17 ஆண்டுகளுக்குப் பிறகு படத்தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனம்!



‘நம்ம  ஊரு பூவாத்தா’, ‘ராக்காயி கோயில்’, ‘பெரிய கவுண்டர் பொண்ணு’, ‘கட்டபொம்மன்’, ‘நாடோடி மன்னன்’ (சரத்குமார் நடித்தது), ‘மாப்பிள்ளை கவுண்டர்’ உட்பட  பதினாறு சூப்பர் ஹிட் படங்களைத் தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் பட நிறுவனம் பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் ஈடுபட உள்ளனர்.

இந்நிறுவனத்தின் தயாரிப்பாளரான மணிவாசகம்தான் இந்த அனைத்துப் படங்களையும் இயக்கியவர். அந்தக் காலகட்டத்தில் வணிக ரீதியான வெற்றிப்படத் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் கவனிக்கப்பட்டவர் மணிவாசகம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மறைந்து  பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் களமிறங்குகிறது.

மணிவாசகத்தின் மகனான காந்தி மணிவாசகம் தயாரித்து, இயக்கும் ‘களவாணி மாப்பிள்ளை’  படத்தில் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். நாயகி அதிதி மேனன். முக்கிய வேடங்களில் ஆனந்த்ராஜ், தேவயானி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு சரவணன் அபிமன்யு. இசை என்.ஆர்.ரகுநந்தன்.“என் அப்பா பாணியில் ஜனரஞ்சகமாகவும், இப்போதைய இளைஞர்கள் விரும்பும் டிரெண்டிலும் இந்தப் படம் இருக்கும்” என்கிறார் காந்தி மணிவாசகம்.

- எஸ்