சாவித்திரிக்காக குண்டானேன்! கீர்த்தி நெகிழ்ச்சி



விஜய், விக்ரம், விஷால் என்று தமிழின் முன்னணி நடிகர்களின் ஜோடி இவர்தான். சம்பள ரீதியாகவும் கூட கீர்த்தி சுரேஷ்தான் லீடிங்கில் இருக்கிறார் என்கிறார்கள். நெம்பர் ஒன் இடத்தை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், அருமையான கேரக்டர், நல்ல படம் என்றால் சம்பளம் பற்றிக் கவலைப்படாமல் கச்சிதமாக பிடித்துக் கொள்கிறார். நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் அவர் மிஸ் செய்யவில்லை.

“சாவித்திரியா நடிக்கற வாய்ப்பு எப்படி கிடைத்தது?”

“நான் ‘தொடரி’ டீமுக்குத்தான் நன்றி சொல்லணும். அந்தப் படத்தில் நான் வெளிப்படுத்தியிருந்த நடிப்புதான் இந்த வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. ஹானஸ்ட்டா சொல்வதாக இருந்தால் மற்ற படங்களைவிட இந்தப் படத்தில் நடிப்பதற்கு அதிகம் யோசித்தேன். இயக்குநர் நாக் அஸ்வின் சொன்ன நரேஷன் பிடித்திருந்தாலும், உடனே ஓக்கே சொல்லவில்லை. ஏன்னா, இந்த ப்ராஜக்ட் சில கேள்விகளை முன்வைத்தது. அதில் முதல் கேள்வியாக என்னால் சாவித்திரி அம்மா மாதிரி நடிக்கமுடியுமா என்பதுதான்.

அவருடைய வாழ்க்கையில் நல்ல விஷயங்களும் இருக்கிறது. சில கசப்பான விஷயங்களும் இருக்கிறது. நல்லதை சொல்லும் போது எந்தப் பிரச்சனையும் வரப்போவதில்லை. ஆனால் நெகடிவ் பக்கங்களை சொல்லும் போது கான்ட்ரவர்ஸி வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் சாவித்திரி அம்மாவின் புகழுக்கு களங்கம் ஏற்படாத மாதிரி மிக அற்புதமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் நாக் அஸ்வின். சுமார் மூன்று மணி நேரம் என் சந்தேகங்களுக்கு மிகப் பொறுமையாக விளக்கம் கொடுத்தார் இயக்குநர்.”

“நிறைய ஹோம் வொர்க் பண்ணியிருப்பீங்களே?”

“ஆக்ட்ரஸ்னா ஹோம் வொர்க் பண்ணாமே பெர்ஃபார்ம் பண்ணமுடியாது. இந்தப் படத்தில் நான் கமிட்டானதும் இயக்குநர் நாக் அஸ்வின் ஒரு பென்டிரைவ் கொடுத்தார். அதில் சாவித்திரியின் ‘மாயாபஜார்’, ‘களத்தூர் கண்ணம்மா’, ‘மிஸ்ஸியம்மா’, ‘திருவிளையாடல்’, ‘கந்தன் கருணை’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘பரிசு’, ‘பாசமலர்’, ‘பாவமன்னிப்பு’, ‘கைகொடுத்த தெய்வம்’ உள்ளிட்ட ஏராளமான படங்களின் முக்கியமான காட்சிகள் இருந்தது.

அதில் அவருடைய நடை, டிரஸ் சென்ஸ், புன்னகை, அழுகை, கோபம், ஹியூமர் சென்ஸ் என அனைத்தும் இருந்தது. அந்த ரெஃபரன்ஸ் காட்சிகள் எனக்கு யூஸ்ஃபுல்லாக இருந்தது. படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் மேக்கப் டெஸ்ட் எடுத்தார்கள். அதிலிருந்து என்னால் இந்தப் படத்தில் நடிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கை அதிகமாகியது.”

“படப்பிடிப்பு அனுபவம்?”

“இதுவரை நடித்த படங்களிலேயே அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்த படம் இதுவாகத்தான் இருக்கும். சுமார் பத்து மாதங்களாக படப்பிடிப்பு நடைபெற்றது. சாவித்திரி கேரக்டருக்காக ஸ்பெஷல் மேக்கப் தேவைப்பட்டது. தினமும் மேக்கப் போடவே மூன்று மணிநேரம் ஆகும். சாவித்திரி அம்மாவின் முகம் வசீகரமானது. அதே பொலிவைக் கொண்டு வருவதற்கு கண், புருவங்கள், உதடு, ஹேர்ஸ்டைல் என சகல விஷயங்களிலும் அதிக கவனம் எடுத்து என்னை சாவித்திரியாக மாற்றினார்கள்.

இயக்குநர் கொடுத்த பென்டிரைவ் இல்லாமல் நானும் சாவித்திரி அம்மா நடித்த சில படங்களைப் பார்த்து அதிலிருந்து சில விஷயங்களை உள்வாங்கி நடித்தேன். நான் இப்போது ஒல்லியாக இருக்கிறேன். ஆனால் சாவித்திரி அம்மாவின் உடல் சற்று குண்டாக இருக்கும். என்னை குண்டாகக் காண்பிக்கவும் ஸ்பெஷல் மேக்கப் தேவைப்பட்டது. அதே மாதிரி கடைசி காலத்தில் அவர் மெலிந்த தேகத்துடன் காணப்பட்டார். அதுபோலவும் நான் மாறி நடித்தேன்.

செட்டுக்கு நிஜ கீர்த்தியாக வரும் நான் செட்டுக்குள் போனபிறகு சாவித்திரி அம்மா மாதிரி சற்று குண்டாக நடமாடுவேன். அந்த மாதிரி மாற்றுவதற்கு நான்கு மணி நேரம் ஸ்பெஷல் மேக்கப் தேவைப்பட்டது. மேக்கப் போடும் போது அதிகம் பேசமுடியாது. விருப்பமான உணவுகளைச் சாப்பிட முடியாது. அப்படியே சாப்பிட்டாலும் ஜூஸ் மாதிரி திரவ உணவுகளைத்தான் எடுத்துக் கொள்ள முடியும்.”

“சாவித்திரி குடும்பத்தினர் என்ன சொல்லுறாங்க?”

“சாவித்திரி அம்மா சினிமாவில் எப்படி இருப்பார் என்பதற்கு ஏராளமான ரெஃபரன்ஸ் தமிழ், தெலுங்கு படங்களில் இருக்கிறது. ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர் எப்படி இருப்பார் என்பது எனக்குத் தெரியாது. அவரைப் பற்றித் தெரிந்தவர்கள் நிறைய பேர் இருந்தாலும், நான் இந்தப் படத்தில் கமிட்டானதும் சாவித்திரியின் மகள் சாமுண்டீஸ்வரி வாழ்த்து தெரிவித்ததோடு எனக்கு உதவி செய்யவும் முன்வந்தார்.

தன் அம்மாவின் பெர்சனல் லைஃப் ஸ்டைல் பற்றி என்னிடம் பகிர்ந்துகொண்டார். அவருக்கு என்ன உணவு பிடிக்கும், என்ன டிரஸ் பிடிக்கும், வீட்டில் அவருடைய அப்ரோச் எப்படி இருக்கும், உறவினர்கள், நண்பர்களிடம் எப்படிப் பழகுவார் என்று நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார். ஓரிருமுறை செட்டுக்கே வந்து உற்சாகப்படுத்தினார்.”

“படத்தில் ‘மாயாபஜார்’ படத்தின் காட்சிகள் அதிகம் இடம் பெற்றுள்ளதாமே?”

“சாவித்திரி அம்மா நடித்த வெற்றிப் படங்களின் ஹைலைட்டான காட்சிகளை இந்தப் படத்தில் பார்க்கலாம். அதில் ‘மாயா பஜார்’ படத்தில் வரும் காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அந்தப் படத்தில் வந்த மாதிரி செட் அமைத்து எல்லாத்தையும் புதுசா வடிவமைத்தோம். ‘மாயா பஜார்’ படத்துலஎஸ்.வி.ரங்காராவ் பிரமாதமாக நடித்திருப்பார்.

அந்த வேடத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு நடித்திருக்கிறார். அந்தக் காட்சிகள் ரசிகர்களால் அதிகம் பேசப்படும். சாவித்திரியுடன் நடித்த நாகேஸ்வராவ், என்.டி.ஆர், பானுமதி, செளகார் ஜானகி போன்ற கேரக்டர்களும் படத்தில் இருக்கிறார்கள். சிவாஜி மாதிரி நடிக்க தகுந்த நடிகர் யாரும் அமையாததால் சிவாஜி கேரக்டர் படத்தில் இடம் பெறவில்லை. எம்.ஜி.ஆர் கேரக்டரும் படத்தில் இருக்காது.”
“படத்துல உங்களுக்கு ஜோடி யார்?”

“துல்கர் சல்மான். படத்துல ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் வர்றார். எனக்கும் துல்கருக்குமான ஆன் ஸ்கிரீன் கெமிஸ்ட்ரி பிரமாதமா ஒர்க் அவுட்டாகியிருக்கு. கேமராவுக்குப் பின்னாடி துல்கர் செம ஜோவியலாகப் பழகுவார். கேமராவுக்கு முன்னாடி சீரியஸாகி பின்னியெடுப்பார். கதைக்கு திருப்புமுனையான கேரக்டரில் சமந்தா நடித்திருக்கிறார். நானும் சமந்தாவும் சில காட்சிகளில் இணைந்து நடித்துள்ளோம்.”

“சொந்தக் குரலில் பேசிய அனுபவம் எப்படி இருந்தது?”

“தமிழ் எனக்கு பரிச்சயமான மொழி என்பதால் பெரியளவில் கஷ்டப்படவில்லை. ஆனால் தெலுங்கு டப்பிங் மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஏன்னா, சாவித்திரி அம்மா தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர். அவர் தெலுங்கில்தான் மிக அருமையாக மாட்லாடுவார். எனவே தெலுங்கு டப்பிங்குக்குத்தான் ரொம்பவும் மெனக்கெட்டேன்.”

“கேமரா, மியூசிக்?”

“ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த டேனி லோபஸ் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். ஹாலிவுட், பாலிவுட் படங்களில் பிஸியாக இருப்பவர். அவருடைய ஒளிப்பதிவு படத்துக்கு பெரியளவில் பலம் சேர்க்கும் என்று நம்புகிறோம். சின்னச் சின்ன விஷயங்களிலும் மிக கவனமாக இருப்பார். மிகப் பெரிய லெஜண்டோட வாழ்க்கையை படமாக்குகிறோம். தரம் குறைஞ்சிடக் கூடாதுன்னு கண்டிப்பா இருந்தார். அவரை மாதிரியே மியூசிக் டைரக்டர் மிக்கி ஜே.மேயர் கலக்கியிருக்கிறார்.”

“படம் பற்றி ‘வண்ணத்திரை’க்கு எக்ஸ்க்ளூஸிவ்வா ஏதாவது சொல்லுங்களேன்?”

“ஒரு நடிகையாக சாவித்திரி எப்படி கலைத்துறைக்கு என்ட்ரி கொடுத்தார், நாடகங்களில் நடித்தது, சென்னைக்கு வந்து சினிமாவில் நடித்தது போன்ற சுவாரஸ்யமான காட்சிகளும் இருக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் எப்படி முன்னணி நடிகையாக வலம் வர முடிந்தது, ஜெமினி கணேசனுடன் காதல் மலர்ந்தது எப்படி, அவருடைய கடைசிக் கால வாழ்க்கை எப்படி இருந்தது போன்ற அழுத்தமான விஷயங்களை உண்மைக்கு மிக அருகில் சென்று சொல்லியுள்ளோம்.

சாவித்திரி அம்மா கார் பிரியை. புதுசா கார் வந்தால் முதல் ஆளாக அந்தக் காரை வாங்கிவிடுவாராம். அந்தக் காலத்தில் அறிமுகமான எல்லா வகை கார்களையும் வைத்திருந்தாராம். அதைப் பற்றிய காட்சிகளும் படத்தில் இருக்கிறது.இந்தப் படத்தில் சாவித்திரி கேரக்டர் அணியும் ஆடைகள் பெண்களிடையே பெரிய வரவேற்பைப் பெறும் என்று நினைக்கிறேன். முதன் முறையாக இந்தப் படத்தில் 120 காஸ்டியூம்ஸ் அணிந்து நடித்துள்ளேன்.

ஒரே படத்தில் இவ்வளவு காஸ்ட்யூம்ஸா என்று ஆடை வடிவமைப்பாளரான நானே வியந்தேன் என்றால் படத்துல காஸ்டியூம்ஸ் எப்படி அசத்தலாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஏன்னா, நான் இதுவரை நடித்த படங்களில் அப்படி அணிந்ததில்லை. நான் படித்த படிப்பு இந்தப் படத்துக்கு உதவியாக இருந்தது. அடுத்து வேறு யாருடைய வாழ்க்கை வரலாறு படங்களில் நடிப்பீர்கள் என்று கேட்கிறார்கள். இனிமேல் அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிக்கமாட்டேன்.

இந்த சின்ன வயதில் மாபெரும் புகழுக்கு சொந்தக்காரரான சாவித்திரி அம்மாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததை எனக்குக் கிடைத்த கெளரவமாகப் பார்க்கிறேன். அவருடைய ரசிகர்கள் மட்டுமல்ல, படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகனும் சாவித்திரியின் புகழை மேன்மேலும் கொண்டாடும் விதமாக ‘நடிகையர் திலகம்’ படம் உருவாகியுள்ளது. மொத்தத்தில் அனைத்துத் தரப்பு ரசிகர்களும் இந்தப் படத்தைக் கொண்டாடுவார்கள்.”

“நெக்ஸ்ட்?”

“சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘விஜய் 62’படம். ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்‌ஷன். ‘பைரவா’ படத்துக்குப் பிறகு விஜய் சாருடன் இவ்வளவு சீக்கிரத்தில் ஜோடி சேருவேன் என்று நினைக்கவில்லை. சினிமாவுக்கு வருவதற்கு முன் ஒரு ரசிகையாக விஜய் சாரை நேரில் சந்திக்க வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டிருக்கிறேன்.

இப்போது குறுகிய காலத்தில் அவருடன் மீண்டும் நடிப்பதில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். ‘நடிகையர் திலகம்’ படம் கமிட்டானதும் விஜய் சார் வாழ்த்துகள் சொன்னார். விக்ரமுடன் ‘சாமி-2’ படத்திலும் விஷாலுடன் ‘சண்டக்கோழி -2’ படத்திலும் நடிக்கிறேன்.”

- சுரேஷ்ராஜா