அண்ணாதுரை



குடும்பத்தைச் சீரழிக்கும் குடிவெறி!

அண்ணாதுரை, தம்பிதுரை என  இரட்டை வேடங்களில்  விஜய் ஆண்டனி நடித்திருக்கும் படம். குடிவெறியால் தற்செயலாக நடந்த ஒரு கொலைக்காக சிறைக்குச் செல்கிறார் அண்ணாதுரை. குடும்பமே சீர்குலைந்து தவிக்கிறது. நல்லவனாக இருந்த தம்பிதுரை அடியாளாக உருவெடுக்கிறான். அண்ணாதுரை, உச்சபட்ச தியாகம் செய்து குடும்பத்தை மீட்பதுதான் கதை.

அண்ணன் என்றால் தாடி, தம்பிக்கு ஷேவ் செய்த முகம் என வழக்கமான இரட்டை வேடமாக இருந்தாலும், நடிப்பில் வித்தியாசம் காட்டுகிறார் விஜய் ஆண்டனி. அண்ணாதுரையாக வரும் விஜய் ஆண்டனி காதல் இழப்பால் குடிகாரனாக மாறினாலும், உதவும் குணமுள்ள கதாபாத்திரத்தில் ஒளிர்கிறார். பி.டி மாஸ்டர் தம்பிதுரையாக வரும் விஜய் ஆண்டனி மென்மையான கதாபாத்திரத்திலிருந்து வன்மைக்கு மாறி, மிரட்டலான பாடிலேங்குவேஜில் மெருகேற்றுகிறார்.

“நீ செய்வேன் செய்வேன்னு பேசிக்கிட்டே இருப்ப, நான் பேசிக்கிட்டிருக்கும்போதே செஞ்சிடுவேன்” என பன்ச் டயலாக்குகளும் உண்டு. பறந்து, எகிறி அடிக்காமல் இயல்பாக சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாயகிகள் டயானா சாம்பிகா, ஜுவல்  மேரி  இருவரும் அளவான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். அதிலும் டயானா கும்மென்று பொந்தான் கோழி கணக்காக வாலிப வயோதிக அன்பர்களை வசீகரிக்கிறார்.

 டயானாவின் அப்பாவாக வரும் பத்திரிகையாளர் செந்தில்குமாரன், அரிதாகக் கிடைத்த வாய்ப்பை அனாயாசமாக பயன்படுத்தியிருக்கிறார். மகள்மீது பாசம், மருமகன்மீது நேசம் காட்டும் கதாபாத்திரத்தில் உருக வைக்கிறார்.முடமாகிப்போனாலும் திடமாக நடித்திருக்கிறார் சேரன்ராஜ். நண்பன் கதாபாத்திரத்துக்கு பெருமை சேர்க்கிறார் காளி வெங்கட்.

“தலைவனுக்காக அடிச்சா அவன் அடியாளு, தலைவனையே அடிச்சா  அவன்தான் தலைவன்’’ என்று தத்துவம் சொல்லும் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் ராதாரவி வழக்கம்போல அதகளம். நாயகர்களின் அப்பாவாக வரும் நளினிகாந்த் அமைதியாக அசத்துகிறார். பெண் காவலர் கதாபாத்திரமும் கவனம் ஈர்க்கிறது.

விஜய் ஆண்டனியின் இசையில் ‘தங்கமா வைரமா?’ பாட்டு, நாயகனின் பெருமை பேசுகிறது. ‘ஈ.எம்.ஐ மாரி நீயும் என்னெ வச்சு செய்யுற’ பாடல், அட்டகாச மெலடி. ‘ஜி.எஸ்.டி’யை சென்சார் ஆட்சேபித்ததால் அது ‘ஈ.எம்.ஐ’ ஆனதாம். அத்தனை பாடல்களையும் அருண்பாரதி அமர்க்களமாக எழுதியிருக்கிறார்.

 இசை, நடிப்பு மட்டுமின்றி படத்தொகுப்பையும் விஜய் ஆண்டனியே செய்திருக்கிறார். தில்ராஜின் ஒளிப்பதிவு நேர்த்தி.பழைய கஞ்சியான இரட்டைவேட கதையை விறுவிறுப்பு குறையாமல் திரைக்கதையாக்கி சுவாரஸ்யமாக இயக்கியிருக்கிறார் ஜி.சீனிவாசன்.