காத்திருப்போர் பட்டியல்



லாக்கப்பில் காத்திருப்போரின் கதை!

டிக்கெட் எடுக்காதவர்கள், படிக்கட்டில் பயணம் செய்தவர்கள், தண்டவாளத்தில் அசுத்தம் செய்தவர்கள் ஆகியோரைக் கைது செய்து ஒரு அறையில் அடைக்கிறார் ரயில்வே போலீஸ் அதிகாரி அருள்தாஸ். பொழுதுபோகவேண்டும் என்பதற்காக கைதிகள் தங்களது கதைகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள். அதில் நாயகன் சச்சின் மணி  சொல்லும் கதை முழுப்படமாக காட்டப்படுகிறது.

நாயகன் சச்சின் மணி  முதல் படம் என்று தெரியாத அளவுக்கு முயற்சி எடுத்து  சிறப்பாக நடித்திருக்கிறார்.  நாயகி நந்திதா கலகலப்பு, கடுகடுப்பு கதாபாத்திரத்தில் ரசிகர்களைக் கவர்கிறார்.கிட்டத்தட்ட ஹீரோ லெவலுக்கு அருள்தாஸ் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. நாயகியின் அப்பா சித்ரா லட்சுமணன்,  துப்பாக்கி துடைக்கும் மொட்டை ராஜேந்திரன், செக்ஸ் டாக்டர்  மனோபாலா, ரயிலில் பிச்சை எடுத்து சம்பாதித்ததை சகாக்களுக்கு பரிமாறும் மயில்சாமி, அப்புக்குட்டி, செண்ட்ராயன், அருண்ராஜா காமராஜ் என அனைவருமே காமெடி கலாட்டாவுக்கு கைகொடுத்திருக்கிறார்கள்.

சீன் ரோல்டன் இசையில் மெல்லிய பாடல்கள் மனம் தொடுகின்றன. எம்.சுகுமார் ஒளிப்பதிவு எளிமையான அருமை.   ரயில்வே போலீஸ் கதைக்களத்தில் குறைவான கலைஞர்களை வைத்துக்கொண்டு நிறைவான படமாக உருவாகியிருக்கிறது. வழக்கமான காதல் கதையை, வித்தியாசமான கோணத்தில் கலகலப்பாக இயக்கியிருக்கிறார் பாலையா டி.ராஜசேகர்.