அரவிந்த்சாமியை கட்டிக்க அமலாபாலுக்கு என்ன தயக்கம்?மலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் வெற்றி அடைந்த படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’. தமிழில் விஜய்யை ‘ஃப்ரண்ட்ஸ்’, ‘காவலன்’ படங்களில் இயக்கிய அதே சித்திக்தான் இயக்குநர்.

தமிழில் அரவிந்த்சாமி, அமலாபாலை வைத்து அவரே ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ என்று ரீமேக் செய்திருக்கிறார். ‘தெறி’யில் அறிமுகமான மீனாவின் மகள் நைனிகாவுக்கும் முக்கியமான வேடமாம். ஆக்‌ஷன், காதல் என்று அதகளமாக வந்திருக்கும் இப்படத்துக்கு இயக்குநரும், நடிகருமான ரமேஷ்கண்ணா வசனம் எழுதியிருக்கிறார்.

“நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக படம் வந்திருக்கு. ஒரிஜினல் படத்தின் சாராம்சத்தைத் தவிர மற்ற அனைத்தும் நேரடி தமிழ்ப் படத்துக்கு உரிய அம்சங்களோடு இருக்கும். ஒரிஜினலுக்கும் தமிழுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு” என்று பேச ஆரம்பித்தார் ரமேஷ் கண்ணா.

“படத்தோட கதை?”

“மனைவியை இழந்த அரவிந்த்சாமிக்கு ஒரு மகன். கணவனை இழந்த அமலா பாலுக்கு ஒரு மகள். அரவிந்த்சாமியும், அமலாபாலும் கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லா இருக்கும்னு குழந்தைகள் நினைக்கிறாங்க. ஆனால், அமலாபாலுக்கு அதில் உடன்பாடு இல்லை. ஏன்னா, அரவிந்த் சாமியின் கேரக்டர் அப்படி. அதனால்தான் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’னு படத்துக்கு அதிரடியான டைட்டிலே. அரவிந்த்சாமியின் செயல்கள் ஒவ்வொன்றும் ராஸ்கல் என்று சொல்லுமளவுக்கு இருக்கும். குழந்தைகளின் முயற்சியால் அவர்கள் சேர்ந்தார்களா என்பதுதான் படம்.”

“அரவிந்த்சாமி ஹேண்ட்சம் ஹீரோ. அவருக்கு இந்த ரஃப் & டஃப் கேரக்டர் பொருந்துமா?”

“மலையாளத்தில் மம்முட்டி செஞ்சதை ரெஃபரன்ஸா வெச்சி பிரமாதப்படுத்தியிருக்கார். அதே நேரம் மம்முட்டி சாயல் வந்துடாமே தன்னோட தனித்துவத்தையும் காப்பாத்திக்கிட்டிருக்காரு. அவருடைய செகண்ட் இன்னிங்ஸ், ‘தனி ஒருவன்’ படத்தில் ஆரம்பிச்சப்பவே தடாலடி வில்லனாகத்தான் ஆரம்பிச்சாரு. இந்தப் படத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு பண்ணியிருக்கிறார். ஒரிஜினல் கதாபாத்திரத்தின் நம்பகத்தன்மை கெடக்கூடாதுன்னு அதிகம் மெனக்கெடல் போட்டு நடிச்சிருக்காரு. அவருடைய டெடிகேஷன், இன்வால்வ்மென்டை எல்லாம் படம் பார்க்குறப்போ நீங்களே உணர்வீங்க.

கேரக்டருக்காக தினமும் ஜிம் ஒர்க் அவுட் பண்ணி இயக்குநரிடம் ‘இந்த லுக் ஓக்கேவா’ன்னு கேட்பார். இயக்குநர் ஏதாவது மாற்றம் சொன்னால் அதையும் உடனே செஞ்சு காட்டுவார். ‘தனி ஒருவன்’ பட வில்லன் பெர்ஃபாமன்ஸுக்கும் இந்தப் படத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். மொத்தத்தில் ஒரு இயக்குநரின் நடிகராக தன்னை வெளிப்படுத்தினார். அதே மாதிரி தயாரிப்பாளரின் கஷ்டத்தை உணர்ந்து நடித்தார். இந்தப் படத்தில் நடிக்கும்போது அரவிந்த்சாமி அட்வான்ஸ் வாங்காமல்தான் நடித்தார். அந்த மனதுடையவர்கள் சினிமா இண்டஸ்ட்ரியில் அபூர்வம்.”

“அமலா பால்?”

“சும்மா மிரட்டியிருக்கிறார். இளம் விதவையாக வாழ்ந்து காட்டியிருக்காங்க. ஒரிஜினல் கேரக்டரில் நயன்தாரா மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதை ஈடு கட்டுமளவுக்கு அமலாவும் சிறப்பாகப் பண்ணியிருக்காங்க. ஆரம்பத்தில் இந்தக் கேரக்டரில் அமலா பாலை நடிக்க வைக்க தயக்கம் இருந்தது. ஏன்னா, அமலா பாலுக்கு பெயர் சொல்லும் படியாக படங்கள் இல்லை என்பதுதான் உண்மை. ஆனால் எங்கள் தேர்வு சரி என்பதை தன்னுடைய திறமையான நடிப்பால் வெளிப்படுத்தினார்.

இளம் வயதில் நடிகைகள் அம்மா ரோலில் நடிக்க தயக்கம் காட்டுவார்கள். ஆனால் இமேஜ் பற்றி கவலைப்படாமல் அமலா பால் நடித்தார். இவர்களோடு ‘கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை’ பாடலில் வரும் ராகவன், நடிகை மீனாவின் மகள் நைனிகா ஆகியோரும் இருக்கிறார்கள். காமெடிக்கு சூரி, ரோபோ சங்கர் ஆகியோருடன் நானும் கூட்டணி அமைத்துள்ளேன். நாசர் முக்கியமான ரோல் பண்ணியிருக்கிறார். மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி நடித்துள்ளார்.”

“இசை?”

“அம்ரேஷ். ஜெயசித்ராவோட பையன்னுதான் ஃபேமஸ் ஆனார். ஆனா, தன்னோட தனித்திறமையாலே இன்னிக்கு இண்டஸ்ட்ரியில் நல்ல பேர் எடுத்திருக்காரு. இந்தப் படத்துக்கும் மிகச் சிறப்பாக பாடல்கள், பின்னணி இசை கொடுத்திருக்கிறார். ஆண்ட்ரியா பாடிய பாடல் ஏற்கனவே செம ஹிட். ஒளிப்பதிவு விஜய் உலகநாத். ஒரிஜினல் படத்துக்கும் அவரே பண்ணியிருந்ததால் மலையாளப் படத்தோட விஷுவல் போல் இல்லாமல் தமிழுக்கு ஏற்ற மாதிரி பண்ணியிருக்கிறார்.

ஆர்ட் டைரக்டர்  ஜோசப் நெல்லிகல். மலையாளத்துக்கும் அவர் தான். இந்தப்  படத்தை தமிழில் பண்ணும்போது இயக்குநரிடம் நான் சொன்ன ஒரே விஷயம் ‘‘கேமராமேன், ஆர்ட் டைரக்டர் இருவரையும் எந்தக் காரணத்தைக் கொண்டும் மாற்றாதீர்கள்’’ என்றேன். படம் முடிந்து ஃபைனல் அவுட்புட் பார்க்கும்போது அதன் பலனைப் பார்க்க முடிந்தது.

சண்டைக் காட்சிகள் சூப்பரா வந்திருக்கு. அந்தப் பெருமை சண்டை இயக்குநர் பெப்சி விஜயனுக்குத்தான். அவருக்கு இது  500வது படம். நாங்கள் சண்டைக் காட்சிக்காகக் கொடுத்த பட்ஜெட் அவருக்கு போதவில்லை. இந்தக் கதைக்கு சண்டைக் காட்சிகள் எவ்வளவு அவசியம் என்று எங்களுக்குப் புரியவைத்து காம்ப்ரமைஸ் இல்லாமல் பண்ணினார்.”

“திடீர்னு வசனம் எழுதியிருக்கீங்க?”

“திடீர்னு எல்லாம் இல்லை. சினிமாவில் எந்த வேலை கிடைக்குதோ அதை தயக்கமில்லாமே ஏத்துக்கிட்டு செய்யுறவன் நான். இயக்குநர் சித்திக் ‘ஃப்ரண்ட்ஸ்’ படத்திலிருந்து எனக்கு நல்ல பழக்கம். அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ஆடு நடந்துச்சி, மாடு நடந்துச்சி’ என்ற டயலாக் அவருக்குப் பிடிக்கும். அது நான் எழுதிய டயலாக்தான். அந்த டயலாக்கிற்கு ஆடியன்ஸிடம் செம ரெஸ்பான்ஸ்.

சித்திக் சார் படங்களுக்கு தொடர்ந்து வசனம் எழுதியவர் காலமாகிவிட்டதால் எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்தார். ஹர்ஷினி மூவீஸ் முருகன் தயாரித்திருக்கிறார். பரதன் பிலிம்ஸ் விஸ்வநாதன் வெளியிடுகிறார். ரீமேக் படம் ஓடினால் கொண்டாடுவாங்க. இல்லைன்னா ஒரிஜினல் மாதிரி இல்லையே என்று சொல்லிவிடுவார்கள். அதை மனதில் வைத்து மிகக் கவனமாகப் பண்ணியிருக்கிறோம். இது நேரடி படம் போல் ஃபீல் குட் படமாக இருக்கும்.”

- சுரேஷ்ராஜா