‘K-13’



கொலையும், கொலை நிமித்தமும்!

‘K-13’ என்கிற முகவரி எண் கொண்ட வீட்டில் நடக்கும் திடுக்.. திக்.. திக்.. சம்பவங்கள்தான் ‘K-13’ திரைப்படம்.அந்த வீட்டில் எதிர்பாராதவிதமாக ஒரு மர்ம மரணம். நாயகி ஷ்ரத்தா நாத் சடலமாகக் கிடக்கிறார். அவர் அருகில் அவருக்கு எந்தவிதத்திலும் தொடர்பு இல்லாத அருள்நிதி மயங்கிய நிலையில் இருக்கிறார்.
மயக்கம் தெளிந்ததும் தன் மீது கொலைப் பழி வந்துவிடுமோ என அஞ்சி நடுங்குகிறார். அந்த மரணம் எப்படி நடந்தது, ஆபத்திலிருந்து அருள்நிதி எப்படி தப்பித்தார் என்பதுதான் கதை. நிஜமாகவே அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத வகையில் சொல்வதுதான் படம்.

சினிமாவை நேசிக்கும் உதவி இயக்குநராக நடித்திருக்கிறார் அருள்நிதி. ஹாலிவுட் படங்களைக் காப்பியடிக்காமல் சொந்தக்கதையை மட்டுமே படமாக்க வேண்டும் என்று நினைக்கிற அரிதான வேடத்தில் கம்பீரமான தோற்றத்தில் மனதில் நிற்கிறார்.நாயகி செத்துக் கிடக்கிறாள். கொலையா, தற்கொலையா எனத் தெரியாத தடுமாற்றம், அந்த வீட்டிலிருந்து எல்லாத் தடயங்களையும் அழித்துவிட்டுத் தப்ப முயல்வது என எல்லாக் காட்சிகளிலும் பொருத்தமாக நடித்து தனிஒருவனாக படத்தைத் தாங்குகிறார்.

நாயகி ஷ்ரத்தா நாத்துக்கு அழுத்தமான வேடம். சிறப்பாகச் செய்திருக்கிறார்.ஒரே காட்சியில் வந்தாலும் சிரிக்க வைக்கும் வேலையை சரியாகச் செய்திருக்கிறார் யோகிபாபு. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், காயத்ரி ஆகியோர் இயல்பாக நடித்து தங்கள் கேரக்டருக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு திரைக்கதையின் வேகத்துக்கு நன்றாகவே ஒத்துழைப்பு கொடுத்துள்ளது. ஆரம்பக் காட்சியில், நாற்காலியில் கட்டப்பட்டிருக்கும் அருள்நிதி அதைப் போராடி சிறிது நகர்த்தும் நேரத்தில் பின்னால் ஷ்ரத்தா உட்கார்ந்திருக்கும் காட்சி சிறப்பு.

அறைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்த கேமிரா வெளியே வரும்போது பிரமிக்க வைக்கிறது.சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் காட்சிகளோடு சேர்ந்து கரைகின்றன. பின்னணி இசையும் நன்று.இயக்குநர் பரத் நீலகண்டன், முதல் படத்திலேயே பரிசோதனை முயற்சியில் இறங்கி அதில் ஜெயித்தும் இருக்கிறார். க்ளைமாக்ஸில் நடக்கும் அதிரடித் திருப்பம் எதிர்பாராதது என்றாலும் உண்மை எது என்கிற குழப்பத்தை தவிர்க்க முடியவில்லை.மொத்தத்தில்... வித்தியாசமான கதை வைத்திருப்பவர்கள் அருள்நிதியை தாராளமாக அணுகலாம் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள்.