காமெடி அல்ல, சீரியஸ்!ஹீரோக்கள் கோடி கோடியாக சம்பளம் வாங்குகிறார்கள் என்றுதான் எல்லோரும் பேசுகிறார்களே தவிர, காமெடியன்கள் சம்பளம் பற்றி பெரிதாக பேசப்படுவதில்லை. வடிவேல், விவேக், சந்தானம் போன்றவர்கள் கிட்டத்தட்ட காமெடி ஏரியாவிலிருந்து பிரமோஷன் வாங்கிவிட்ட நிலையில், அடுத்தகட்ட நடிகர்களின் காட்டில் அடைமழை பொழிகின்றது.

அடுத்த வடிவேல் எனப்படும் சூரி, பேக்கேஜ் முறையில் பெரிய ஒரு ரூபாய் வாங்குகிறாராம். யோகிபாபு, ஒரு நாளைக்கு மூன்று லட்சம் பெறுவதாகச் சொல்கிறார்கள். கஞ்சா கருப்பு, ஒரு நாள் கால்ஷீட்டுக்கு முன்பு இலட்சங்கள் பெற்றுக் கொண்டிருந்தார். இப்போது இருபத்தைந்தாயிரம் வாங்குவதாகக் கேள்வி. சிங்கம்புலி, காமெடி கேரக்டர் மட்டுமின்றி திரைக்கதை வசனங்களிலும் உதவுவதால் ஒரு நாளைக்கு அரை லட்சம் பெறுவதாகக் கூறப்படுகிறது.

‘நான் கடவுள்’ ராஜேந்திரனும், யோகிபாபுவுக்கு இணையாக சம்பளம் வாங்குகிறார். ‘ரோபோ’ சங்கருக்கும் இப்போது செம டிமாண்டு. அவர் படத்துக்கு ஏற்ப நாளைக்கு ஒன்றோ, இரண்டோ லட்சம் பெற்றுக் கொள்கிறாராம். லோ பட்ஜெட் சந்தானம் எனப்படும் சதீஷ், கறாராக சம்பளம் நிர்ணயிக்காமல் கால்ஷீட் தேவையைப் பொறுத்து வாங்கிக் கொள்கிறாராம்.

இவரைப் போலவேதான் கருணாகரன். தயாரிப்பு நிறுவனத்தின் வேல்யூவைப் பொறுத்து சம்பளம் நிர்ணயித்துக் கொள்கிறார். ஆர்.ஜே.பாலாஜியும் சம்பளம் பற்றி பெரிதாகக் கவலைப்படுவதில்லை. எனினும், பெரிய நடிகர்களின் படத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார். சாம்ஸுக்கு பெரியளவில் மார்க்கெட் இல்லையென்றாலும், பெரிய தொகையைக் கேட்டு தயாரிப்பாளர்களின் பி.பியை எகிறவைக்கிறார் என்று புகார்.

- ரெய்டுக்காரன்