சினிமாவாகிறது டீக்கடை அரட்டை!



“பேய் சீசன், காமெடி சீசன் மத்தியில் ஃபேமிலி ஓரியண்ட்டட் படங்கள் வெளிவந்து பல நாள்கள் ஆகிவிட்டது. புதுப்புது ஜானர்களில் படங்கள் வெளிவருவது வரவேற்க வேண்டிய விஷயம். ஆனால், ஃபேமிலி சப்ஜெக்டுக்கு என்று ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு உள்ளது. அந்த வகையில் டீக்கடையை மையமாக வைத்து உருவாகும் ஒரு அருமையான ஃபேமிலி டிராமாதான் ‘டீக்கடை பெஞ்ச்’.

டீக்கடை பெஞ்ச் என்றாலே ஒன்றுக்கும் உதவாத விஷயங்களைப் பேசி காலம் தள்ளுகிறவர்களைப் பற்றித்தான் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் என்னுடைய நாயகன் டீக்கடையில் உட்கார்ந்து நல்ல விஷயங்களைப் பேசி வாழ்க்கையில் எப்படி முன்னேற்றம் காண்கிறார் என்பதைச் சொல்லியிருக்கிறேன்.

நட்புக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம்? ஃபேமிலிக்கும் நட்புக்கும் என்ன வித்தியாசம் என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறேன். ஆக்‌ஷனைத் தவிர கமர்ஷியல் படங்களில் இருக்கும் எல்லா விஷயங்களும் படத்துல இருக்கும்’’ என்று நான்ஸ்டாப்பாக உற்சாகம் கொப்பளிக்க பேசுகிறார் ராம்ஷேவா. நாயகனாக ராமகிருஷ்ணன், நாயகியாக புதுமுகம் தருஷி நடிக்கும் ‘டீக்கடை பெஞ்ச்’ படத்தின் அறிமுக இயக்குநர். ‘கண்ணெதிரே தோன்றினாள்’  ரவிச்சந்திரனிடம் சினிமா பயின்று இப்போது டைரக்டராக புரொமோஷன் வாங்கியிருக்கிறார்.

“கதை?”

‘‘இது சென்டிமென்ட் கலந்த நகைச்சுவைக் கதை. நாயகன் ராமகிருஷ்ணன் குடும்பத்துக்கு சொந்தமான பரம்பரை சொத்து ஒன்றை நாயகி தருஷி நாயகன் வீட்டிலிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துச் செல்கிறார். இதை அறிந்த நாயகன் நாயகியிடம் கேட்க இருவருக்கும் மோதல் உண்டாகிறது. இதனால் நண்பர்கள், குடும்பத்தினரின் பகையைச் சம்பாதிக்க நேரிடுகிறது. இறுதியில் நட்பு வென்றதா அல்லது காதல் வென்றதா என்பதை முழுக்க முழுக்க காமெடி கலந்து சொல்லியிருக்கிறேன்.”

“ஹீரோ ராமகிருஷ்ணன்?”

“அற்புதமான மனிதர். சினிமா மீது பேஷன் உள்ளவர். என்னைப் பொறுத்தவரை அவருக்கான அங்கீகாரம் கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றுதான் சொல்வேன். இந்தக் கதையில் ராமகிருஷ்ணன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரை மனதில் வைத்து எழுதினேன். முதன் முதலாக அவரை நேரில் சந்தித்த போது நான் எதிர்பார்த்த மாதிரியே கதைக்குப் பொருத்தமாக இருந்தார். கதை சொன்ன அந்த முதல் நாளிலிருந்து இப்போது வரை எனக்கு சப்போர்ட்டிவ்வாக இருக்கிறார்.

படத்துல அவர் கேரக்டர் பெயர் சிவா. படித்துவிட்டு வேலைக்காகக் காத்திருக்கும் கேரக்டர். ஒரு நடுத்தரக் குடும்பத்தில் இருக்கிற இளைஞனைப் பிரதிபலிக்கும் வகையில் அவருடைய கேரக்டர் இருக்கும்.ஒரு இளைஞன் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அழுத்தமாகவும் அதே வேளையில் அவர்களைக் கஷ்டபடுத்தாமல் எப்படி கலகலப்பாக வைத்திருக்க வேண்டும் என்பதையும் யதார்த்தமாக வெளிப்படுத்தியிருப்பார். அவருடைய சினிமா கேரியரில் இந்தப் படம் பெரிய திருப்பமாக இருக்கும்.”

“ராமகிருஷ்ணனுக்கு ஜோடி?”

“இந்தக் கதைக்கு நயன்தாரா மாதிரி ஹோம்லி லுக்ல இருக்கிற ஹீரோயின் தேவைப்பட்டார். நயன்தாரா மேடம் கிளாமர் கேரக்டர்ஸ் பண்ணி இருந்தாலும் சமீபத்துல வந்த ‘அறம்’ படத்துல ஹோம்லி காஸ்ட்யூமான புடவையில் பிரமாதமா செட் ஆகியிருப்பாங்க. ஆரம்பத்துல சில மேனேஜர்கள் மூலம் ஹீரோயின் தேடுதல் படலம் நடந்தது. எதுவுமே செட் ஆகவில்லை. கடைசியாக நாங்க நடத்துன ஆடிஷனில் எழுபது, எண்பது பேர் கலந்துக்கிட்டாங்க. அதுல செல்க்ட் ஆனவர்தான் தருஷி. ஆடிஷன்லேயே பிச்சு உதறினாங்க. கேரளா இறக்குமதின்னா சும்மாவா? கேரக்டர் பெயர் பவித்ரா. பிரமாதமான ரோல் பண்ணியிருக்கிறார்.”

“மற்ற நட்சத்திரங்கள்?”

“ஹீரோயின் அப்பாவா ‘பட்டிமன்றம்’ புகழ் ராஜா பண்ணியிருக்கிறார். பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் பிஸியாக இருக்கும் அவர் கதை மீதுள்ள நம்பிக்கையில் நடிக்க சம்மதித்தார். மகளை விட்டுக் கொடுக்காத அப்பா, அழகான குடும்பத் தலைவர் என்று நடிப்புக்கு ஸ்கோப் உள்ள கேரக்டரை தன் இயல்பான நகைச்சுவைப் பேச்சால் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

சரியான நேரத்துக்கு படப்பிடிப்புக்கு வந்தது, நான் சொன்னதை பொறுமையாகக் கேட்டு ஒத்துழைப்பு கொடுத்தது என்று எல்லா வகையிலும் எனக்கு உதவியாக இருந்தார். நாயகனின் அம்மாவா ‘பருத்திவீரன்’ சுஜாதா பண்ணியிருக்கிறார். கண், புருவம் என்று முகபாவங் களாலேயே மிரட்டக்கூடிய அற்புதமான ஆர்ட்டிஸ்ட்.

நாயகனின் அப்பாவாக சித்ரா லட்சுமணனும், அம்மாவாக ‘கருத்தம்மா’ ராஜயும் பண்ணியிருக்கிறார்கள். டி.பி.கஜேந்திரன், நிரஞ்சன், நட்ராஜன், அத்திக், ‘பருத்திவீரன்’ செவ்வாழை, மனிஷா ஆகியோரும் இருக்கிறார்கள்.என்னுடைய நாயகன் உள்பட இந்தப் படத்துல மூன்று இயக்குநர்கள் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த விஷயங்களை பண்ணும் போது அவர்களுடைய அனுபவத்தால் சின்ன சின்ன விஷயங்களை கரெக்ட் பண்ணியது யூஸ்ஃபுல்லா இருந்தது.”

“டெக்னீஷியன்ஸ் பற்றி?”

“புகழ்பெற்ற டெக்னீஷியன்கள் இருந்தால் எப்படி அவுட்புட் கிடைக்குமோ அதே அவுட்புட்டை என்னுடைய டெக்னீஷியன்கள் கொடுத்திருக்கிறார்கள்.
வெங்கடேஷ் ராவ் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். மறைந்த ப்ரியன் சாரின் உதவியாளர். ‘தண்ணி வண்டி’, ‘ஆணியை புடுங்க வேண்டாம்’ போன்ற படங்களில் வேலை பார்த்துள்ளார். ரிலீஸைப் பொறுத்தவரை அவருக்கு இதுதான் முதல் படமாக வெளிவரவுள்ளது. நான் எதிர்பார்த்த விஷயங்களை வேகமாகவும் பிரமாதமான விஷுவல்ஸ் ட்ரீட்மென்ட்டோடும் எடுத்துக் கொடுத்தார்.

இது எனக்கு முதல் படம் என்பதால் படத்தை முடிந்தளவுக்கு ரிச்சாகக் காண்பிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் பட்ஜெட் அதற்கு இடம் கொடுக்கவில்லை. ஆனால் என் கனவை கேமராமேன் நிஜமாக்கிக் காட்டினார். தூரத்தில் போய் எடுத்தால் கிடைக்கக்கூடிய ரிசல்ட்டை பழனி, கொடைக்கானல், பொள்ளாச்சி, சென்னை என்று இங்கு உள்ள லொக்கேஷன்களிலேயே படமாக்கி நல்ல ரிசல்ட் கொடுத்தார்.

இந்தப் படத்துக்கு இசை யமைக்கும்  சாய் தேவ் என் நண்பர். தெலுங்கில் பிஸியாக இருக்கிறார். நீங்கதான் பண்ணவேண்டும் என்று அழைத்து வந்துள்ளேன். வெரைட்டியா ஐந்து பாடல்கள் கொடுத்திருக்கிறார். அனுராதா ராம், ஸ்வேதா மோகன், பிரசன்னா, கானா பாலா ஜெகதீஸ்வரன் பாடியுள்ளார்கள். கானா பாலா பாடியுள்ள ‘டேஞ்சர்...டேஞ்சர்...’ பாடல் கலக்கல் கானாவாக வந்துள்ளது. லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் என்னுடைய தயாரிப்பாளர்கள்.

எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி. ‘கண்ணெதிரே தோன்றினால்’ ரவிச்சந்திரன் சாரிடம் ‘நட்பதிகாரம்-79’ உள்பட சில படங்களில் உதவியாளராக வேலை பார்த்தேன். எனக்கு நன்றாக விவரம் தெரிந்த நாளிலிருந்து சினிமா இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கடவுள் அனுக்கிரத்தால் உதவி இயக்குநர் வேலை கிடைத்தது. ரவிச்சந்திரன் சாரிடமிருந்து வெளியே வந்ததும் தயாரிப்பாளர்களைத் தேடினேன்.

அப்படி நான் சந்தித்த முதல் தயாரிப்பாளர்தான் வி.ஜெ.ரெட்டி. ஆனால் அவரால் ஓரளவுக்குத்தான் செலவு செய்ய முடிந்தது. அடுத்து எஸ்.செந்தில்குமார் என்னை நம்பி பணம் போட்டார். மூன்றாவதாக என்.செந்தில்குமார் பெரிய தொகையை முதலீடு செய்திருக்கிறார். இந்த மூன்று நல்ல உள்ளங்களால்தான் இந்தப் படத்தை உருவாக்க முடிந்தது.”

- சுரேஷ்ராஜா