ஐந்து முதல்வர்களுடன் நடித்த அனுபவம்! சச்சு பகிர்கிறார்



‘‘எங்கள் வீட்டில் நான் தான் பிரட் வின்னர். என்னுடைய அப்பா ஒருகாலத்தில் வக்கீல் தொழிலில் கொடிகட்டிப் பறந்தவர். அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் குடும்பத்தை சுமக்கும் பொறுப்பு என் மீது விழுந்தது. என் காலத்தில் நான் மட்டுமே குழந்தை நட்சத்திரமாக இருந்ததால் மோஸ்ட் வாண்ட்டட் பேபி ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தேன். குடும்பத்துல நாங்க மொத்தம் ஒன்பது பேர்.

இளம் வயதிலேயே நான் நடிக்க வந்துவிட்டதால் படிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் கல்லூரியில் சேர்ந்து படித்தாலும் கிடைக்காத கல்வி எனக்கு கிடைத்தது. வீட்டிலேயே ஹோம் டியூஷன் மூலம் அடிப்படைக் கல்வி கற்றுக் கொண்டேன். தென்மாநிலங்களை ஆட்சி செய்த ஐந்து முதல்வர்களின் படங்களில் நடித்துள்ளேன். சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன்.

இப்போதும்கூட ‘ஜாக்பாட்’, ‘பேரழகி ஐ.எஸ்.ஓ’ போன்ற படங்களில் நடித்துள்ளேன். இறைவன் அருளால் நானும் நல்லா இருக்கேன். என் உடன் பிறந்தவர்களும் நல்லா இருக்கிறார்கள். என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். இளமையில் எப்படி சுறுசுறுப்பாக இருந்தேனோ அதே சுறுசுறுப்புடன் இப்போதும் இருக்கிறேன்.

I am happy’’ என்று உற்சாகத்துடன் பேசுகிறார் பழம்பெரும் நடிகை சச்சு. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நாயகியாக வளர்ந்து காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்ற சச்சு தன்னுடைய சினிமா அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

“சரஸ்வதி ஏன் சச்சு ஆனார்?”“வீட்லே செல்லமா சச்சுன்னு கூப்பிடுவாங்க. அதுவே நிலைச்சிடிச்சி. ‘தேவதாஸ்’, ‘ஒளவையார்’ என்று சில படங்களில் சரஸ்வதி என்ற பெயரிலும் நடித்துள்ளேன். இந்தியாவில் சச்சு என்ற பெயரில் வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.”

“சினிமாவுக்கு வந்த பின்னணி?”

“வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகில் புதுப்பாடி கிராமம். பிறந்து வளர்ந்தது சென்னை மண்ணடி. அப்பாவுக்கு வக்கீல் தொழில். ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்த நான் நடிக்க வந்தது ஆச்சர்யமே. என்னுடைய பெரிய அக்கா மாடிலட்சுமி. சிறந்த மேடைப் பேச்சாளர். அறிஞர் அண்ணாவின் கூட்டத்திலும் பேசியிருக்கிறார். அவர்தான் முதன் முதலாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

அப்போது என்னுடைய பாட்டி வீடு மயிலாப்பூரில் இருந்தது. நானும் அக்காவும் பாட்டி வீட்டில் வளர்ந்தோம். நாங்கள் பெரிய குடும்பம். 5 பெண்கள், 4 ஆண்கள். எங்கள் வீட்டின் ஒரு பகுதியில் பிரபல நடன ஆசிரியர் கே.என்.தண்டபாணி குடியிருந்தார். அவரிடம் நானும் அக்காவும் நடனம் பயின்றோம். அவர், வைஜெயந்திமாலா உட்பட ஏராளமான பிரபலங்களுக்கு நடனம் சொல்லிக் கொடுத்தவர். ‘ரோஜா மலரே ராஜ
குமாரி’ பாடலுக்கு அவர்தான் டான்ஸ் கம்போஸர்.

தண்டபாணி மாஸ்டரைப் பார்க்க கே.ஆர்.ராமசாமி, டி.ஆர்.ராஜகுமாரரி, வைஜெயந்தி மாலா போன்ற சினிமாக்காரர்கள் நிறையப் பேர் வருவார்கள். அங்கு தயாரிப்பாளர் சாமியும் வருவார். அப்போது என்னைப் பார்த்துவிட்டு பானுமதி நடித்த ‘ராணி’யில் நடிக்க அழைத்தார்.
 ‘தியாக பூமி’ பேபி சரோஜா, அப்போ குழந்தை நட்சத்திரமாக கொடிகட்டிப் பறந்தவர். பேபி சரோஜாவைப் போல நானும் சினிமாவில் நடித்து புகழ் பெற வேண்டும் என்று பாட்டி ஆசைப்பட்டார்.

இயல்பிலேயே எனக்கு கற்பூர புத்தி. பாட்டி சொல்லைத் தட்டாமல் நடிக்க வந்துவிட்டேன். அண்ணாவின் படைப்பில் கே.ஆர்.ராமசாமி, பி.எஸ்.வீரப்பா, பத்மினி நடித்த ‘சொர்க்க வாசல்’ படம் எனக்கு பெரிய புகழைக் கொடுத்தது. தொடர்ந்து நடிக்க வாய்ப்பு வந்ததால் படிப்பு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. வீட்டிலேயே பாடம் சொல்லித்தர ஏற்பாடு செய்தார்கள். இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகள் எனக்கு சரளமாக எழுதவும், பேசவும் தெரியும்.”

“ஐநூறு படங்களில் நடித்திருக்கிறீர்களே?”

“எனக்கே ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது. ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஓயாமல் நடித்திருக்கிறேன். அக்காலத்தில் ஆறு ஷிஃப்ட் நடிக்கக்கூடியவர் நாகேஷ். அவருக்கு இணையாக நானும் ஆறு ஷிஃப்ட் நடித்துள்ளேன்.‘வீரத் திருமகன்’, ‘காதலிக்க நேரமில்லை’ உட்பட ஏராளமான படங்கள் திருப்புமுனை கொடுத்துள்ளது.

அப்போது நாயகியாக வருவதற்கான அனைத்து தகுதிகளும் என்னிடம் இருந்தன. ஆனால் அப்போது எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என்று எல்லாருமே சீனியர் ஹீரோக்களாக இருந்தார்கள்.  எனக்கு அப்போது வயது பதினைந்துதான். அவர்களது தோற்றத்துக்கு சிறுபெண்ணான நான் பொருந்தியிருக்க மாட்டேன். ஜெய்சங்கர் லேட்டாகத்தான் சினிமாவுக்கு வந்தார். கொஞ்சம் வெயிட் பண்ணியிருந்தால் எனக்கு ஹீரோயின் வாய்ப்பே தொடர்ந்து கிடைத்திருக்கும்.

‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் காமெடி வேடம் கமிட் பண்ண காரணம் குடும்பச் சூழ்நிலை. அப்போது அப்பாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தொடர்ந்து நடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது,  நான்தான் எங்கள் வீட்டுக்கு பிரட் வின்னர். சினிமாவைப் பொறுத்தவரை காமெடி ரோலில் நடித்தவர்கள் நாயகன், நாயகியாக வந்துள்ளார்கள்.

நான் மட்டுமே நாயகியாக இருந்து காமெடிக்கு மாறினேன். அந்தக் காலத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் இருந்தது. நாகேஷ்-சச்சு ஜோடி க்ளிக் ஆனதால் தொடர்ந்து பட வாய்ப்பு வர ஆரம்பித்தது. இருந்தும் ‘அன்னை இல்லம்’, ‘எங்களுக்கும் காலம் வரும்’ போன்ற படங்களில் கதைநாயகியாக நடிச்சிருக்கேன்.”

 “அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், என்.டி.ராமாராவ், ஜெய லலிதா ஆகிய ஐந்து முதல்வர்களுடன் வேலை பார்த்த அனுபவம்?”
“அண்ணாவுடன் குழந்தைப் பருவத்திலேயே பழகி யிருக்கிறேன். என் அப்பா வழி பாட்டிக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம். அண்ணாவும் என்னுடைய அப்பாவும் பச்சையப்பா பள்ளியில் வகுப்புத் தோழர்கள். ‘சொர்க்கவாசல்’ பார்த்துவிட்டு ‘என் மாவட்டத்துப் பொண்ணு’ என்று  பாராட்டினார். அண்ணாவின் தமிழுக்கு நான் அடிமை.

அவருடைய கூட்டம் எங்கு நடந்தாலும் போவேன். அண்ணாவின் ஆசியுடன் ‘வாய்மையே வெல்லும்’ என்ற நாட்டிய நாடகம் பண்ணியது மறக்க முடியாது. தி.மு.க எப்படி உருவானது என்ற அந்த நாடகம் மக்கள் மத்தியில் எனக்கு நல்ல பெயரைக் கொடுத்தது.சென்ட்ரல் ஸ்டூடியோவில் நானும் எம்.ஜி.ஆரும் இணைந்து வேலை செய்ததால் எம்.ஜி.ஆருடன்  நன்றாகப் பழக முடிந்தது. ‘கலையரசி’ படத்தில் அண்ணன் தங்கையாக நடித்துள்ளோம்.

‘மாட்டுக்கார வேலன்’ உட்பட ஏராளமான படங்களில் எம்.ஜி.ஆருடன் நடித்தேன். என்னுடைய வளர்ச்சியில் எப்போதும் அக்கறை காண்பிக்கக்கூடியவர். நாயகி வாய்ப்பு கேட்டபோது குழந்தை முகம் என்பதால் கொஞ்ச காலம் வெயிட் பண்ணச் சொன்னார். குடும்ப சூழ்நிலை காரணமாக நான் தான் கிடைத்த வாய்ப்பில் நடிக்க ஆரம்பித்தேன். நான் காமெடி வேடங்களில் நடிக்க ஆரம்பித்ததும் ‘அவசரப்பட்டுட்ட’ என்றார்.

கலைஞர் எழுதிய ‘அவன் பித்தனா’ படத்தில் நடித்துள்ளேன். எஸ்.எஸ்.ஆர்.விஜயகுமாரி நடித்த படம் அது. இயக்கம் பா.நீலகண்டன். ஒரு காட்சியில் எனக்கு வசனம் அதிகம். அன்று கலைஞர் செட்டில் அமர்ந்து நான் எப்படி பேசுகிறேன் என்று கவனிக்க காத்திருந்தார். கலைஞர் இருந்ததால் என்னால் சரியாக பேச முடியவில்லை. ஆனால் கலைஞர், எஸ்.எஸ்.ஆர். உற்சாகம் கொடுத்து பேச வைத்தார்கள்.   அதன் பிறகு கலைஞரின் ‘பிள்ளையோ பிள்ளை’ உட்பட ஏராளமான படங்கள் பண்ணியிருக்கிறேன்.

என்.டி.ஆருடன் ‘மாயா பஜார்’, ‘மருமகள்’ உட்பட நிறைய படங்கள் பண்ணியிருக்கிறேன். எங்கு பார்த்தாலும் என்னை அடையாளம் கண்டு பேசுவார். ஒரு முறை லண்டனில் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அப்போதும் ‘சச்சு காரு இக்கட ரண்டி’ என்று அழைத்தார். ‘மாயா பஜார்’ படத்துல என் கேரக்டர் பெயர் வச்சலா என்பதால் என்னை ‘வச்சலா’ என்றே அழைப்பார்.

ஜெயலலிதாவுடன் ஃப்ரெண்ட்லியா பழகியிருக்கிறேன். அவருக்கு என் மீது நம்பிக்கை இருந்த காரணத்தினால் பர்சனலா நிறைய பேசுவோம். அவருடைய அம்மா சந்தியாவுடன் ‘மாயா பஜார்’, ‘மரகதம்’ போன்ற படங்களில் நடித்துள்ளேன். நானும் ஜெயாவும் ‘பொம்மலாட்டம்’, ‘சுமதி என் சுந்தரி’, ‘மோட்டார் சுந்தரம்பிள்ளை’ உட்பட 20 படங்களில் சேர்ந்து வேலை பார்த்துள்ளோம். பலமுறை என்னுடைய  டிரஸ்ஸிங் சென்ஸை பாராட்டியிருக்கிறார்.

ஜெயாவிடம் பிடித்த குணம் அவர் ஐடியலா இருப்பார். அதிகம் பேசமாட்டார். எண்ணங்களில் தெளிவு உள்ளவர். புத்தக வாசிப்போ மற்ற வேலையோ எதுவாக இருந்தாலும் அதிலேயே கவனம் இருக்கும். டயலாக்கை ஒரு முறைதான் கேட்பார். ஒன்ஸ் மோர் கேட்கும் பழக்கம் இல்லாதவர். உடன் பழகுபவர்களின் திறமைகளைத் தெரிந்து வைத்திருப்பார். சமயம் வரும் போது அவர்களுக்குத் தேவையான நன்மைகளைச் செய்வார். எனக்கு இயல் இசை நாடக மன்ற செயலர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். மொத்தத்தில் என்னுடைய வெல் விஷர் என்று சொல்லலாம்.”

“மனோரமாவுக்கும், உங்களுக்குமான போட்டி?”

“போட்டி எப்போதும் இருக்கும். இருக்க வேண்டும், இல்லை என்றால் ‘தி பெஸ்ட்’ கொடுக்க முடியாது. எனக்கும் மனோரமாவுக்கும் போட்டி இருந்தது. பொறாமை இருந்ததில்லை. இருவரும் ஒட்டலுக்கு ஒன்றாக சாப்பிடச் செல்வோம். எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது.”

“இப்போ உங்கள் நட்பு வட்டாரத்தில் யாரெல்லாம் இருக்காங்க?”

“சாரதா, வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி, ராஜ, வாணி, காஞ்சனா, லதா, ‘செம்மீன்’ஷீலா, அம்பிகான்னு பெரிய டீம் இருக்கு. ஒவ்வொரு மாதமும் யார் வீட்டிலாவது சந்திப்போம். இதில் சோகமான விஷயம் சமீபத்தில் மறைந்த தேவி. அவர் நடித்த ‘மாம்’ படத்தை ஸ்கிரீன் பண்ணினார். துபாய் பயணத்துக்குப் பிறகு விரைவில் கெட்டுகெதரில் சந்திப்பதாக சொல்லியிருந்தார். அவர் சொல்லிய அடுத்த நாலைந்து நாட்களில் அவருடைய மரணச் செய்தி எங்களை உலுக்கிவிட்டது.”

“இப்போதும் உங்களுக்கு சினிமா வாய்ப்பு வருகிறதா?”

“நடிக்கிறேனே! ‘ஜாக்பாட்’, ‘பேரழகி’ படங்களில் நல்ல வேடங்கள் கிடைத்துள்ளன. அழுத்தமான ரோல்கள் வருவ தில்லை. அதற்காக வருந்தவில்லை. ‘ஜாக்பாட்’ படத்தில் என்னுடைய கேரக்டரிலிருந்து தான் கதை ஆரம்பிக்கும்.”

“இப்போ சினிமா எப்படியிருக்கு?”

“எங்க காலத்தில் நேர நிர்வாகத்தில் சரியாக இருப்போம். ஏ.பி.நாகராஜன் போன்ற இயக்குநர்கள் அனைத்து நடிகர்கள் முன்னிலையில் அடுத்த நாள் படப்பிடிப்புக்கான சம்மதம் கேட்பார். இப்போ வர்ற படங்களில் ஷாட் பியூட்டி நல்லா இருக்கு. அப்போ எக்ஸ்பிரஷனுக்கு முக்கியத்துவம் இருக்கும்.  இப்போ விஷுவலுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.

அட்மாஸ்பியருக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இப்போ ஒர்க்கிங் ஸ்டைல் மாறியுள்ளது. மானிட்டர் வசதி இருப்பதால் மானிட்டரைப் பார்த்து சரி செய்துகொள்கிறார்கள். அப்போ எல்லாமே ‘ஐ’ ஜட்ஜ்மெண்ட். ரசிகர்கள் பார்வையில் இயக்குநர்கள் படம் எடுத்தார்கள். டெக்னிக்கலாப் பார்த்தா, அந்தக் காலத்திலிருந்தே பிற மொழி படங்களுக்கு தமிழர்கள் டஃப் கொடுத்து வருகிறோம்.

இப்போ கதை, வசனத்துக்கு ஸ்கோப் இல்லை. ஒரு வார்த்தையில் வசனம் முடிந்துவிடுகிறது. காமெடிக்கு ஜோடி இல்லை. கோவை சரளாவுடன் முடிந்துவிட்டது. நாகேஷின் ‘ஓஹோ புரொடக்‌ஷன்’, தங்கவேலுவின் ‘கல்யாணப் பரிசு’ காமெடி காட்சிகள் இன்றும் பேசப்படுகிறது. அதுமாதிரி முயற்சிக்கலாம். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் வரத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமான வளர்ச்சி. பொழுதுபோக்கிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல் சமூகத்துக்கான கருத்துக்களையும் முன் வைக்கணும்.”

“உங்க லைஃப் இப்போ எப்படி போகுது?”

“எனக்கு என்று இப்போது தேவைகள் எதுவும் இல்லை. குடும்பத்தில் எல்லோரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.  உடம்புலே இன்னும் எனக்கு தெம்பு இருக்கு. எப்போதும் நான் வரவுக்கு மீறி செலவு செய்யமாட்டேன். மூன்று மாதம் வேலை கிடைத்தால், அடுத்த மூன்று மாதம் வேலை இல்லை என்று நினைத்துதான் செலவு செய்வேன். என்னுடைய அம்மா கற்றுக் கொடுத்த அந்த பாலிஸியை கடைப்பிடிப்பதால் திண்டாட்டம் இல்லாமல் வாழமுடிகிறது.”

- சுரேஷ்ராஜா

படம்: ஆர்.சந்திரசேகர்