சாதி என்னும் சுமை!



‘கலாபக்காதலன்’, ‘தேன்கூடு’, ‘வந்தா மல’ போன்ற படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் இகோர். இவர் இயக்கும் படம் ‘வகிபா’. இந்த படத்தில் புதுமுகம் விஜய்கரண் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். இவர்களுடன் ‘நான் மகான் அல்ல’ மகேந்திரன், கஞ்சா கருப்பு, ஏ.வெங்கடேஷ் ஆகியோரும் இருக்கிறார்கள். ஒளிப்பதிவு சக்திவேல். இசை முஜிப்ரஹ்மான். வசனம் ரா.கண்ணன். பாடல்கள் மோகன்ராஜ், குகை மா.புகழேந்தி. கதை, தயாரிப்பு ஸ்சொப்பன் பிரதான்.

படம் பற்றி இயக்குனர் இகோர் கூறியதாவது...‘‘வண்ணக்கிளி பாரதி எனும் பெயரின் சுருக்கமே வகிபா. ஒரு தனி மனிதன் அவனோட சாதியை மறைச்சி வாழும்போது ஈஸியா வாழ்ந்து விடுகிறான். ஆனால் அவன் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவன் எனத் தெரிய வரும்போது அது அவனது வாழ்க்கையை குழப்புகிறது அல்லது கஷ்டத்தில் ஆழ்த்துகிறது என்பதுதான் படத்தின் கதை.

பாரதி என்னும் இளைஞன் வண்ணக்கிளி என்னும் பெண்ணைக் காதலிக்கிறான். அவன் காதலுக்கு வந்த எதிர்ப்புகள் அனைத்தையும் தாண்டி வாழத் தொடங்கும்போது ஜாதி வெறி அந்த அப்பாவி காதலர்களை எப்படி விரட்டி விரட்டிக் கொல்கிறது என்பதை விறுவிறுப்பாக சொல்லியுள்ளேன்’’ என்கிறார் இகோர்.

- எஸ்