என்னோட கடைசி ஆசை இயக்குநர் சி.வி.ராஜேந்திரன்



திடீர் தொடர் 5

கன்னடத்தில் ஒரு படத்தின் ஷூட்டிங்கை ஃபாரீனில் வெச்சு சிறப்பா படம் பிடிச்சேன். அதைப் பார்த்துட்டு தமிழிலேயும் அதுமாதிரி ஒண்ணு பண்ணிக் கொடுக்கணும்னு கேட்டாங்க. அதுதான் கமல்ஹாசன் நடிச்ச ‘உல்லாசப் பறவைகள்’. ஐரோப்பாவில் ஆறு நாடுகளில், ரொம்ப கம்மியான நாட்களில் பிரமாதமா ஷூட் பண்ணிக் கொடுத்தேன். என்னோட கன்னடப் படங்கள் சிலவற்றில் ரஜினி செகண்ட் ஹீரோவா பண்ணியிருந்தார்.

அந்த நட்பின் அடிப்படையில் கிடைச்சதுதான் ‘கர்ஜனை’ வாய்ப்பு. ரஜினியும், கமலும் வளர்கிற நிலையில் இருந்தப்போ, ரெண்டு பேரையும் இயக்கினேன் என்பது எனக்கு பெருமைதான். தெலுங்கில் சிரஞ்சீவியையும் இயக்கியிருக்கேன். எழுபதுகளின் இறுதியிலும், எண்பதுகளின் தொடக்கத்திலும் நான் இயக்கியவர்கள் எல்லாருமே பெரிய ஆட்களா ஆனாங்க. கடைசியா சத்யராஜை ‘சின்னப்பதாஸ்’ படத்துக்காக இயக்கிட்டு, திரையுலகில் இருந்து கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டேன்.

முன்னே மாதிரி ஓடியாடி டைரக்‌ஷன் பண்ண வேணாம்னு நெனைச்சாலும், சினிமா என்னை விடலை. சொந்தமா படம் தயாரிக்கலாம்னு முடிவெடுத்தேன். அப்போ ஒரு மலையாளப் படம் பார்த்தேன். சூப்பரா இருந்தது. அதோட ரைட்ஸ் வாங்கி பிரபுவை வெச்சி, சந்தானபாரதி இயக்கத்துலே ‘வியட்நாம் காலனி’யை பிரும்மாண்டமா தயாரிச்சேன். படத்தோட முதல் நாள் மேட்னி ஷோ தியேட்டருக்கு போய்ப் பார்த்தேன். கடுமையான அதிர்ச்சி. முன்னூறு பேர்தான் படம் பார்க்க வந்திருந்தாங்க.

ஆனா, ஈவ்னிங் ஷோவுக்கு கிரவுட் அப்படியே டபுள் ஆச்சி. நைட் ஷோ, எல்லா தியேட்டரிலும் ஹவுஸ்ஃபுல். ஒரு ஏழெட்டு மணி நேரத்துலே சுமாரான ஓப்பனிங் கொண்ட ஒரு படம், சூப்பர்ஹிட் ஆச்சு. இதுதான் சினிமா. சென்னையிலே சிவாஜி சாரோட சாந்தி தியேட்டருலே 75 நாளுக்கும் மேலே தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் ஆகி சாதனை படைச்சது அந்தப் படம்.

அந்த நேரத்தில் சிவாஜிஅண்ணன் சினிமாவில் நடிக்காம ஒதுங்கியிருந்தார். அவரை சந்திச்சப்போ, “நீங்களே இப்படி ஒதுங்கிட்டீங்கன்னா இண்டஸ்ட்ரீ என்னண்ணே ஆகும்?”னு கேட்டேன். “அடப்போடா...”ன்னு சிரிச்சாரு. “எங்கிட்டே ஒரு லைன் இருக்கு. நீங்க திரும்பவும் நடிக்கணும்”னு கேட்டேன். “கதையை சொல்லு”ன்னு கேட்டாரு. அவருக்கு கதை ரொம்பவும் பிடிச்சிருந்தது. ‘இதயக் கமலம்’ கதையை மிக்ஸ் பண்ணி நான் கதை சொன்ன நேர்த்தியை பாராட்டினாரு.

இந்தக் கதையை இயக்கணும்னு சில முன்னணி டைரக்டர்கள் கிட்டே பேசினேன். ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிட்டாங்க. நானே திரும்பவும் இயக்கவும் மனசில்லை. தயாரிப்பு மட்டும்தான்னு உறுதியா இருந்தேன். கடைசியா எஸ்.ஏ.சந்திரசேகரைக் கேட்டேன். “சிவாஜி சார் நடிக்கறாருன்னு சொல்றீங்க. இதுக்கெல்லாம் கேட்கணுமாண்ணே. நீங்க உத்தரவிட்டீங்கன்னா வந்து டைரக்ட் பண்ணி கொடுத்துட்டுப் போறேன்”னு ரொம்ப பெருந்தன்மையா சொன்னாரு. அவர், சிவாஜி சார் படங்களில் அசிஸ்டென்டா வேலை பார்த்த அனுபவம் பெற்றவர். அதனால் நடிகர் திலகம் நடிக்கிற செட் எப்படியிருக்கும்னு அவருக்குத் தெரியும்.

அவரே விஜய் கிட்டே பேசி, கால்ஷீட் வாங்கிக் கொடுத்தார். அப்போ விஜய் ரொம்பவே பிஸி. ஆனா, சிவாஜியோட நடிக்கிற வாய்ப்புக்காக மத்த படங்களோட தேதிகளை அட்ஜஸ்ட் பண்ணி நடிச்சார். அந்தப் படம்தான் ‘ஒன்ஸ்மோர்’. அதுவும் நல்லா ஓடின படம்.

தொடர்ந்து படங்கள் தயாரிக்கலாம்னுதான் இருந்தேன். ஒரு பெரிய ஹீரோகிட்டே கால்ஷீட் கேட்டேன். “நீங்க கேட்டு முடியாதுன்னு சொல்ல முடியுமா? நீங்களே கதையை செலக்ட் பண்ணி சொல்லுங்க”ன்னாரு. அட்வான்ஸ் கொடுத்துட்டு, நாலஞ்சி கதை சொன்னேன். அது சொத்தை, இது சொத்தைன்னு சொல்லிட்டு, ஒரு குப்பையான ஃபாரீன் படத்தோட கேசட்டைக் கொடுத்து, “இதை வெச்சு கதை பண்ணுங்க”ன்னு சொன்னாரு.

எனக்கு கோபம் வந்துடிச்சி. கிட்டத்தட்ட அறுபது படங்கள் பண்ணியிருக்கேன். காப்பியடித்து கதை பண்றது என்னோட தொழில் நேர்மைக்கு அவமானம். “அட்வான்ஸை திருப்பிக் கொடுத்துடு”ன்னு கேட்டேன். ஒரு வருஷம் அலைய வெச்சிக் கொடுத்தாரு. அனுபவத்துக்கு மரியாதை இல்லை என்கிற நிலையில், சினிமா உலகில் இருந்து வேதனையா வெளியேறினேன்.

எனக்கு டிவியிலே என்ட்ரி கிடைச்சது யதேச்சையான அனுபவம். எனக்குத் தெரிஞ்சவர் தயாரிப்பாளர் என்பதால் இயக்குவதற்கு சம்மதிச்சேன். அந்தத் தொடரோட ஹீரோ, இப்போதைய திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்னு சொன்னாங்க. பயந்துட்டேன். கலைஞரோட பையன். ஷூட்டிங்குக்கு ஒழுங்கா ஒத்துழைப்பாரான்னு எனக்கு சந்தேகம். கட்சி ஆளுங்க புடைசூழ வருவாரோன்னு நெனைச்சேன்.

ஆனால் -ஒரு புதுமுக நடிகன் மாதிரி பவ்யமா, தயக்கமா வந்து ஷூட்டிங் ஸ்பாட்டுலே நின்னாரு ஸ்டாலின். அவரைப் பத்தி வெளியே இருந்த இமேஜுக்கும், அவருக்கும் சம்பந்தமே இல்லை. ரொம்பவும் எளிமையான மனிதர். என்னிடம் அவ்வளவு மரியாதையா நடந்துக்கிட்டாரு. நானும், அவரும் நல்ல நண்பர்களா ஆனோம்.

ஸ்பாட்டுலே டைரக்டரோட ஆர்ட்டிஸ்டா மாறிடுவார். ஷூட்டிங் முடிஞ்சதுமே தினமும் என்னை வெளியே அழைத்துச் செல்வார். ‘குறிஞ்சி மலர்’, பத்து எபிசோட் ஒளிபரப்பானதும், கலைஞர் அழைச்சார். “இவ்வளவு அழகா இந்தத் தொடர் வரும்னு தெரிஞ்சிருந்தா, படமாவே எடுத்திருக்கலாமே?”ன்னு கேட்டாரு. அதெல்லாம் மறக்கமுடியாத தருணங்கள்.

என்னோட குடும்பத்தைப் பத்தி நான் சொல்லவே இல்லை.நான், என் மனைவி ஜானகி. எங்களுக்கு ஒரு பொண்ணு - ஒரு பையன். அளவான குடும்பம். பொண்ணு பத்மாவும், பையன் ராஜீவும் அமெரிக்காவில் இருக்காங்க. என்னோட மருமகள், ஒரு கொரியன் பொண்ணு. வருஷத்துக்கு ஒருமுறை நாங்க அமெரிக்காவுக்குப் போய் பேரன், பேத்தியை எல்லாம் பார்த்துட்டு வருவோம்.

எங்களாலே போக முடியலைன்னா அவங்க இங்கே வந்துடுவாங்க. என்னோட வாழ்க்கை, நிறைவான வாழ்க்கை. நான் சினிமா எடுக்கலைன்னாலும் சும்மா ஓஞ்சு போய் இல்லை. எப்பவுமே கதைகள் எழுதிக்கிட்டே இருப்பேன். நல்ல கதையம்சத்தோடு தமிழ் சினிமாவில் படங்கள் வந்து ரொம்ப நாளாச்சு. அந்தக் குறையை போக்குற விதத்தில் ஒரு படமாவது இயக்கணும் என்பதுதான் என்னோட கடைசி ஆசை.

எழுத்தாக்கம் :
மை.பாரதிராஜா
படங்கள் : ஆர்.சந்திரசேகர்
பழைய படங்கள்
உதவி : ஞானம்


(நிறைந்தது)