கவர்ச்சியான டைட்டிலில் குடும்பப்படம்!



‘‘இன்று தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள்தான் தியேட்டர்களுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதை மனதில் வைத்துதான் இந்தப் படத்தை இயக்கியுள்ளேன்’’ என்கிறார் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகேஷ். படத்தின் இறுதிக் கட்ட வேலைகளில் இருந்தவரிடம் பேசினோம்.

“தலைப்பே கிளுகிளுப்பா இருக்கே?”

“ஜாலியா ஒரு படம் பண்ணணும் என்று துவங்கிய படம்தான் இது. இப்போ ஒரு படத்துக்கு டைட்டில் கவர்ச்சியாக இருந்தால் தான் ரசிகர்களின் பார்வை அந்தப் படத்தின் மீது விழுகிறது. தமிழ் சினிமாவுல ஆக்‌ஷன் காமெடி, ஃபேமிலி காமெடி, லவ் காமெடி ஜானர்ல நிறைய படம் வந்திருக்கு. அந்த வரிசையில் இது கிளாமர் காமெடி.

கிளாமர்ல எல்லை மீறாத படமா இருக்கும். தலைப்பை பார்த்துட்டு ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’, ‘ஹரஹர மஹாதேவகி’ மாதிரியான அடல்ட்ரி காமெடி படமா என்று கேட்கிறார்கள். அப்படியான படம் இது இல்லை. ஆனால் இந்தப் படத்தை ஃபேமிலியா சேர்ந்து என்ஜாய் பண்ணி பார்க்கலாம்.”

“படத்தோட கதை?”

“நான்கு டீம் ஹீரோவை துரத்துகிறது. அந்தத் துரத்தலுக்கான காரணம் என்ன, தடைகளைத் தாண்டி ஹீரோ எப்படி ஹீரோயினை லவ்வுகிறார் என்பதை கலகலப்பாக சொல்லியுள்ளோம். முகம் சுளிக்க வைக்கிற காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனங்களோ இல்லாமல் எல்லோரும் ரசிக்கிற மாதிரியா சுவாரஸ்யமா திரைக்கதை அமைத்துள்ளேன்.”

“என்ன சொல்றார் உங்க ஹீரோ விமல்?”

“விமலுக்கு பக்கத்து வீட்டுப் பையன் மாதிரியான லுக். கதை எழுதும்போதே விமல் மாதிரி ஒருத்தர் நடித்தால் நல்லா இருக்கும் என்று நினைத்துதான் எழுதினேன். கதை எழுதி முடித்தவுடன் முதல் சாய்ஸாக விமலை சந்தித்து கதை சொன்னேன். முதல் சந்திப்பே வெற்றியில் முடிந்ததால் அடுத்த ஹீரோவை தேடிச் செல்லும் நிலை ஏற்படவில்லை. இது ஏன் விமலுக்கு பொருத்தமான கதையாக இருந்தது என்றால் இந்த பேட்டர்ன்ல அவர் படம் பண்ணியிருந்ததால் அவருக்கான கதையாகவே இருந்தது.

நான் அசோசியேட்டாக ஏராளமான படம் பண்ணியிருக்கிறேன். அதில் பிரபல ஹீரோக்கள்  படங்களும் அடக்கம். விமலிடம் ஏழு மணிக்கு ஃபர்ஸ்ட் ஷாட் என்றால் ஆறு மணிக்கு ரெடியா நிற்பார். ஒரு படத்துக்கு அவர் செலுத்துகிற இன்வால்வ்மென்ட் அதிகம். தனியா கேரவன் கொடுத்திருந்தாலும் எப்பவும் ஸ்பாட்லேயே இருப்பார். நடிப்பைப் பொறுத்தவரை விமல் முடிந்தளவுக்கு கேரக்டருக்கு நியாயம் பண்ணுவார்.  கூத்துப்பட்டறையின் தயாரிப்பு, உதவி இயக்குநராக சில காலம் வேலை பார்த்த அனுபவம் என்று சினிமா நாலெட்ஜ் அதிகம் என்பதால் ஸ்கிப்ரிட்டோட மூட் பிடித்து நடிப்பதில் கில்லாடி.”

“லட்டு மாதிரி இரண்டு ஹீரோயின்கள். இருவரையும் எப்படி சமாளித்தீர்கள்?”

“ஆஷ்னா ஜாவேரி, பூர்ணா என இரண்டு ஹீரோயின்கள். இருவருமே காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் மாதிரிதான் ஒருவருக்கு ஒருவர் பழகினார்கள். சந்தானம் நடித்த படங்களில் நான் வேலை செய்திருக்கிறேன். அப்போது ஆஷ்னாவைப் பற்றி சந்தானம் பெருமையாகச் சொன்னார். சந்தானம் நிறைய ஹீரோயின்களுடன் வேலை பார்த்தவர் என்பதால் அப்போது அதை நான் பெரிசா நினைக்கவில்லை.

ஆனால் என் படத்துல வேலை செய்யும்போது ஆஷ்னாவின் இன்வால்வ்மென்ட்டைப் பார்க்க முடிந்தது. இண்டஸ்ட்ரியில் ரஜினி சாரின் இன்வால்வ்மென்ட் பற்றி நிறைய சொல்வாங்க. அந்த மாதிரி ஆஷ்னாவைச் சொல்லலாம். ஷார்ட்டா சொல்வதா இருந்தால் ‘பார்ன் ஃபார் சினிமா’ என்றே சொல்லலாம். ‘வசீகரா..’ மாதிரி ஒரு பாடல் இருக்கு. அந்தப் பாடலுக்காக ஆஷ்னா இளைஞர்களால் கொண்டாடப்படுவார்.

பூர்ணா, சினிமாவுக்காகவே வாழ்கிற ஆர்ட்டிஸ்ட்.  ஆஷ்னா, பூர்ணா மாதிரியான நடிகைகள் இருந்தால் 40 நாள் ஷெட்யூலை 30 நாளில் முடித்துவிடலாம். அவர்களால் எங்கேயும் படப்பிடிப்பு தடைப்பட்டதில்லை. கிராமங்களில் படமாக்கப்பட்ட போது கேரவேனைத் தேடிச் செல்லாமல் அருகில் உள்ள வீடுகளில் உடை மாற்றிக் கொண்டு வந்தார்கள். அந்த மாதிரி நடிகைகள் சினிமாவில் அபூர்வம்.”

“நிறைய நடிகர்கள் நடிச்சிருக்காங்க?”

“கமர்ஷியல் கதை என்றாலே நடிகர்களின் பட்டாளத்தை தவிர்க்க முடியாது. ஆனந்த்ராஜ் சார் வில்லனாக நடித்தபோது எப்படி பேர் வாங்கினாரோ அதுபோல இப்போது சிரிப்பு வில்லனா, குணச்சித்திர நடிகராக பின்னியெடுக்கிறார். அவர் இன்றளவும் ஃபீல்டுல நிலைத்திருக்கக் காரணம் அவர் சினிமாவை புரபஃஷனலா பார்க்கிறார்.

நேரம் தவறாமை, கால்ஷீட் குளறுபடி இல்லாமல் பார்த்துக் கொள்வது என்று சகல விஷயங்களிலும் தயாரிப்பாளருக்கு பக்கபலமாக இருக்கிறார். அந்த வகையில் இந்தப் படத்துக்கு ஆனந்த்ராஜ் சார் கொடுத்த ஒத்துழைப்பு அதிகம்.  சிங்கம்புலிக்கு ஹீரோவுக்கு இணையான வேடம் என்று சொல்லலாம். மன்சூரலிகான், கே.ராஜன், ‘இமைக்கா நொடிகள்’ வெற்றிவேல் ராஜா, ஆத்மா என அனைவரின் பங்கும் முக்கியமா இருக்கும்.”

“டீசருக்கு யூ-ட்யூப்லே பெரிய வரவேற்பு இருக்கே?”

“அதிலிருந்தே நீங்க டெக்னிக்கல் டீமின் உழைப்பை பார்க்க முடியும். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். பாலசுப்ரமணியெம் ஸ்கூலிலிருந்து வந்தவர். சந்தானம் ஹீரோவா பண்ற படங்களுக்கு இவர்தான் கிட்டத்தட்ட ஆஸ்தான கேமராமேன். அதுமட்டுமில்ல, நாங்க இருவரும் உதவியாளாராக இருக்கும் போதே நல்ல நண்பர்கள். எங்களுக்குள் புரிதல் இருந்ததால் குழப்பம் இல்லாமல் படமாக்க முடிந்தது. நடராஜன் சங்கரன் மியூசிக் பண்றார். ஏற்கனவே ‘கப்பல்’, ‘மூடர் கூடம்’ போன்ற படங்கள் பண்ணியவர். பாடல்களை தாறுமாறாகக் கொடுத்திருக்கிறார். எல்லாப் பாடல்களையும் விவேகா எழுதியுள்ளார்.

சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வான் தயாரித்திருக்கிறார்கள். சர்மிளா மேடம் கன்னடத்தில் 40 படங்களில் நாயகியாக நடித்தவர். ‘சஜினி’ என்ற கன்னடப் படத்தில்  நான்தான் அவரை நாயகியாக அறிமுகம் செய்தேன். அப்போது அவர், படம் தயாரித்தால் என்னை வைத்து தயாரிப்பதாகச் சொன்னார். இது வழக்கமா எல்லா சினிமாக்காரரும் சொல்றதுதானே என்று அப்படியே விட்டுவிட்டேன்.

ஆனால், சர்மிளா படம் தயாரிக்க முடிவு எடுத்தபோது மறக்காமல் என்னை அழைத்து இந்தப் படத்தை கொடுத்தார். இந்தப் படத்தின் சில காட்சிகள், பாடல்களை லண்டனில் எடுத்தோம். தயாரிப்பாளர் சர்மிளா லண்டனில் பிறந்து வளர்ந்தவர். அங்கு அவருக்கு செல்வாக்கு அதிகம் என்பதால் சாப்பாடு உள்பட எதிலும் குறை இல்லாமல் பார்த்துக் கொண்டார்.

லண்டனில் இருந்தாலும் சென்னையில் இருந்த ஃபீலிங் இருந்தது.
இதுவரை எங்க படத்தின் டீசரை யூ-ட்யூப்பில் 20 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். அதுவும் ஆறே நாட்களில். இதற்கு முன்பு விமல் படத்தின் டீசருக்கு இவ்வளவு வரவேற்பு எந்த படத்திற்கும் கிடைத்ததில்லை. டீசருக்கு கிடைத்த இந்த வரவேற்புக்கேற்ற மாதிரி படமும் இருக்கும்.”

“உங்களுடைய சினிமாப் பயணம் எப்படி ஆரம்பித்தது?”

“சொந்த ஊர் சேலம். சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தவர்கள் உண்டு. நான் என்னுடைய படிப்புக்காக சென்னை வந்தேன். எம்.எஸ்ஸி படிக்கும் போது சக நண்பர்கள் மூலம் சினிமா தொடர்பு கிடைத்தது. ஜாம்பவான் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சார் படங்களில் சில காலம் வேலை செய்தேன்.

பிறகு எம்.ராஜேஷ் இயக்கிய ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம் வரை வேலை பார்த்தேன். ராஜேஷ் படங்களை இளைஞர்கள் மட்டுமில்ல, ஃபேமிலி ஆடின்ஸும் விரும்பிப் பார்ப்பார்கள். அதே மீட்டர்ல இந்தப் படத்தை பண்ணியிருக்கிறேன். ரெடியான படத்தை ஒரு ரசிகனா பார்த்தபோது ரசிகர்களை சிரிக்க வைக்கும் வேலையை இந்தப் படம் சரியா செய்திருக்கு என்ற திருப்தி ஏற்பட்டது.”

- சுரேஷ்ராஜா