ரஜினி ரசிகனின் கதை!ரஜினி பிறந்தநாளுக்கு அவர் பிறந்தநாளையே டைட்டிலாகக் கொண்டு களமிறங்குகிறார் ‘கபாலி’ செல்வா. நம்ம பழைய ஹீரோ செல்வாதான். டாக்டர் ராஜசேகரின் தம்பி. மிஷ்கினின் ‘முகமூடி’ படத்தில் குங்ஃபூ மாஸ்டராக ரீ-என்ட்ரி கொடுத்தாரே, அதே செல்வா.“ரஜினி சாரோட தீவிர ரசிகன் நான். ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ‘மாங்குடி மைனர்’ காலங்களிலிருந்தே.

அவருக்காகவும் அவருடைய ரசிகர்களுக்காகவும் நான் தரப்போகும் பிறந்தநாள் பரிசு ‘12.12.1950’ படம். இந்த பிராஜக்ட் ஆரம்பிச்சப்பவே செம ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இது ரஜினி சார் பற்றிய படமா... பஞ்ச் டயலாக் இருக்கா? எதுக்காக கபாலி கெட்டப்புன்னு கேட்க ஆரம்பித்தார்கள். இது ரெகுலராக வரும் நடிகன் - ரசிகன் பற்றிய கதை கிடையாது. பின்னணியில்தான் ரஜினி ரசிகன் என்கிற கதை இருக்கும். மற்றபடி இது ஆல் கிளாஸ் ஆடியன்ஸுக்கான பக்கா பொழுதுபோக்குப் படம்.

என் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவம் அது. கேசினோ தியேட்டர் அருகே சினிமா போஸ்டர் ஒட்டுவதற்கு என்றே ஒரு சுவர் இருக்கும். அந்த சுவரில் ஒட்டப்பட்டிருந்த ரஜினி சாரின் போஸ்டர் மீது ஒரு இளைஞன் அசிங்கம் பண்ணிக் கொண்டிருந்தார். ஒரு ரசிகனாக அந்தச் செயல் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தவே அந்த இளைஞனிடம் அசிங்கம் பண்ண வேண்டாம் என்று கேட்டேன்.

வாய்த்தகராறாக இருந்தது ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. சிறிது நேரத்தில் அந்த இளைஞனின் நண்பர்கள் என்னைத் தாக்குவதற்கு ஸ்கெட்ச் போட்டார்கள். ஒரு வழியாக அவர்களிடமிருந்து தப்பித்து வந்தேன். அந்த சம்பவத்தை பின்புலமாக வைத்து உருவாக்கப்பட்ட படம்தான் இது.

படத்துல நான் குங்ஃபூ மாஸ்டராக வர்றேன். என்னுடைய மாணவர்களாக ரமேஷ் திலக், ஆதவன், அஜய் பிரசாத், பிரஷாந்த் நடிக்கிறார்கள். நாயகி அஸ்வினியிடம் அடுத்த படத்தில் உங்களுக்கு பெரிய ரோல் தரேன், என சொல்லி ஏமாற்றித்தான் இந்தப் படத்தில் நடிக்க வைத்தேன். தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், பொன்னம்பலம், டெல்லி கணேஷ், யோகி பாபுன்னு ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். என் மகனும் ஒரு ரோலில் நடித்திருக்கிறான்” என்று உற்சாகமாகப் பேசினார் ‘கபாலி’ செல்வா.

- சுரேஷ்ராஜா