வசூல் வேட்டையாட ரெடியாகுது செந்நாய்!



ஆறு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘கழுகு’, கிருஷ்ணாவின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. இயக்குநர் சத்யசிவாவுக்கும் நல்ல அறிமுகமாக அமைந்தது. தொழில்நுட்பரீதியாகவும் நன்கு பேசப்பட்டது. இப்போது தமிழ் சினிமாவில் பார்ட்-2 சீசன். அதற்கேற்ப ‘கழுகு’க்கும் இரண்டாவது பாகம் தயாராகியிருக்கிறது.

இயக்குநர் சத்யசிவாவிடம் பேசினோம்.‘‘எனக்கு லைஃப் கொடுத்தவர் கிருஷ்ணா சார். என் முதல் படமான ‘கழுகு’ பண்ணும்போது, நான் அறிமுக இயக்குநர். ஆனாலும், நான் சொல்றதையெல்லாம் கேட்டு, என் மேல முழு நம்பிக்கை வச்சார்.  என்னை ஒரு புது இயக்குநரா  அப்ப அவர் ட்ரீட் பண்ணினதே இல்ல. அந்த சுதந்திரம் தான் அதை சிறப்பாகக் கொண்டு வந்துச்சு.

அதில் பங்கேற்ற அத்தனை பேருக்குமே நல்ல பெயரை அள்ளிக் குடுத்துச்சு. அப்புறம் நானும் வேற வேற ஜானர்ல படங்கள் இயக்குறதுல பிசியாகிட்டேன். சில வாரங்களுக்கு முன்பு கிருஷ்ணாவைச் சந்திக்கும்போது, ‘நாம ஏன் ‘கழுகு-2’வை ஆரம்பிக்கக் கூடாது?’னு சீரியஸாகக்  கேட்டார். எனக்கும் அந்த ஐடியா பிடிச்சிடுச்சு.

அதே வேகத்துல ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணினேன். ஃபர்ஸ்ட் பார்ட்ல நடிச்சதுல ஹீரோவும், ஹீரோயினையும் தவிர மத்தவங்க யாரும் இந்தக் கதைக்கு தேவைப்படலை” நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் சத்யசிவா. ‘கழுகு-2’ தவிர டோலிவுட் ராணா, ரெஜினாவை வைத்து ‘1945’ என்ற பிரமாண்ட பீரியட் ஃபிலிமையும் இயக்கி முடித்திருக்கிறார் இவர்.

‘‘நான் இதுக்கு முன்னாடி இயக்கின படங்கள் ஒருசிலது ஒரு வருஷம், ரெண்டு வருஷம் கூட ஷூட்டிங் போயிருக்கு. ஆனா ‘கழுகு2’வை 28 நாட்கள்ல ஷூட் முடிச்சிட்டு வந்ததும் கிருஷ்ணா, யுவன்னு அத்தனை பேருக்குமே ‘ இவ்ளோ வேகமாவா? அவசரஅடியா இருக்குமோ..? எப்படி வந்திருக்குமோ..’னு  ஒரு சின்ன பயம் உள்ளுக்குள் இருந்தது.

ஆனா, சமீபத்தில் அவங்க எல்லாருமே படத்தை பார்த்துட்டு, செம ஹேப்பியாகிட்டாங்க. அதுவும் தயாரிப்பாளர் சிங்காரவேலன் சார்கிட்ட இதோட கதையை போன்லதான் சொன்னேன். அவரை நேர்லகூட சந்திக்கல.

சமீபத்தில் அவர் படம் பார்த்தார். அப்பதான் அவரையே சந்திச்சேன். ஒரு தயாரிப்பாளர் சந்தோஷப்பட்டு நம்மை பாராட்டுறதே படம் பாதி சக்சஸ் ஆனது மாதிரி தெம்பா இருக்குங்க!’’ திருப்தியாகப் பேசுகிறார் சத்யசிவா.
“முதல் பாகத்தோட தொடர்ச்சியா.... இதன் கதையும்..?”

“இல்லீங்க. ரெண்டுக்கும் இருக்கும் ஒற்றுமைகள்னா.... கிருஷ்ணாவும், பிந்துமாதவியும் இதிலும் இருக்காங்க. இதுவும் அடர்த்தியான காட்டுக்குள் நடக்குற கதை. அவ்வளவுதான். அதோட கிளைமேக்ஸ்ல ரெண்டு பேருமே இறந்திடுவாங்க. ஆனா, இதிலே கிளைமாக்ஸ் புதுசா இருக்கும். இந்தக் கதையைக் கேட்ட பலரும் கிளைமாக்ஸை யூகிக்கவே முடியலை.

அதான் இதோட ப்ளஸ். ‘கழுகு-2’ ஸ்கிரிப்ட் உடனே ரெடியாக காரணமே,  நான் வளர்ந்தது எல்லாமே மூணாறு என்பதால்தான். அங்கே உள்ள அடர்ந்த காடுகள் எல்லாம் நான் புழங்கின இடங்கள்தான். அங்கே பார்த்து பழகிய மனிதர்கள், சம்பவங்களைத்தான் கதையாகக் கொண்டு வந்திருக்கேன். படத்துல மொத்தமே ஆறு கேரக்டர்கள்தான். சிம்பிளா சொல்றதா இருந்தா இதுல ஹீரோ, வில்லன் கான்செப்ட் கிடையாது.

லொகேஷன் ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கும். மழைக் காட்சிகள் ரசனையா வந்திருக்கு.  நாங்க மூணாறு, மறையூர் பகுதிகள்ல ஷூட்டிங் நடந்திட்டிருக்கும் போதே, செம மழையா இருந்தது. கதைக்குத் தேவையான மழையா அது மாறிடுச்சு. முக்கியமான ஒரு விஷயம், இது முழுக்க முழுக்க செந்நாய் வேட்டையைப் பத்தின கதையில்லை. முதுமக்கள் தாழி.... மாதிரி நல்ல சில விஷயங்களையும் சொல்லியிருக்கேன்.

படத்துல நிஜ செந்நாய்களையும் பயன்படுத்தியிருக்கோம். சில இடங்கள்ல கிராபிக்ஸும் இருக்கு. படத்துல கிருஷ்ணா, பிந்துமாதவி, காளிவெங்கட், எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஷ் பெரடி நடிச்சிருக்காங்க.

கிருஷ்ணா இடையே கொஞ்சம் குண்டாகி இருந்தார். இந்தப் படத்துக்காக ஃபிட் ஆகி வந்தார். நடிப்பிலும் மெச்சூரிட்டி கூடியிருக்கு. மத்தபடி பழகுறதுல வேற எந்த வித்தியாசமும் தெரியல. காளிவெங்கட்டிற்கும் அவருக்குமான கெமிஸ்ட்ரி கலகலப்பா இருக்கும்.

அதே மாதிரி பிந்துமாதவியும் பல்க்கா நிறைய நாட்கள் கால்ஷீட் குடுத்தாங்க.  எல்லாருமே இயல்பும் யதார்த்தமுமாக நடிச்சிருக்காங்க. முதல் பாகத்தை ஒப்பிடும்போது இப்ப பிந்துமாதவி நடிப்பில் ரொம்பவே பக்குவம்.  கேரள காடுகள்ல நாங்க ஷூட் நடத்தின இடத்திலிருந்து  நாலைந்து கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால்தான் கேரவனே நிறுத்தமுடியும்.

அங்கே போய் காஸ்ட்யூம் மாத்துறதா இருந்தால் கூட, சட்டுனு போயிட்டு வந்திட முடியாது. காட்டுல கிடைச்ச இடங்கள்ல காஸ்ட்யூம் மாத்திக்கிட்டாங்க. அங்கே அட்டைப்பூச்சி கடியையும் பொருட்படுத்தாமல் அவ்ளோ ஈடுபாட்டோடு நடிச்சு கொடுத்திருக்காங்க.”

“இந்தக் கதைக்குள் செந்நாய் கான்செப்ட் எப்படி வந்தது?”

“நான் வளர்ந்த மூணாறுல செந்நாய் பண்ணின அட்டூழியங்களைப் பத்தி நிறையவே கேள்விப்பட்டிருக்கேன். அதுங்க பார்க்க ரொம்ப சாதுவா இருக்கும். ஆனா, ரொம்ப ஆபத்தானது. செந்நாய்கள் தனியா வராது. கூட்டமாகத்தான் வரும்.

அது நரி மாதிரி ஊளையிடாது. காட்டு கத்து கத்தும். ஒரு செந்நாய்க்கூட்டம் சேர்ந்தால், யானையையே அடிச்சுத் தின்னுடும்னு சொல்வாங்க. கூட்டத்தில் உள்ள ஒரு செந்நாய் பயந்தால் கூட, அதில் உள்ள அத்தனை நாய்களும் பயந்து ஓடிடும்னு சொல்வாங்க. இப்படி அதைப் பத்தி விசித்திரமான விஷயங்கள் நிறையவே இருந்ததால், ஸ்கிரிப்ட்டுக்கு யூஸ் ஆகிடுச்சு.”   

“ராணா நடிப்பில் ‘1945’ படம் என்ன ஸ்டேஜ்ல இருக்கு..?”

“நான் ‘சிவப்பு’ படத்தை முடிச்சதும், ராணாவுக்கு ஏத்த மாதிரி ஒரு கதை அமைஞ்சது. அவரை அப்ரோச் பண்றதும் எளிதாக இருந்தது. ‘கதையைக் கேட்டதும், உடனே ‘பண்றேன்’னு ரிசல்ட்டையும் சொல்லிட்டார்.

தமிழ்லேயும், தெலுங்கிலும்  ஒரே டைம்ல வெளியாகப் போகுது. தமிழ்ல ‘மடை திறந்து’னு வைக்கலாம்னு  ஒரு ஐடியா இருந்தது. ஆனா, இப்ப ‘1945’னு டைட்டில் வச்சிருக்கோம். இது ஒரு பீரியட் ஃபிலிம். சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசியப் படை வீரனாக நடிச்சிருக்கார். ரெஜினா கஸாண்ட்ரா, நாசர், சத்யராஜ்னு நிறைய ஆர்ட்டிஸ்ட்கள் நடிச்சிருக்காங்க.”

“என்ன சொல்றார் ராணா..?”

“அவர் ‘1945’லே சுதந்திரப் போராட்ட வீரரா நடிச்சிருக்கார். ராணாவோட படங்கள்னா வித்தியாசம் தெரியும். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ஜானர்ல இருக்கும். ‘வழக்கமான தெலுங்கு சினிமா பாணி வேணாம்....’னு எதிர்பார்ப்பார். கதை, மேக்கிங் பத்தினதுல வித்தியாசமான தேடல் அவர்கிட்ட நிறையவே இருக்கு. அவர் கரெக்‌ஷன் சொல்றதா இருந்தால் ஃபைட் சீன்ல தான் சொல்லுவார்.

அவரோட கேரியர்லே இது ரொம்ப முக்கியமான படமா இருக்கும்னு அவரே சொல்லியிருக்கார். படத்தை ‘பியார் பிரேமா காதல்’ என்.ராஜராஜன் சார்தான் தயாரிக்கறார். ராணா மூலமா ‘பாகுபலி-2’ தமிழ்நாடு டிஸ்ட்ரிபியூஷன் தொடர்பு அவருக்குக் கிடைச்சது. நானும் இந்தப் படத்தின் மூலமாகத்தான் டோலிவுட்டில் காலடியெடுத்து வைக்கிறேன். இப்படி நிறைய நல்ல விஷயங்களை ‘1945’ கொடுத்திட்டிருக்கு.”

- மை.பாரதிராஜா