களவாணி மாப்பிள்ளை



இது ஒரு ‘கார்’காலம்!

சத்யராஜ், சரத்குமார் உள்ளிட்ட 90களின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த ஏராளமான படங்களை இயக்கிய மணிவாசகத்தின் மகன் காந்தி மணிவாசகம் இயக்கியிருக்கும் படம்.சிங்கிள் மதர் ரேணுகாவின் ஒரே மகன் தினேஷ். ‘இவனுக்கு வண்டியிலே கண்டம்’ என்று ஜோதிடர் சொல்லியதால் வண்டிப் பக்கம் போகாமலேயே வளருகிறார் தினேஷ்.

தொழில் அதிபர் தேவயானி-ஆனந்த்ராஜ் தம்பதியின் மகள் அதிதி மேனன். நாயகியைச் சந்திக்கும் முதல் சந்திப்பிலேயே மனதைப் பறி கொடுக்கிறார் தினேஷ். இரு குடும்பத்துக்கிடையே பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் மகளின் விருப்பத்துக்காக  திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கிறார் தேவயானி.

அதே சமயம், பொய் பேசுபவர்களை மன்னிக்க முடியாத குற்றவாளியாகக் கருதும் தேவயானி, தனக்கு கார் ஓட்டத் தெரியும் என்று பொய் சொன்னதற்காக தனது கணவர் ஆனந்தராஜை அடிமையாகவே வைத்திருக்கிறார்.

தினேஷும் இதே விஷயத்தில் தேவயானியிடம் சிக்கிக்கொள்கிறார். பைக்கே ஓட்டத் தெரியாத தினேஷ் கார் ஓட்டத் தெரியும் என்று தேவயானியிடம் பொய் சொல்கிறார். பொய்யை மறைத்து அதிதி மேனனை எப்படி கரம் பிடிக்கிறார் என்பது மீதிக்கதை.

களவாணி மாப்பிள்ளை கேரக்டரில் வெளுத்து வாங்கியிருக்கிறார் தினேஷ். இவருக்கான கதைக்களம். புகுந்து விளையாடியிருக்கிறார். முந்தைய படங்களைப் போலவே நாயகியைச் சுற்றிச் சுற்றி காதலிக்கிறார்.

காதலியுடன் அடிக்கும் லூட்டி செம பியூட்டி.சீமாட்டியின் மகளாக அதிதி மேனன். கண்களை உருட்டி, காதல் பாஷை பேசியிருக்கிறார். காதலைச் சொல்லாமல் ஏங்குவதும், காதலுக்கு க்ரீன் சிக்னல் கிடைத்த பிறகு கலக்கும் காட்சிகளும் அருமை. அளவான காட்சிகள் என்றாலும் மனதில் நிறைகிறார்.

தொழில் அதிபராக வரும் தேவயானி நம்மை நன்றாகவே கவர்கிறார். அலட்டலாக வந்து அருமையான நடிப்பைத் தந்து கதையின் நாயகியாக மாறியிருக்கிறார்.ஆனந்தராஜ், சாம்ஸ், முனீஸ்காந்த் ஆகியோரது கூட்டணி சிரிக்க வைக்கும் வேலையை சரியாகச் செய்துள்ளது. ரேணுகா, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், மனோபாலா ஆகியோர் கொடுத்த வேலையைக் கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.

சரவணன் அபிமன்யுவின் ஒளிப்பதிவில் கிராமத்துக் காட்சிகள் அருமை. என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். காதலையும் காமெடியையும் நம்பி எடுத்திருக்கிறார் காந்தி மணிவாசகம். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். சில காட்சிகள் பழகியது போல் இருந்தாலும், இரண்டாம் பாதியில் ட்விஸ்டுகளைக்  கொடுத்து படத்தை கரை சேர்த்திருக்கிறார்.