லவ்வை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள திட்டம்!சமீபத்தில் இணைத் தயாரிப்பாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு, அதற்கு காரணம் ‘லவ்’வபிளான ஃபைனான்ஸியர்தான் என்று எழுதி வைத்த நிகழ்வு, தமிழ் சினிமாவில் பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஃபைனான்ஸியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சினிமா முக்கியஸ்தர்கள் பலரும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதே நேரம், அவரின்றி ஓர் அணுவும் சினிமாவில் அசையாது என்று அன்பு மிகுந்த சிலரும் இந்த நேரத்தில் தைரியமாக எதிர்நிலை எடுத்திருக்கிறார்கள்.

ஓர் இளம் நடிகர் மற்றும் இளம் தயாரிப்பாளர் இருவரும்தான் ஃபைனான்ஸியருக்கு எதிராக களமிறங்கி இருப்பவர்களில் முக்கியமானவர்கள். இப்போதைய சூழலை வைத்து மொத்தமாக அவரை முடக்கிவிடவும் இவர்களது தரப்புதான் வேலை பார்க்கிறது என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுவென பேசிக்கொள்கிறார்கள்.

சுமார் இருபத்தைந்து ஆண்டுகாலமாகவே தமிழ் சினிமாவில் ‘லவ்வு’ உதவியின்றி பெரும்பாலானவர்கள் படமெடுப்ப தில்லை. நியாயமான வட்டிக்கு பணம் கொடுப்பார். ஒழுங்காக திருப்பிக் கொடுத்தால், எல்லாவகையிலுமான உதவிகளையும் செய்வார். சொன்ன நேரத்துக்கு பணத்தைத் திருப்பித் தரவில்லை எனும் பட்சத்தில்தான் வில்லனாக மாறிவிடுவார் என்கிறார்கள்.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் அவருக்கு டைட்டில் கார்டில் நன்றி சொல்லாத படங்கள் மிகவும் குறைவு என்கிறார்கள். இத்தனைக்கும் லவ்வு, தன்னுடைய சொந்தப் பணத்தை வட்டிக்கு விடுவதில்லை. அங்கே வாங்கி, இங்கே கொடுப்பது மாதிரி ஏஜென்ஸி பிசினஸ்தான்.

மார்க்கெட் டல்லடிக்கும் போது படத்தயாரிப்பிலும் இறங்கி தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ளும் நடிகர்களுக்கு லவ்வுதான் காட்ஃபாதராம். ‘எவ்வளவு வேணும்?’ என்றுதான் கேட்பாரே தவிர, மற்ற விஷயங்களை எல்லாம் பொருட்படுத்தமாட்டாராம். அவுட்டோரில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய்விட்டு கையில் காசில்லாமல் நிற்கும் நிலையிலும், லவ்வுக்கு போன் அடித்து, “அண்ணே, பத்து லட்சம் அர்ஜெண்டா வேணும்” என்று சொன்னால், அடுத்த ஒரு மணி நேரத்தில் எப்படியோ அரேஞ்ச் செய்து கொடுத்து விடுவாராம்.

ஆனால்-குறிப்பிட்ட தேதியில் வட்டி, குறிப்பிட்ட காலத்தில் அசல் திரும்பாவிட்டால் அதகளம்தான். தமிழ் சினிமாவில் மரியாதைக்குரிய பல பெரிய புள்ளிகள்கூட நினைத்துக்கூட பார்க்க முடியாத அவமரியாதைகளை லவ்வு மூலம் சந்தித்திருக்கிறார்களாம். கடன் வாங்கியவரை ஜட்டி, பனியனோடு நாற்காலியில் கட்டிப்போட்டு பணயக் கைதியாக்கி, பணத்தை வசூல் செய்த சம்பவமெல்லாம் நடந்திருக்கிறதாம்.

லவ்விடம் பணத்தைச் சுற்றுக்கு விட்டால் வட்டியும், முதலுமாக சரியாக திரும்பிவிடும் என்கிற நம்பிக்கை இருப்பதால் பல முக்கியஸ்தர்கள் இவர் மூலமாகத்தான் ஃபைனான்ஸ் விடுகிறார்கள். இதில் தமிழகம் முழுக்க அரசியல்வாதிகளில் தொடங்கி லோக்கல் தொழிலதிபர்கள் வரை அடங்குவார்கள்.

பெரிய நிறுவனங்கள் எடுக்கும் படம் தவிர்த்து மீடியமான பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களில் தொண்ணூறு சதவிகிதம் அவரைச் சார்ந்துதான் இருக்கிறது. எதிர்கால முதல்வர் கனவில் இருக்கும் இளம் நடிகர் மற்றும் வரிசையாக படங்களைத் தயாரித்துத் தள்ளும் இளம் தயாரிப்பாளர் இருவர் மட்டுமே கிட்டத்தட்ட எழுபத்தைந்து கோடி ரூபாய் அளவுக்கு லவ்வுக்கு திருப்பித் தர வேண்டுமாம். நடிகர் 25சி+, தயாரிப்பாளர் கிட்டத்தட்ட 50சியென்று லவ்வுக்கு திருப்பித்தர வேண்டியிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. இதுபோலவே லவ்விடம் கடன் வாங்கியவர்களின் பட்டியல், டிக்‌ஷனரி சைஸுக்கு மிகவும் பெரியது.

காலம் முழுக்கவே இந்தக் கடனை அடைக்கமுடியாது என்பதை உணர்ந்தவர்கள் சினிமாவுலகின் முக்கியமான பொறுப்புகளைக் கைப்பற்றி, அதை தங்களுக்கு கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்று லவ்வு தரப்பு கடுமையாக குற்றம் சாட்டுகிறது. எனவேதான் லவ்வு தரப்பு, தங்களுக்கு தோதான சினிமா ஆட்களை வைத்து சங்கங்களை உடைக்கும் வேலைகளிலும் மும்முரமாக இருக்கிறார்களாம்.

இப்போது லவ்வுக்கு எதிராக களமிறங்கியிருப்பவர்களில் சிலரே லவ்வு தயாரித்த படங்களில் ஹீரோவாகவும், இயக்குநராகவுமெல்லாம் பங்கு பெற்றதுண்டு. நடிகர்களில் தொடங்கி டெக்னீஷியன்கள் வரை பலரும் முழுக்க முழுக்க லவ்வின் கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவரது அன்பு வளையத்தில் இருந்து வெளியே வருவது என்பது இன்றைய தேதியில் நடக்காத சங்கதி.

வெறும் ஃபைனான்ஸ் செய்வதின் மூலமாக மட்டுமே ஒட்டுமொத்த சினிமாவுலகையும் கபளீகரம் செய்துவிடுவாரோ என்கிற அச்சத்தில் இருப்பவர்கள், இணைத்தயாரிப்பாளர் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை முன்வைத்து, லவ்வை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும் என்று மேல்மட்டத்தில் குடைச்சல் கொடுத்து வருகிறார்களாம்.

அவ்வாறு லவ்வு உள்ளே போய்விட்டால் தாங்கள் தரவேண்டிய தொகையையும் காந்தி கணக்கில் வரவு வைத்துவிடலாம் என்பதும் அவர்களது ரகசிய ஆசையாம். ஒரே கல்லில் இரண்டு மாங்கா அடிக்க மெனக்கெடுகிறார்கள்.லவ்வு ஒன்றும் உத்தமர் இல்லை. அதே நேரம் அவரை எதிர்ப்பவர்களும்தான்.பேய்க்கும், பேய்களுக்கும் சண்டை. வேடிக்கை பார்ப்போம்.

- துப்பறிவாளன்