சொல்லிவிடவா



காதல் போர்!

`டிவி 6’ சேனலில் நிருபராக இருக்கிறார் சாந்தன் குமார் . சேனலின் போட்டியாக உள்ள `ஏ 3’ சேனலில் நிருபராக வேலை செய்பவர், ஐஸ்வர்யா அர்ஜுன். அப்பா அம்மாவை இழந்த அவர், தாத்தா கே.விஸ்வநாத் பாதுகாப்பில் வளர்ந்து வருகிறார்.

அத்தை சுஹாசினியின் மகன் ராகுலுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நிச்சயமாகிறது. கார்கில் போர் நிகழ்வுகளை நேரடியாகப் படம் பிடித்து, தங்கள் சேனலுக்கு புகழ் கூட்டும் நோக்கில் சாந்தன்  குழுவில்  சதீஷ், பாண்டி ஆகியோரும், ஐஸ்வர்யாவுடன் யோகி பாபு, போண்டா மணி ஆகியோரும்  கார்கில் கிளம்புகின்றனர்.

சூழ்நிலையைக்கண்டு பயந்துபோன மற்றவர்கள் சென்னைக்குத் திரும்பிவிட, சாந்தனும் ஐஸ்வர்யாவும் உயிருக்கு பயப்படாமல் போர்க்களத்தைப் படம் பிடிக்கிறார்கள். அங்கு இருவருக்கும் காதல் மலர்கிறது. ஆனால், சொல்லிக்கொள்ளத் தயங்குகின்றனர். அசைன்மென்ட் முடித்து,  சென்னைக்குத் திரும்பும் ஐஸ்வர்யாவுக்கு  திருமண ஏற்பாடு நடக்கின்றது.

ஐஸ்வர்யாவைக் கைபிடித்தது யார் என்பதை உணர்வுபூர்வமாகச் சொல்லும் படம். அறிமுக நாயகன்  சாந்தன் குமார் இயல்பாக நடித்துள்ளார். ஆறடி உயரம் மற்றும் சிக்ஸ் பேக் உடலமைப்பு அவரது கேரக்டருக்கு கைகொடுக்கின்றன. போர்க்களத்தில் நேரும் இழப்புக்கு கண்ணீர் சிந்துவது, காதலைச் சொல்ல முடியாமல்  தவிப்பது என தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஐஸ்வர்யா அர்ஜுனின் நடிப்பில் முதிர்ச்சி தெரிகிறது.

காதல் சம்பந்தப்பட்ட காட்சிகளில் உணர்வைக் கொட்டியும், போர்க்களத்தில் ஆக்ரோஷமாகவும் நடித்திருக்கிறார். நடனத்திலும் மகிழ வைக்கிறார்.
சுஹாசினி, கே.விஸ்வநாத் இருவரும் பாசம் நிறைந்த பண்பட்ட நடிப்பை பக்குவமாக வழங்கியிருக்கிறார்கள்.

கார்கில் போரில் மகனை இழந்த கதாபாத்திரத்தில் நெகிழவைக்கிறார் பிரகாஷ்ராஜ். `உங்க அம்மா பிராமின், ஆனா நான் விரால் மீன்’ - என வசனம் பேசும்  `நான் கடவுள்’ ராஜேந்திரன்  சிரிக்க வைக்கிறார். சதீஷ், யோகி பாபு, பாண்டி ஆகியோரின் காமெடிகளுக்கு சிரமப்பட்டு சிரிக்க வேண்டியுள்ளது.

ஜெஸ்சி கிப்ட் இசையில் ஒவ்வொரு பாடலும் தனி ரகமாக ஒலிக்கிறது. போர்க்களக்காட்சியில் புகுந்து விளையாடியிருக்கிறது வேணுகோபாலின் கேமரா. தேசப்பற்று நிறைந்த படத்தில் மென்மையான காதலையும் அழகாகச் சொல்லி விறுவிறுப்பாக இயக்கியிருக்கிறார் ஆக்ஷன் கிங் அர்ஜுன். ஒரு பாடலுக்கு நடனமாடியும் அசத்தியுள்ளார்.