தேவராட்டம்அக்கா மகளுக்காக ஆட்டம் போடும் தாய்மாமன்!

குடும்பத் தலைவர் வேல ராமமூர்த்தி. ஏற்கனவே அவருக்கு ஆறு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடைக்குட்டியாக பிறக்கிறார் கெளதம் கார்த்திக். சட்டம் படித்த கெளதம், வம்புக்கு போகாதவராக இருந்தாலும் வந்த சண்டையை விடாதவர். குடும்பத்தின் மீது பாசமைழை பொழியும் சென்டிமென்ட் அடிமை. இவருக்கு சட்டம் படித்த மஞ்சிமா மீது காதல். அவரும் இவரை காதலிக்கிறார்.

அச்சமயத்தில் பணக்கார வீட்டுப் பையன் ஒருவன் கெளதம் கார்த்திக்கின் அக்கா மகளையும், அவருடைய தோழியையும் சீண்டுகிறார். சும்மாவே சீறும் கெளதம் கார்த்திக் எதிரிகளை எப்படி சூறையாடுகிறார் என்பது மீதிக் கதை. வக்கீல் கேரக்டருக்கு கெளதம் கார்த்திக் கச்சிதம். டெமோ காட்சியிலேயே தனக்கு சண்டை நன்றாக வரும் என்று நிரூபித்துவிடுகிறார். ஆக்‌ஷனைப் போல சென்டிமென்டிலும் உருக வைக்கிறார்.

அநீதிக்கு எதிராகப் பொங்கி எழுவது, மஞ்சிமாவை மகிழ்விப்பது என்று கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி ஸ்கோர் செய்கிறார். நாயகி மஞ்சிமாவுக்கு கொஞ்சமாக வேடம் கொடுக்கப்பட்டிருந்தாலும் மனதில் நிற்கிறார். சூரியும் அவ்வப்போது சிரிக்கவைத்து படத்தில் வரும் பிற மாம்ஸுகளுக்கு ஈடுகொடுக்கிறார். வேல.ராமமூர்த்தி, வில்லனாக வரும் பெப்சி விஜயன், மூத்த அக்காவாக வரும் வினோதினி வைத்தியநாதன், மாமாவாக வரும் போஸ் வெங்கட் உட்பட அனைவரும் சிறப்பு.

நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்கள் படத்துடன் ஒன்றிச் செல்வது சிறப்பு. பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் ரகம். சக்தி சரவணனின் ஒளிப்பதிவும் திலீப் சுப்பராயனின் சண்டையும் படத்திற்கு வலு சேர்க் கின்றன. ‘தேவராட்டம்’ என்ற தலைப்பு ஒரு கலையை குறிக்கிறதே தவிர அது ஜாதியை குறிக்கவில்லை என்று இயக்குநர் முத்தையா விளக்கம் கொடுத்து இந்தப் படத்தை இயக்கியிருப்பதால் படத்தில் ஜாதியை பற்றி பெரிதாகப் பேசவில்லை.

அதே சமயம், ‘400 ரூபாய் ஜீன்ஸ், 200 ரூபாய் டீ-சர்ட் போட்டுக்கிணு பொண்ணுங்களை மயக்குறானுங்க’, ‘கண்டதும் காதல் வரலாம். ஆனால் கண்டவன் மேல் தான் காதல் வரக்கூடாது’ போன்ற வசனங்கள் அரசியல் தலைவர் ஒருவரின் சாதியக் கருத்துகளை தூக்கிப் பிடிப்பது போல் இருக்கின்றன.

படத்தின் முதல் பாதியில் இருக்கும் விறுவிறுப்பும் அழுத்தமும் இரண்டாம் பாதியில் இல்லாதது படத்துக்கு தொய்வைத் தருகிறது.தற்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைப் பற்றி அழுத்தமாகவும் கூட்டுக் குடும்பத்தின் அருமை பெருமைகளையும் பேசியிருப்பதற்காகவே இயக்குநர் முத்தையாவை பாராட்டலாம்.