வீரமும் ஈரமும் ஜாகுவார் தங்கம்டைட்டில்ஸ் டாக் 64

சென்ற இதழ் தொடர்ச்சி...


சிலம்பப் போட்டிக்காக சென்னை வந்தவன், இங்கேயே தங்கிட்டேன். அதுக்கப்புறம் மற்ற மாநிலங்களில் மட்டுமின்றி ரஷ்யா, சிங்கப்பூர்னு வெளிநாடுகளுக்கெல்லாம் போய் போட்டிகளில் கலந்துக்கிட்டு பரிசுகளை அள்ளிக் குவிச்சேன்.எம்.ஜி.ஆரோட ராமாவரம் தோட்டத்தில் மூணு வருஷம் வேலை பார்த்தேன். அவருதான் “சினிமாவில் வேலை பார்க்குறீயா?”ன்னு கேட்டாரு.

கரும்பு தின்ன கசக்குமா என்ன? வாத்தியாரால் நான் சினிமாவுக்கு வந்தேன். கைராசியான ஆளு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா, இங்கிலீஷ்னு இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட படங்கள் செய்துட்டேன். அதுக்கெல்லாம் அவர்தான் காரணம்.

‘வஜ்ர முஸ்டிக்’குன்னு ஒரு கன்னடப்படம். ‘இரும்புக் கரம்’ என்பது மாதிரி மீனிங். எழுபது அடி உயரத்தில் இருந்து ஹீரோ சங்கர்நாக் குதிக்கணும். அவருக்காக டூப் போடறவரு தயங்கினார். இப்போ மாதிரி ரோப் கட்டிக் குதிக்கிற மாதிரி வசதியெல்லாம் அப்போ கிடையாது. கீழே பெட்கூட இல்லை. வைக்கோல்தான். நான் தைரியமா குதிச்சேன். வலதுகால் பிசகிடிச்சி. ஆறு மாசம் பெட்லேயே கிடந்தேன்.

அதே மாதிரி ஷோபன்பாபு சாருக்கு ஒரு தெலுங்குப் படத்தில் டூப் போட்டேன். ரயில் வேகமா வரும். அது கிட்டே வந்ததுமே தண்டவாளத்தைத் தாண்டணும். டைமிங் மிஸ்ஸாகி 200 அடி தூரத்துக்கு ரயில் என்னை இழுத்துச் சென்றது. உடம்பெல்லாம் முள் குத்தி படுகாயம். இந்தச் சம்பவத்தையடுத்து நான் சினிமாவில் இருக்கிறதுக்கு குடும்பத்தில் பெரிய எதிர்ப்பு எழுந்தது.

ஆனா, ஒரு ஸ்டண்ட்மேனுக்கு உயிரைப் பணயம் வைக்கிறதுலேதான் சந்தோஷம். வீரம்னா சும்மாவா?

ஒருமுறை ஃபயர்ஷாட் கொஞ்சம் லாங் ஆயிடிச்சி. தீயோட உக்கிரத்தால் என்னோட உள்ளுறுப்புகளில் காயம் ஏற்பட்டுடுச்சு. அர்ஜுனோட படம் ஒண்ணுலே மலைப்பாம்போட சண்டை போடணும்.

எனக்கு அப்போதான் கல்யாணம் ஆகி மூணாவது நாள். மனைவியை கட்டிப் பிடிக்க வேண்டியவன் பாம்பைக் கட்டிப் பிடிச்சேன். பாம்பு என்னை ரொம்ப இறுக்கமா கட்டிப் பிடிச்சி எலும்பெல்லாம் நொறுங்கற மாதிரி வேதனை. நான் நிஜமாவே கத்துறேன். ஆனா, படப்பிடிப்பு ஆட்கள், நடிப்புன்னு நெனைச்சி கையைத் தட்டினாங்க. வேற வழியில்லாம சம்மர்சால்ட் அடிச்சி பாம்பை உதறுனேன். பாம்புக்குதான் எலும்பு முறிவு.

நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி நடிச்ச ‘ப்ளட்ஸ்டோன்’ ஆங்கிலப் படத்துலே சிங்கத்தோட சண்டை. அதோட ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த மயக்க மருந்து கொடுத்திருந்தாங்க. நான் சண்டை போட்ட வேகத்துலே அது தடுப்பையெல்லாம் உடைச்சிக்கிட்டு ஸ்பாட்டை விட்டு தப்பிச்சிப் போயிடிச்சி. அதே வேகத்தோடு என்னைத் தாக்கியிருந்தா என்னாகியிருக்கும்? நாலு நாள் கழிச்சித்தான் அந்த சிங்கத்தை எங்கேயோ கண்டுபிடிச்சாங்க.

சிங்கம், புலி மாதிரி விலங்குகளோடு சண்டி போடுறப்போ அதோட முன்னங்கால்கள் நம்ம மேலே பட்டுடாத அளவுக்கு ரொம்ப கவனமா சண்டை போடணும். அந்த முன்னங்கால் செயல்படுற ஏரியாவுக்குள்ளே நம்ம உடம்பு மாட்டுச்சின்னா கண்டம்தான். ரொம்பவும் கவனமா விலங்குகளிடம் நடந்துக்கணும்.

இப்போவெல்லாம் சுகர் கிளாஸ்னு ஒரு டெக்னிக் வந்துடிச்சி. அந்தக் காலத்தில் கண்ணாடியை உடைக்கணும்னா ரொம்ப ரிஸ்க். நாம டைவ் அடிக்கிறதுக்கு முன்னாடி கண்ணாடி நொறுங்குறதுக்கு வெடி செட் பண்ணிடுவோம்.

அது வெடிக்க தாமதமாச்சின்னா நம்ம உடம்பு கிழிஞ்சிடும். கார் மேலே மோதுறது, மலையில் உருளுறதெல்லாம் அப்போ உயிருக்கு கேரண்டி இல்லாத செயல்கள். இப்போ மாதிரி கிராபிக்ஸெல்லாம் இல்லை இல்லையா?

அவ்ளோ ரிஸ்க் எடுத்து ஏன் நடிச்சீங்கன்னு கேட்கலாம். அது ஒரு போதை. ஒரு ஸ்டண்ட்மேனுக்கு மட்டும்தான் அந்த போதை என்னன்னு தெரியும்.
நம்பியார் சாமி முதல் தனுஷ் வரைக்கும் எத்தனையோ ஹீரோக்களுக்கு டூப்பா சிலம்பம் சுத்தியிருக்கேன்.

விஜயசாந்தி ஒரு காலத்தில் ஆக்‌ஷன் குயீன். அவங்ககிட்டே கால்ஷீட் கேட்குறப்போ, ‘ஜாகுவார்கிட்டே பேசிட்டீங்களா?’ன்னு முதல்லே கேட்டுட்டுதான் கால்ஷீட்டே கொடுப்பாங்க. கேப்டன் விஜயகாந்த், சரத்குமார், விஜய், பிரசாந்த், நமீதான்னு பெரிய ஸ்டார்ஸுக்கு எல்லாம் ஸ்டண்ட் டிரெய்னிங் கொடுத்திருக்கேன்.

இதுவரை அஞ்சு முறை மாநில அரசோட விருது வாங்கியிருக்கேன். ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்டுலே நேரடியா என்னோட வீரத்தைப் பார்த்துட்டு மக்கள் பாராட்டுறதுதான் எனக்கு பெருசா தெரியும். ஒருமுறை கன்னட ஷூட்டிங்கில் என் ஸ்டண்டைப் பார்த்துட்டு அங்கிருந்த ஜனங்க கையிலே இருந்த அஞ்சு, பத்து ரூபாவை எனக்கு சன்மானமா கொடுத்தாங்க.

எவ்வளவு லட்சம் சம்பாதிச்சாலும் அன்னைக்கு எனக்கு மக்களிடமிருந்து நேரடியா கிடைச்ச நூறு, இருநூறுதான் விலைமதிப்பற்றதுன்னு நெனைக்கிறேன்.வீரமா இருக்கிறவன்தான் மனசுலே ஈரமாவும் இருப்பான். ஒரு ஆளோட தோற்றத்தைப் பார்த்துட்டு அவரை எடை போடாதீங்கன்னு மட்டும் கேட்டுக்கிறேன். எனக்கு இப்போ அறுபத்தஞ்சு வயசு ஆகுது. இந்த வயசுலே சுறுசுறுப்பா இருக்கேன்னா வீரமும், ஈரமும்தான் காரணம். அதுதான் தமிழனோட அடிப்படைக் குணமே.

எழுத்தாக்கம்: சுரேஷ்ராஜா

(தொடரும்)