாக இருந்தது.
இளையராஜா இல்லாத பாரதிராஜா படம் என்கிற குறை தெரியாமல் ‘வேதம் புதிது’ படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆனது. ‘வேதம் புதிது’ படத்தினை அனைவரும் பாராட்டும் வண்ணம், இசை வேதம் ஓதிய தேவேந்திரன் அதன் பிறகு அந்த மந்திர இசையைத் தரமுடியாமல் போனது ஏன் என்பது காலத்துக்கே வெளிச்சம்.

‘ஆண்களை நம்பாதே’, ‘ஒரே ரத்தம்’, ‘கனம் கோர்ட்டார் அவர்களே’, ‘புதிய தென்றல்’ என்று அவரும் அவ்வப்போது இசையமைத்துக் கொண்டுதான் இருக்கிறார். கடைசியாக 2012ல் வெளிவந்த ‘நானும் ஜமுனாவும்’ படத்துக்குப் பிறகு ஆறு ஆண்டுகள் இசையமைக்காமலேயே இருந்தார். கடந்த ஆண்டு ஈழத் தமிழர்களின் துயரத்தைப் பேசிய ‘கடல் குதிரைகள்’ படத்துக்கு தேவேந்திரன் இசை என்பது பலரது புருவங்களை உயர்த்த வைத்தது.

முப்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இசையமைப்பாளரான தேவேந்திரன், இதுவரை இருபத்தைந்து படங்களுக்குக் கூட இசையமைக்கவில்லை.  இத்தனைக்கும் தேவேந்திரன் கேள்வி ஞானத்தால்  இசை  அமைப்பாளர் ஆனவரில்லை.

கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை மற்றும் மேற்கத்திய இசையை குருகுல முறைப்படி முறையாகக் கற்றவர். தோல் இசைக் கருவிகளை இசைப்பதில் வல்லவர். பாரதிராஜா  குறிப்பிடுவதைப்போன்று ராகங்கள் குறித்த தெளிவான அறிவுடையவர், இசை ஆசிரியராகப் பணியாற்றியவர்.  இளையராஜவே ராகங்கள் குறித்த சந்தேகங்களை இவரிடம் கேட்டு விளக்கம் பெற்றுக் கொள்வார் என்றும் கூறப் படுவதுண்டு. அப்படிப்பட்டவர் சினிமாவில் ஜெயிக்க முடியாமல் போனதற்கு காரணம்  என்ன?

வெறும் இசை அறிவு மட்டுமே சினிமாவுக்குப் போதாது. சினிமாவுக்கென்று தனி அரசியல் இருக்கிறது. அது தேவேந்திரனுக்கு ஒருவேளை தெரியாமல்  போயிருக்கலாம்.

(மின்னும்)

●பைம்பொழில் மீரான்