அந்த மாதிரி நடிச்சி அலுத்திடிச்சி! சலித்துக்கொள்கிறார் கவுதம்

“ஆளை வுடுங்க சாமி” என்று அலறிக் கொண்டிருக்கிறார் இளைய நவரச நாயகன் கவுதம் கார்த்திக்.சினிமாவில் ஹிட்டே இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு அல்வா மாதிரி மாட்டியது ‘ஹரஹர மஹாதேவகி’.“ச்சீய்.... அந்தப் படமா?” என்று சொல்கிற அளவுக்கு காமரசம் ததும்பினாலும், தியேட்டர் கவுண்டரில் மிளகாய் பஜ்ஜி கணக்காக பரபரவென விற்றுத் தீர்ந்தது டிக்கெட்.

அதே இயக்குநரின் அடுத்த படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படமும் அதே கவுதம் நடிப்பில் வெளியாகி முரட்டுத்தனமாக வசூலித்துக் கொண்டிருக்கிறது. முந்தைய படத்தைவிட இதில் காமம் ரொம்பவே தூக்கலாக அமைந்ததில் ரசிகர்கள் ஹேப்பி.ஆனால் -கவுதம்தான் பயப்படுகிறார்.

இப்படியே போனால் தன்னை ‘பிட்டு ஹீரோ’வாகவே தமிழ் வரலாறு நினைவு கூறும் என்று அஞ்சுகிறார். அதற்கேற்ப அவரிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்கள் அத்தனை பேருமே சொல்லி வைத்தாற்போல “சார், ஒரு அடல்ட் காமெடி சப்ஜெக்ட்” என்றுதான் ஆரம்பிக்கிறார்களாம்.

“அடல்ட் காமெடியில் நடிக்கிறது தப்புன்னுலாம் நான் நினைக்கலை. ‘ஹர ஹர மஹா தேவகி’, தமிழ் சினிமாவில் ஒரு டிரெண்ட்செட்டர் மூவியா அமைஞ்சுடுச்சு. அதே கூட்டணி அடுத்த படத்திலும் முன்னதைவிட பெரிய ஹிட்டை பார்த்துட்டோம். இப்போ நிறைய பேர் இதே ஜானரில் படமெடுக்க வந்துட்டதாலே, நான் மத்த ஜானருக்கு மூவ் பண்ண முடிவெடுத்திருக்கேன். ஒரே மாதிரி பேசி நடிச்சா நமக்கே சலிப்பு ஆயிடும் இல்லையா?

திரு இயக்கத்தில் அப்பாவோடு சேர்ந்து நடிச்ச ‘மிஸ்டர் சந்திரமவுலி’ ரிலீஸுக்கு ரெடி ஆயிடிச்சி. அப்பாவை வீட்டிலேயும், சினிமா ஸ்க்ரீனிலும்தான் பார்த்திருக்கேன். செட்டுலே அவர் நடிச்சி பார்த்ததில்லை. கேமரா ரோல் ஆனதுமே வேற ஆளா மாறிடுறாரு.

அப்படியே அசந்துட்டேன்.என்னோட தாத்தாவைப் போலவே அப்பாவும் அற்புதமான நடிப்பாற்றல் கொண்டவர். அது மட்டுமின்றி சினிமா பத்தி நல்ல நாலெட்ஜ் கொண்டவர். நிறைய கதைகள் சொல்லுவார். இப்போ நான் ஒப்புக்கொண்ட படங்களையெல்லாம் முடிச்சிட்டு அப்பா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஆசைப்படுறேன்” என்கிறார் கவுதம் கார்த்திக்.

- எஸ்