கனகாம்பரம் இயக்குநர் - பாடலாசிரியர் ஏகாதசி



டைட்டில்ஸ் டாக் 91

பூக்கள் பூப்பது தலையில் சூடுவதற்கு மட்டுமல்ல. நான் இயக்கும் படத்துக்கு நூற்றுக்கணக்கான மலர்களின் பெயர்களை பரிசீலித்து, அதில் கடைசியாக வைத்தது ‘கனகாம்பரம்’.
உச்சரிக்கும்போதே சிலிர்ப்பு தரும் பெயர் இது.பூக்களில் மல்லியும், கனகாம்பரமும் இரட்டைக் குழந்தை மாதிரி. இப்போது கனகாம்பரம் பயன்பாடு குறைவாக இருந்தாலும், இவ்விரு பூக்களையும் சேர்த்து பின்னுவதை கிராமப்புறங்களில் பார்க்கலாம். அந்தக் காட்சிகள்தான் ‘கனகாம்பரம்’ என்ற படத்தை இயக்குவதற்கு நம்பிக்கையைக் கொடுத்தது.

தமிழ்நாட்டுக்கு இணையாக ஆந்திர மக்களுக்கும் பிடித்த பூ இது. இலங்கை, மலேஷியா போன்ற நாடுகளிலும் இந்த பூ வகையை பார்க்கமுடியும். காவி, இளம் சிவப்பு, மஞ்சள் என்று மூன்று வண்ணத்தில் பூக்கும்.எல்லா பூக்களுக்கும் எல்லா மகத்துவமும் கிடைத்துவிடாது. குரோட்டன்ஸ் - செல்லப் பிராணிகள்  போல் எல்லா வீடுகளிலும் இந்தப் பூக்களை வளர்ப்பதுண்டு.

வணிகப் பயன்பாடு உள்ள பூக்களில் இந்தப் பூவுக்கு முக்கியத்துவம் உண்டு.எல்லா சீசனிலும் பூக்கும். விவசாயிகளின் பொருளாதார சுமையை தகர்க்கக்கூடிய இடத்தில் இந்தப் பூவுக்கு முக்கிய பங்கு உண்டு. ‘கனகாம்பரத்தை நட்டா போதும், கடன் வாங்கித்தான் காலத்தை ஓட்டணும்கிற நிலைமையை மாத்தி, கைச் செலவுக்காவது காசு கிடைச்சிக்கிட்டே இருக்கும்’ என்பது விவசாயிகளின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

மூன்று நான்கு இதழ்கள் இருக்கும். ஆனால் கொத்து கொத்தாகப் பூக்கும். விதை முதிர்ச்சி அடையும்போது இருக்கும் இடத்திலேயே வெடித்துச் சிதறி முளைக்க ஆரம்பிக்கும். பெரியளவில் தண்ணீர் தேவைப்படாது. காடு, பாறை போன்ற பகுதிகளிலும் வளரக்கூடியது.

அடிமைத்தனத்தில் இருப்பவர்கள் எழுந்திருப்பதற்கான போர்க்குணம் உடைய குறியீடாக கனகாம்பரத்தை என்னுடைய படத்தில் சொல்லியுள்ளேன்.பூக்களைப் பொறுத்தவரை சில பூக்கள் வழிபாட்டுக்கு என்றும், சில பூக்கள் பெண்கள் சூடிக் கொள்வதற்கும் என்று பிரித்து வைத்திருப்பார்கள். கனகாம்பரத்தைப் பொறுத்தவரை வழிபாடு, பெண்கள் என்று பேதமில்லாத இடத்தில் உள்ளது.

பூக்களில் இது மென்மையான பூ. மற்ற பூக்களைப் போல் கையாள முடியாது. மிக நுட்பமாகக் கையாள வேண்டும். கிராமப்புறங்களில் எளிமையான பெண்கள் அந்தப் பூவை சூடுவது தனி அழகு. சிரிக்கும் போது மல்லியின் வெள்ளை நிற பற்கள் மேட்ச்சிங்காக இருக்கும்.

வசதியான பெண்கள் பட்டு, நகை என்று தங்களை அலங்காரம் செய்துகொள்வார்கள். ஆனால் ஏழை மக்களுக்கு வீட்டுத் தோட்டத்தில் பூக்கும் இந்தக் கனகாம்பரம் தனி அழகைக் கொடுக்கும். தங்க நகையை விட பூவுக்கு அதிக சக்தி உண்டு. பெண்களுக்கு இயல்பாகவே E.S.P திறன் அதிகம். இது பூக்கள் அணிவதால் மேம்படுகிறது. முதுகிற்குப் பின் யாரேனும் பார்த்தாலும் அதை அறியும் கூருணர்வை பூக்கள் தருகிறது. இது இறைவனின் கொடை என்றே சொல்லலாம்.

நினைவுகள்தான் இலக்கியம் என்று சொல்வார்கள். இலக்கியம் என்பது சிறுவயது ஞாபகங்கள். என் குழந்தைப் பருவம் சுவாரஸ்யமானது. துள்ளித் திரிந்த பள்ளி நாட்களில் என்னுடைய தாத்தா வெத்தலையை மென்று கொடுப்பார். அதன் சுவையும் நிறமும் தனித்துவமாக இருக்கும். அது எனக்கு கனகாம்பரம் ஞாபகத்தைக் கொடுக்கும்.

கனகாம்பரம் இன்று விளைச்சல் குறைவு. காதலியிடம் பேசும்போது காதலின் வலி குறைவாக இருக்கும். காணாத நேரங்களில் வலி அதிகமாக இருக்கும். அதுபோல் உள்ள இடத்தில் இன்று கனகாம்பரம் இருக்கிறது.

இன்று கிராமங்களிலும் நவநாகரீக பெண்களை பார்க்க முடிகிறது. சில காலங்களுக்கு முன் பெண்பிள்ளைகள் இரட்டை ஜடை பின்னி பூச் சூடி பள்ளிக்குச் செல்வார்கள். ஜல்லிக்கட்டு விளையாட்டுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பூமாலை அணிவதுண்டு. பழைய படங்களில் ஆண் கதாபாத்திரங்கள் கூட பூச் சூடுவதை போல் சித்தரித்திருக்கிறார்கள்.

பூச்சூடுவது நம்முடைய பாரம்பரிய வழக்கம். நம் முன்னோர் கற்பித்த ஆரோக்கியமான பழக்கம் இது. பொதுவாகவே இன்று பூக்களின் பயன்பாடே குறைந்துவிட்டது. நம்முடைய உணவு, உடை என்று சகலத்திலும் மேற்கத்திய கலாச்சாரம் பரவிவிட்டது.

அதனால், பகட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நோய்களை வரவழைத்தது தான் மிச்சம். எத்தனையோ பூக்கள் உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கிறது. அதில் கனகாம்பரம் பூ, தலைவலி மற்றும் தலை பாரத்தை சரி செய்ய உதவும்.

80, 90 களில் பெண்கள் முகம் கழுவி பொட்டு வைத்தாலே தாவணி தாஜ்மஹால் போல் ஜொலித்தார்கள். இப்போது பூ வைக்கவே இடம் இல்லாதளவுக்கு தலைமுடியை நேராக்கி வைத்திருக்கிறார்கள்.பூக்கள் நல்ல குணத்தை தக்க வைக்க உதவுகிறது. பொறுமையானவர்கள் மட்டுமே பூ பறிக்க முடியும். பூ பறிக்க கற்றுக் கொள்வது பொறுமையை வளர்க்கும். பெண்கள் பூச்சூடும்போது  பெண் தன்மையை மேன்மைப்படுத்தும்.

 தலையில் பூ வைப்பது சில நன்மைகளைச் செய்கிறது. பூவில் உள்ள நுட்பமான பிராண ஆற்றல் மூளையால் கவரப்பட்டு நாளமில்லா, நாளமுள்ள சுரப்பிகளை நன்றாக இயங்க வைக்கிறது. பூவின் பிராண ஆற்றல் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ஒரு விஷயத்தை பல கோணங்களில் சிந்திக்க உதவும். பூவின் மணம் உடலிலுள்ள செல்களுக்கு புத்துணர்வு கொடுக்கும்.

பெண்களுக்கு பூவையர் என்று ஒரு சொல் உள்ளது. அதாவது பூவைப் போல் மலர்ந்த முகத்துடன் இருப்பவர்கள். தலையில் பூ வைப்பவர் மற்றும் வைக்காதவர் இருவரையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தெரியும். இப்படிப் பேசுவதால் பழமைவாதி என்ற முடிவுக்கு வரவேண்டாம். இவையெல்லாம் நாம் இழந்தவைகள்.

ஒரு காலத்தில் அடித்தட்டு மக்கள் கூழ் குடித்தபோது கூழ் குடிக்கிற பசங்க என்று ஏளனமாகப் பார்த்தார்கள். இப்போது வீதிக்கு வீதி தள்ளுவண்டியில் கூழ் விற்பதும் அதை லேப் டாப் ஆசாமிகள் குடிப்பதையும் பார்க்க முடிகிறது. காரணம், மருத்துவர்கள் கம்பு, ராகி போன்ற தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதும் கூழ் குடித்து பூங்காக்களில் நடைப் பயிற்சி செய்கிறார்கள்.

முன்னோர்களின் ஆலோசனை இளைஞர்களுக்கு வேப்பங்காய் போல் கசக்கிறது. கூன் வீழ்ந்த பாட்டி சொல்வதைவிட கூகுள் சொல்வதைத் தான் கேட்கிறார்கள்.மனிதாபிமானம் இல்லாமல் போய்விட்டது.

தாத்தா, பாட்டி முத்தம் கொடுத்தால் நாற்றம் வருது என்று சொல்லி விலகிச் செல்கிறார்கள் குழந்தைகள். தாத்தா, பாட்டியின் நேசத்தை இந்தத் தலைமுறை இழந்துள்ளது. பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு நாகரீகம் என்ற பெயரில் வீட்ல புருஷன், பெண்டாட்டி சண்டை, சச்சரவுடன் வாழ்கிறார்கள்.

பிளாஸ்டிக் மலர்கள் அழகு தரும். ஆனால் அது சிரிக்காது. ஏன்னா அதற்கு உணர்ச்சிகள் கிடையாது. பிளாஸ்டிக் பூக்கள் போல்தான் இன்று நம் வாழ்க்கையும் மாறிவிட்டது. அப்படிப்பட்ட மனநிலைக்கு எப்போதோ மாறிவிட்டோம். பிளாஸ்டிக் பூவாக இல்லாமல் இயற்கையாக பூத்துக் குலுங்கும் மென்மையான பூ மாதிரி புதுப்பித்து வாழவேண்டும். இதைத்தான் மானுடம் வேண்டுகிறது.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)