பில்லா பாண்டி



தல தீபாவளி!

விநியோகஸ்தர், தயாரிப்பாளர், வில்லன் என்று பல அவதாரங்கள் எடுத்த ஆர்.கே.சுரேஷ்   ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் படம்.நிஜ வாழ்க்கையில் தீவிர அஜித் ரசிகரான ஆர்.கே.சுரேஷ், சினிமாவிலும் தீவிர அஜித் ரசிகராகவே நடித்திருக்குக்கும் இந்த ‘பில்லா பாண்டி’ படத்தின் கதை என்னவோ, தமிழ் சினிமாவில் சக்கையாகப் பிழிந்தெடுத்த முக்கோணக் காதல் கதை என்றாலும், அதற்காக ஹீரோ செய்யும் தியாகங்கள் டச்சிங் பாயிண்ட்.

ஒரு சிறிய கிராமத்தில் கட்டடம் கட்டும் கொத்தனார் வேலை செய்கிறார் ஆர்.கே.சுரேஷ். அவருக்கு ஒரு முறைப்பெண். பெற்றோர் எதிர்ப்பை மீறி நாயகனைத் திருமணம் செய்யப் போராடுகிறார். நாயகன் கட்டடம் கட்டப் போன இடத்தில் அவருடைய நற்குணங்களைப் பார்த்து அவர் மீது காதல் கொள்கிறார் ஒரு பெண். அதன்விளைவாக ஏற்படும் சிக்கலில் அப்பெண்ணின் மனநலம் பாதிக்கப்படுகிறது. அவரைப் பாதுகாக்கும் பொறுப்பு நாயகனிடம் வந்து சேருகிறது.

முறைப்பெண்ணா, தன்னைக் காதலித்த பெண்ணின் பாதுகாப்பா என்கிற சிக்கலான கட்டத்தில் சிக்குகிறார் நாயகன். அதன்பின் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை. தல தல என்று அஜித் புராணம் பாடும் நாயகனாக ஆர். கே.சுரேஷ். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் சண்டை மட்டுமில்லாமல் எமோஷனல் காட்சிகளிலும் நன்றாக நடித்திருக்கிறார்.

முறைப்பெண்ணாக வரும் சாந்தினி மற்றும் இன்னொரு நாயகி சிந்துஜா ஆகியோரும் சிறப்பு. மனநலம் பாதிக்கப்பட்ட வேடத்தில் நன்றாக நடித்திருக்கிறார் சிந்துஜா.தம்பிராமையா சிரிக்க வைக்கிறார். மாரிமுத்து கொடுத்த வேடத்துக்குப் பொருத்தமாக நடித்து நல்ல பெயர் வாங்குகிறார்.

ஜீவனின் ஒளிப்பதிவு நன்று. இளையவனின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. எம்.எம்.எஸ்.மூர்த்தியின் கதை திரைக்கதை வசனத்தில் பழமையின் வாசம் இருந்தாலும் சுவாரஸியமாக நகர்த்திச் செல்கிறார்.

இயல்பாக ஒரு கதாநாயகனுக்கு இருக்கும் நற்குணங்களுக்கு அஜித் முலாம் பூசி அவருக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.ஒரே ஒரு காட்சியில் வருகிற இயக்குநர் ராஜ்சேதுபதி சிரிக்க வைப்பதோடு எல்லாவற்றையும் எளிமையாக எடுத்துக்கொள்வது நல்லது என்றும் சொல்லியிருக்கிறார்.இந்த தீபாவளிக்கு அஜித் படம் வராத குறையை, அவரது ரசிகர்களுக்கு ‘பில்லா பாண்டி’ தீர்த்து வைத்திருக்கிறது.