கம்புக்கும், புயலுக்கும் சண்டை!பிரும்மாண்ட இயக்குநரின் தயாரிப்பில் கம்பு இயக்குநரின் இம்சை படத்தின் இரண்டாம் பாகம் கிட்டத்தட்ட டிராப் ஆகிவிட்டதாக சொல்கிறார்கள்.ஒரு காலத்தில் தயாரிப்பாளர்களுடைய கஷ்ட நஷ்டங்களைப் புரிந்துகொண்டு நடித்த புயல் நடிகரும், கம்பு இயக்குநரும் இணைந்து பிரும்மாண்ட இயக்குநரைப் பிரிச்சி மேஞ்சிட்டாங்களாம். கம்புக்கும், புயலுக்கும் டி20 படத்தின் கடைசி பால் வெற்றி மாதிரியான நெருக்கடி இருந்தும்கூட ஈகோவால் இம்சையின் இரண்டாம் பாகம் வளர்வதில் சிக்கல் ஏற்பட்டு விட்டது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் இரு தரப்புமே ஏகத்துக்கும் பந்தா காட்டியிருப்பதாக பேசிக் கொள்கிறார்கள். கம்பும், புயலும் ஒருவருக்கு ஒருவர் ஏட்டிக்குப் போட்டியாக கும்மியடித்து தங்களுக்கு கிடைத்திருக்க வேண்டிய நியாயமான வெற்றிக்கு நாமம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தயாரிப்பாளரின் பேச்சு வார்த்தைக்கு கம்பு ஒத்துக்கொள்ள, புயலோ பிகு செய்து வருகிறார். எதைப்பற்றியும் கவலைப்படாமல் காமெடிக்கு பேர் போன இயக்குநரின் படத்தில் காமெடி டிராக் செய்ய போய்விட்டாராம். ஒரு காலத்தில் இதே இயக்குநரும், புயலும் கீரியும், பாம்புமாக அடித்துக் கொண்டவர்கள்தான்.“இம்சையின் இரண்டாம் பாகம் எல்லாருக்குமே வாழ்வு கொடுக்கும். இது புரியாம ஈகோ பிரச்சினையிலே என்னோட பணத்துலே விளையாடுறாங்க” என்று புலம்புகிறாராம் பிரும்மாண்டம்.

- சுந்தர முனுசாமி