மலையாளத்து காந்தக் கண்ணழகி!



‘டப்ஸ்மாஷ்’ மிருணாளிணி, ‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரில் பாணியில் சோஷியல் மீடியா டிரெண்டிங் அழகிகளில் லேட்டஸ்ட் வரவு பிரியா பிரகாஷ் வாரியர். ஓமர் லுலுவின் இயக்கத்தில் வெளியாக விருக்கும் ‘ஒரு அடார் லவ்’ என்கிற மலையாளப் படத்தின் மூலம் ஹீரோயினாகிறார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட சிங்கிள் டிராக் பாட்டு இணைய தளங்களில் வைரல் ஹிட். பள்ளிச் சீருடையில் பிரியா காட்டும் கண்ஜாலங்களால் கிறங்கிப் போயிருக்கிறார்கள் இளசுகள். பிரியாவின் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்துக்கு படையெடுத்து ஒரே நாளில் ஆறு லட்சம் பேர் ஃபாலோயர் ஆகியிருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் இப்படி ஒரே நாளில் அதிக ஃபாலோயர்களைப் பெற்ற கணக்கில் உலகளவில் மூன்றாவது இடத்தை எட்டிப் பிடித்திருக்கிறார் பிரியா.

Who is this காந்தக் கண்ணழகி? கேரளாவில் திரிச்சூர் பக்கம். இப்போது பி.காம் முதலாண்டு படிக்கிறார். வயசு வெறும் பதினெட்டுதான். சோஷியல் மீடியாவில் கடலை போட்டுக் கொண்டிருந்தவருக்கு துண்டு, துக்கடா ரோல்களை கொடுக்க இயக்குநர்கள் முன்வந்தார்கள். அதிலெல்லாம் அவர் பளிச்சிட, இப்போது மெயின் ரோலுக்கு தேர்வாகியிருக்கிறார்.

 ‘ஒரு அடார் லவ்’ வெளிவருவதற்கு முன்பே, இவரது புகழ் தேசிய அளவில் பிரபலமாகிவிட, இப்போது தென்னிந்தியாவின் பெரிய இயக்குநர்கள் பலரும் பிரியா வாரியர் வீட்டுக் கதவைத் தட்டத் தொடங்கியிருக்கிறார்களாம்.
 

- ஷாலினி நியூட்டன்