எந்த தியேட்டரில் சோடா விற்றாரோ, அதே தியேட்டரில் இவர் நடித்த படம் ரிலீஸ்!



‘மேற்குத் தொடர்ச்சி மலை’, ‘பரியேறும் பெருமாள்’ வரிசையில் மண்ணின் மைந்தர்களின் வாழ்க்கையை யதார்த்தமாக பதிவுசெய்து விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்ற படம் ‘வன்முறைப் பகுதி’. அதில் ஹீரோயினுடைய அண்ணனாக நடித்து கவனம் ஈர்த்தவர் ராஜா. அவரிடம் பேசினோம்.

‘‘சொந்த ஊர் திண்டுக்கல் பக்கத்திலுள்ள ஆடலூர் கிராமம். சாதாரண விவசாயக் குடும்பத்திலிருந்து சினிமாவுக்கு வந்துள்ளேன். ப்ளஸ் டூ முடிக்கும்போது அப்பா தவறிவிட்டதால் குடும்பச் சுமை காரணமாகத் தொடர்ந்து படிக்க முடியவில்லை.

திண்டுக்கல்லில் உள்ள ஒரு தியேட்டரில் சோடா விற்பனை, போண்டா விற்பனை, டிக்கெட் கிழிக்கிற வேலை என்று பல வேலைகளைச் செய்தேன். அப்போ எனக்கு சம்பளம் 1200. என்னுடைய உழைப்பை கவனித்த முதலாளி பிறகு 2000 ரூபாயாக சம்பளத்தை உயர்த்தினார்.

அந்த சம்பளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்ஸி. (ஐ.டி) முடித்தேன். டிகிரி முடித்ததும் பால் வியாபாரம், தண்ணீர் கேன் வியாபாரம் என்று சிறியளவில் தொழில் பண்ணினேன்.

தியேட்டரில் வேலை செய்யும் போது ‘ஆட்டோ கிராப்’ படம் பார்த்தேன். அது எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை கொழுந்துவிட்டு எரிந்தது. ஆனால் குடும்பச் சுமையால் என்னால் அதற்கான முயற்சியில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை.

அந்த சமயத்தில் தான் ‘வன்முறைப் பகுதி’ படத்தின் இயக்குநர் நாகராஜ் சாரின் அறிமுகம் கிடைத்தது. அவரிடம் என்னுடைய நடிப்பாசையை சொல்லி வாய்ப்பு கேட்டேன். அவரும் படம் துவங்கும் போது அழைப்பதாக சொன்னார்.

சொன்னபடி என்னை அழைத்து ‘வன்முறைப் பகுதி’யில் ஹீரோயினின் அண்ணன் கேரக்டர் கொடுத்தார். படத்துல நடித்த அத்தனை பேரும் புதுமுகம். ஆனால் எங்களிடம் சிறிதளவும் எரிச்சல் காண்பிக்காமல் வேலை வாங்கினார். நாங்க ஸ்கிரீன்ல நல்லா தெரியணும் என்பதற்காக எங்களுக்காக அதிகம் உழைத்தார்.

ஹீரோவும் நானும் சேற்றில் கட்டிப்புரண்டு சண்டை போடும் காட்சியை ஆண்டிப்பட்டி பக்கத்துல உள்ள ஒரு கண்மாயில் படமாக்கினார்கள். அந்தக் காட்சியை இரண்டு நாட்கள் எடுத்தார்கள். களிமண்ணுடைய தன்மை குளுமை. களி மண் சகதி கொஞ்ச நேரம் உடம்பில் இருந்தாலே உடல் நடுங்க ஆரம்பித்துவிடும். சகதி உடம்போட இருக்கும் போது சாப்பிடுவது உட்பட சிரமங்கள் அதிகம். அந்தக் காட்சியை தியேட்டரில் பார்த்தபோது கஷ்டம் பறந்து போய்விட்டது.

‘வன்முறைப் பகுதி’ படம் பார்த்துவிட்டு நிறையப் பேர் பாராட்டினார்கள். அதில் முக்கியமான பாராட்டு நான் வேலை செய்த தியேட்டர் ஆபரேட்டரின் பாராட்டு. போண்டா, பஜ்ஜி விற்பனை செய்த அதே தியேட்டரில் என்னுடைய படம் ஓடியபோது நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. படம் பார்த்துவிட்டு வெளியே வந்த போது, அன்று என்னுடன் வேலை பார்த்த தியேட்டர் ஊழியர்கள் பாராட்டியபோது மெய் சிலிர்த்தது. படம் நல்லா இருந்ததாக சொன்னதோடு சீக்கிரம் அடுத்த படம் எடுங்க என்று வாழ்த்தினார்கள்.

சினிமாவுக்கு வர விரும்பும் பெரும்பாலானவர்கள் லீட் ரோலில்  நடிக்கணும்னு ஆசைப்படுவார்கள். எனக்கும் அப்படியொரு ஆசை இருக்கு. ஆனால் அதை நானாக எடுத்துக்கொள்ள முடியாது. அது இயக்குநர்களின் கையில் இருக்கிறது. அதுவரை கிடைக்கும் ரோலில் நடித்து நல்ல பேர் வாங்குவதுதான் என்னுடைய நோக்கம்.

நடிப்பைப் பொறுத்தவரை சேரன் சார், விஜய் சேதுபதி ஆகிய இருவர்தான் என்னுடைய ரோல்மாடல். இருவருடைய நடிப்பிலும் மிகைப்படுத்தாத நடிப்பைப் பார்க்கலாம். எனக்கும் அதே ரூட்ல டிராவல் பண்ணுவதுதான் பிடிக்கும்.என்னுடைய கனவு நிறைவேறுவதற்கு அம்மா, என் மனைவி காயத்ரிதேவி உறுதுணையாக இருக்கிறார்கள்.

சொந்த அத்தை மகள் என்பதால் மனைவிக்கு என்னிடம் பாசம் அதிகம். இது வேணும் அது வேணும்னு அடம் பிடிக்காம, என்னுடைய லட்சியத்தை உணர்ந்தவராக ‘கண்டிப்பா நீங்க ஜெயிப்பீங்க’ என்று அவர்தான் என்னை தினமும் ஊக்கப்படுத்தி வருகிறார். எங்களுக்கு ப்ரணவ் விஜய்னு ஒரு பையன் இருக்கிறான். எனக்கு கம்ப்யூட்டர் அசெம்பிளிங் வேலை தெரியும். சினிமா வாய்ப்பு இல்லாதபோது அதில் வரும் வருமானத்தில்தான் வண்டி ஓடுகிறது’’ என்கிறார்  ராஜா.

- எஸ்