போலீஸ் லாக்கப்பில் முதலிரவு!



காமெடி நடிகர்கள் கதாநாயகர்களாக நடிப்பது சினிமாவுக்கு புதிதல்ல. அந்த வரிசையில் லேட்டஸ்ட் வரவு ஜெகன். இவர் நாயகனாக நடிக்கும் படம் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே’. நாயகி மோனிகா. முக்கிய வேடத்தில் கவிஞர் பிறைசூடன், சேரன் ராஜ், சாம்ஸ், விவேக் ராஜ், ரவி, நிகிதா, டிஸோசா, கொட்டாச்சி, வின்னர் ராமச்சந்திரன், அம்பானி சங்கர் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் லட்சுமி என்ற பசுமாடு கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறது. ஒளிப்பதிவு ஆர்.சிவராஜ், இசை கே.ஆர்.கவின் சிவா, கதை, வசனம் காரைக்குடி நாராயணன். முத்து விநாயகா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் ராஜாமணி தியாகராஜன்  தயாரிக்கிறார். இயக்கம் முருகலிங்கம்.

‘‘இது முழுக்க முழுக்க காமெடி படம். கதையின் நாயகனான ஜெகன் பயந்த சுபாவம் உள்ளவர். ஆனால் அவர் பண்ணும் காரியங்கள் சாகச ரகம். கதைப்படி கந்து வட்டி தொழில் செய்யும்  பிறைசூடன்  மகளை இளைஞன் ஒருவர் காதலிக்கிறார். இதையறிந்த பிறைசூடன் தனது அடியாட்களை அனுப்பி காதல் ஜோடியை கொலை செய்ய முயற்சிக்கிறார்.

காதல் ஜோடி தப்பி ஓடி போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைகிறது. அவர்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன் ராஜ் ஆதரவு தராத நிலையில், அங்கு வேலை பார்க்கும் பயந்த சுபாவம் கொண்ட போலீஸ் ஜெகன் அவர்களுக்கு பதிவுத் திருமணம் செய்து போலீஸ் ஸ்டேஷன் லாக்கப்பிலேயே முதலிரவை கொண்டாட வைக்கிறார். இதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு இன்று விடுமுறை என்ற போர்டையும் எழுதித் தொங்க விடுகிறார்.

தன்னைத் தேடி வரும் காதல் ஜோடிகளுக்கு உதவி செய்யும் ஜெகன், அத்தை மகள் மோனிகாவை காதலிக்கிறார். காதலியிடம் ஏராளமான பொய்களைச் சொல்லி காதலிக்கும் ஜெகன்.... அதோடு பிறைசூடன் தரப்பு பிரச்சனைகளையும், காதலியையும் எப்படி சமாளிக்கிறார் என்பதை முழுநீள நகைச் சுவையுடன் சொல்லியுள்ளோம்.

ஆரம்பத்தில் ஜெகனிடம் இந்தக் கதையைச் சொல்லி நீங்கள்தான் ஹீரோ என்றதும் கொஞ்சம் பயந்தார். ஆனால் முழுக் கதையையும் கேட்டுவிட்டு இந்தக் கதையில் நானே நடிக்கிறேன் என்றார். படத்தின் ஆரம்பம் முதல் கடைசிவரை சிரித்துக் கொண்டே இருக்கலாம். படத்துல மெசேஜ்னு பெரிதாக எதுவும் இருக்காது. ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பதுதான் ஒரே குறிக்கோள்’’ என்கிறார் இயக்குநர் முருகலிங்கம்.

- சுரேஷ்