கோலிவுட்டில் பூத்திருக்கும் புதுமொட்டு!



முன்னணி இயக்குநரின் உதவியாளர் இயக்கும் படத்தில் கமிட்டாகியுள்ளார் பார்கவி. போட்டோ ஷூட்டில் பிஸியாக இருந்தவரிடம் பேசினோம். அறிமுக நடிகைக்கே உரிய துடிப்பு தெரிகிறது பார்கவியின் பேச்சில்.

“உங்களைப் பற்றி சொல்லுங்க?”

“பார்கவின்னா சிவனுடைய பாதி பார்வதியைக் குறிப்பதாகச் சொல்வார்கள். வீட்ல ‘பாரு’னு அழைப்பார்கள். பூர்வீகம் காரைக்குடி. ஆனால் மூன்று தலைமுறையாக எங்கள் குடும்பம் பர்மாவில் வசித்தது. பிறகு கொல்கத்தாவுக்கு குடிபெயர்ந்தது. இப்போ பெங்களூருவில் வசித்து வருகிறோம். பி.ஈ முடித்துள்ளேன்.”

“உங்களுக்கு தமிழ் தெரியுமா?”

“எங்க வீட்ல உள்ளவங்களுக்கு பர்மிய மொழி, பெங்காலி, கன்னடம்னு பல மொழிகள் தெரியும். எனக்கு தமிழ் மட்டும்தான் தெரியும்.”
“சினிமாவுக்கு எப்படி?”

“ப்ளஸ் டூ படிக்கும்போது மாடலிங் துறை மீது ஆர்வம் ஏற்பட்டது. காலேஜ் படிக்கும் போது தியேட்டர் ஷோ, ராம்ப் ஷோ பண்ண ஆரம்பித்தேன். காலேஜ் முடித்த பிறகு என்னுடைய கேரியர் சினிமாதான் என்று முடிவு பண்ணினேன்.”

“வீட்ல என்ன சொன்னாங்க?”

“எவ்வளவு பெரிய பணக்காரக் குடும்பமாக இருந்தாலும் சினிமா என்று வரும் போது எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். அப்படி எனக்கும் வீட்ல எதிர்ப்பு வந்தது. ஏன்னா, நான் ஐ.டி.துறையிலோ அல்லது வெளிநாட்டிலோ செட்டிலாக வேண்டும் என்பதுதான் பெரியவர்களின் விருப்பமாக இருந்தது. என்னுடைய ஸ்டேஜ் ஷோவில் எனக்கு கிடைத்த பாராட்டு பெற்றோர்களின் மனதில் நம்பிக்கையைக் கொடுத்தது.”

“சினிமாவுக்காக கற்றது?”

“சினிமாவுக்கு என்று கற்றது எதுவுமில்லை. டெம்ப்ளேட்டா சில விஷயங்களை கற்றுக் கொண்டு கேமரா முன்னாடி நிற்பதைவிட இயக்குநர் சொல்வதை ஸ்பாட்ல பண்ணிக் காட்டுவதில்தான் உண்மையான திறமை இருக்கு என்று நினைக்கிறேன்.

எனக்கு கிளாசிக்கல், வெஸ்டர்ன், ஸ்டேஜ் அனுபவம் இருப்பதால் சினிமாவில் ஜெயிக்கமுடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த வகையில் என்னை நம்பி ஒரு வேடம் கொடுக்கப்படும்போது இயக்குநரின் நம்பிக்கை வீண் போகாது.”

“கனவு வேடம் ஏதாவது...?”

“தனிப்பட்ட விதத்தில் கனவு வேடம் என்று எதுவுமில்லை. எந்த வேடமாக இருந்தாலும் மக்களைச் சென்றடைய வேண்டும். ஒரு பாட்டுக்கு வந்தோம், போனோம் என்றில்லாமல் அழுத்தமான வேடங்களில் நடித்து மக்கள் மத்தியில் இடம் பிடிக்கவே ஆசை. அந்த வகையில் எல்லா கேரக்டரும் பண்ணுவேன்.”

“பிடிச்ச நடிகை?”

“பாலிவுட்ல கங்கணா ரனாவத் பிடிக்கும். ‘பேஷன்’ என்ற படத்தில் அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கும். உடனே கங்கணா மாதிரி துணிச்சலா க்ளாமர் பண்ணுவீங்களா என்று கேட்க வேண்டாம். அதற்கு இன்னும் நிறைய டைம் இருக்கு.”

“பிடிச்ச நடிகர்?”

“தல. ‘விஸ்வாசம்’ படம் பார்க்க வெயிட்டிங்.”

“யாருடைய டைரக்‌ஷன்ல நடிக்க ஆர்வமா இருக்கீங்க?”

“இப்போது எல்லா இயக்குநர்களும் புதுசா கதை பண்ணுகிறார்கள். அவர்கள் எல்லோருடைய  படத்திலும் நடிக்கணும். ‘இமைக்கா நொடிகள்’, ‘ராட்சசன்’ ‘மேற்குத் தொடர்ச்சி மலை’, பரியேறும் பெருமாள்’ போன்ற திறமையான இயக்குநர்கள் கோடம்பாக்கத்துக்கு பெருமை சேர்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.”

“சமீபமாக தலையெடுத்திருக்கும் மீடூ விவகாரம் பற்றி?”

“பெண்களுக்கு எதிராக நிறைய கொடுமைகள் நடக்கிறது. இப்போது புகார் வாசித்துள்ள பிரபலங்கள் தொடக்க காலத்தில் தாங்கள் பாதிக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். நானும் ஆரம்பக் காலத்தில்தான் உள்ளேன். ஆனால் அதுபோன்ற பிரச்சினைகளை சந்தித்ததில்லை. பெண்கள் தைரியமா இருக்கணும். நான் அந்த இடத்தில் இருந்தால் தப்பு நடக்க இடம் கொடுக்கமாட்டேன்.”

- ராஜா