சத்யா சிபி சத்யராஜ்



டைட்டில்ஸ் டாக் 54

நான் நடித்த படங்களில் ‘சத்யா’, என் மனதுக்கு நெருக்கமான படம். ‘சத்யா’ படத்தைப் பற்றி சொல்வதைவிட ‘சத்யா’ என்கிற பெயரைக் கேட்டதும் நினைவுக்கு வரும் கமலஹாசன் சாரைப் பற்றிச் சொல்வதுதான் சிறப்பாக இருக்கும்.

அவருக்கும் எங்கள் குடும்பத்துக்குமிடையே இருக்கும் பந்தம் அதிகம். அப்பா முதன் முதலாக வில்லனாக நடித்த ‘சட்டம் என் கையில்’ படத்தில் கமல் சார்தான் ஹீரோ. ஒரு வகையில் அப்பாவின் சினிமா கேரியர் ஆரம்பித்ததே கமல் சார் படத்திலிருந்துதான் என்று சொல்லலாம்.

அது கமல் சாருக்கும் எங்கள் குடும்பத்துக்குமிடையே மிகப்பெரிய கனெக்‌ஷனை ஏற்படுத்தியது. பொதுவா ஒரு ஹீரோ இன்னொரு ஹீரோவை வைத்து படம் தயாரிக்கமாட்டார்கள்.

இப்போது அந்த நிலைமை கொஞ்சம் மாறியுள்ளது. ஆனால் அப்போது அதுபோன்ற நிகழ்வுகள் அபூர்வம். அந்த மாதிரி காலகட்டங்களில் அப்பாவை ஹீரோவாக வைத்து ராஜ் கமல் பிலிம்ஸ் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ படத்தைத் தயாரித்தார்கள். அந்தப் படம் அப்பாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய படமாக இருந்தது.

அந்தப் படம் அப்பாவுக்கு இன்றளவும் பெயர் சொல்லும் படமாக இருக்கிறது. யதார்த்தமான போலீஸ் கதைகளுக்கு அந்தப் படம்தான் முன்னோடியாக இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தி போலீஸ் கேரக்டர் பண்ணியிருந்தார்.

அந்தக் கேரக்டருக்கு அப்பா நடித்த ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ படத்தை ரெஃபரன்ஸ் எடுத்துக் கொண்டதாக பல இடங்களில் சொல்லியிருக்கிறார். படத்தில் நடிக்கத் தொடங்குவதற்கு முன்பாக அப்பாவிடம் ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’ டிவிடி வாங்கிச் சென்றார். அந்தளவுக்கு அந்தப் படம் போலீஸ் கதைகளுக்கு ஆதாரமாக இருக்கிறது. அந்தப் பெருமையும் கமல் சாரையே சேரும்.

சின்ன வயதில் கமல் சார் வீட்டுக்கு அடிக்கடி போவேன். அப்போது அவர் வீட்டில் நடக்கும் பிறந்த நாள் விழா, புத்தாண்டு விழா போன்ற விழாக்களுக்கு அப்பாவுடன் சென்ற நினைவுகள் இப்போதும் பசுமையாக உள்ளது. அந்த மாதிரி சமயங்களில் அவர் பெரிய நடிகர் என்ற பந்தா இல்லாமல் எங்களுடன் குழந்தையோடு குழந்தையாக பழகுவார். 

சில சமயங்களில் சின்ன சின்ன டான்ஸ் ஸ்டெப் சொல்லிக் கொடுப்பார்.சத்யராஜ் என்ற நடிகரின் மகனாக நான் இருந்தாலும் கமல் சாருக்குத்தான் நான் மிகப்பெரிய ரசிகன். ‘அபூர்வ சகோதர்கள்’ படம் வெளியானபோது, அப்படம் எனக்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலும் அப்பு கமல் கேரக்டர் இன்னிக்கும் என் கண் முன்னாடியே நிற்கிறது.

என்னுடைய முதல் படமான ‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ படத்தின்போது அவரிடம் வாழ்த்து வாங்கச் சென்றிருந்தேன். அச்சமயத்தில் நடிப்பைப் பற்றி பல விஷயங்களைச் சொன்னார். நிறைய டிப்ஸ் கொடுத்தார். மேக்கப் , உடைகள் போன்ற விஷயங்களில் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். விளம்பரத்துக்காக ஒரு வாழ்த்து மடல் எழுதிக் கொடுத்தார். வழக்கமாக எல்லா அப்பாவும் தங்கள் பிள்ளைகளுக்கு சொத்து எழுதிக் கொடுப்பார்கள். ஆனால் உங்கள் அப்பா உங்களுக்கு மிகப் பெரிய பொறுப்பை கொடுத்துள்ளார் என்று எழுதிக் கொடுத்தார். அந்த மடலை இன்றளவும் ஒரு பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகிறேன்.

‘ஸ்டூடண்ட் நம்பர் ஒன்’ உருவான சமயத்தில் என்னை அமெரிக்காவில் உள்ள ஆக்டிங் ஸ்கூலில் சேரச் சொன்னார். ஆனால், நாங்கள் படப்பிடிப்புக்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டதால் உடனடியாக அந்த கோர்ஸில் சேர முடியவில்லை.  அப்போது அவர் சொன்னதை ஞாபகம் வைத்து ‘நாணயம்’ படத்துக்கும் ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்துக்கும் நடுவுலே அமெரிக்கா சென்று ஆக்டிங் கோர்ஸ் செய்தேன்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அந்த கோர்ஸுக்குப் பிறகு நான் நடித்த படங்களில் வித்தியாசம் இருப்பதாக நிறைய பேர் சொன்னார்கள். அமெரிக்காவில் கோர்ஸ் முடித்தபிறகு தனிப்பட்ட விதத்தில் எனக்கு எப்படிப்பட்ட கேரக்டராக இருந்தாலும் பண்ணமுடியும் என்ற தன்னம்பிக்கை லெவலும் அதிகமாகியது. அதைச் சொன்னதும் செய்ததும் கமல் சார் தான்.

சமீபத்தில் என்னுடைய நடிப்பில் வெளியான ‘சத்யா’ படம் பெரிய வெற்றியடைந்தது. அந்த வெற்றியில் மிகப்பெரிய பங்கு கமல் சாருக்கு இருக்கிறது. காரணம், கமல் சார் அந்த டைட்டிலை எனக்காக விட்டுக் கொடுத்தார். இன்று நான் நடிகனாக பல விருதுகள் வாங்கியுள்ளேன். ஆனால் நான் முதன் முறையாக விருது வாங்கியது கமல் சார் கையில்.

அப்போது நான் நடிகன் இல்லை. அது ‘நடிகன்’ படம் வெளியான சமயம். அந்தப் படத்தின் வெற்றி விழாவில் கலைஞர்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு விருது கொடுத்தார்கள். என்னுடைய தாய் மாமா தர் உடுமலைப்பேட்டையில் ‘நடிகன்’ படத்தை திரையிட்டார். நான் கமல்சார் ரசிகர் என்று என் மாமாவுக்கு தெரியும் என்பதால் என்னையே விருது வாங்கச் சொன்னார். மாமா சார்பில் கமல் சாரிடமிருந்து ஷீல்ட் வாங்கியபோது நான் அடைந்த பரவசத்துக்கு அளவே இல்லை. 

கமல் சார்  இப்போது சமூக வளர்ச்சியில் தீவிரமாக இருப்பது போல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அவருக்குள் சமூகத்தின் மீது தீவிர கவனம் இருக்கும். அது என்னைப் போன்று அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்குத் தெரியும்.  கமல் சார் அரசியலுக்கு வருவது வரவேற்க வேண்டிய விஷயம். தீவிர அரசியலில் ஈடுபட்டால் நல்ல லீடராக உருவெடுப்பார். அவருக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு.

தொகுப்பு : சுரேஷ்ராஜா

(தொடரும்)