நான் முத்தக் காட்சியில் நடிச்சா, எம் பையன் கெட்டுப் போயிடுவான்!“தெலுங்கில் வெளியான ‘க்ஷணம்’ படத்தைத் திரையரங்கில் பார்த்தேன். படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னுடைய அம்மாவும், தங்கையும் படத்தை பார்த்தனர். அவர்களுக்கும் படம் மிகவும் பிடித்திருந்தது. அந்தப் படம்  ஆந்திராவில் ஓடிக்கொண்டிருக்கும் போதுதான் அப்பா ‘பாகுபலி’ படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். அவரைத் தொடர்பு கொன்டு இந்தப் படத்தைப் பற்றி விசாரிக்கும்படி கூறினேன். 

அப்பாவும் பிரபாஸிடம் விசாரித்து, அவர் நம்பிக்கை கொடுத்த பிறகுதான் நாங்கள் இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி படத்தை ஆரம்பித்தோம்.கமல் சாரிடம் முறைப்படி வாங்கி இந்தப் படத்துக்கு ‘சத்யா’ என்று டைட்டில் வைத்துள்ளோம். கதையில் கதாநாயகனின் பெயர் சத்யா என்பதால் அதையே படத்தின் தலைப்பாக வைத்துவிட்டோம்’’ என்று ‘சத்யா’ படத்துக்கான இன்ட்ரோ கொடுத்து பேச ஆரம்பித்தார் சிபி சத்யராஜ்.
“உங்களுக்கு என்ன கேரக்டர்?”

“இதுவரை பன்னிரெண்டு படங்களில் நடித்துள்ளேன். இதுவரை எந்தப் படத்திலும் என் லுக்கை மாற்றவில்லை. முதன்முதலாக ‘சத்யா’வுக்காக லுக்கை மாற்றி நடித்துள்ளேன். ‘சத்யா’ படம் கமல் சாருக்கு எப்படி திருப்புமுனையாக இருந்ததோ அதேபோல எனக்கும் இந்த ‘சத்யா’, திருப்புமுனையாக அமையும்.”“ரம்யா நம்பீசன்?”

“எனக்கு ஜோடியாக நடிச்சிருக்காங்க. அனுபவம் உள்ள நடிகை. எவ்வளவு பெரிய சீனாக இருந்தாலும் ஜஸ்ட் லைக் தட் என்கிற மாதிரி அசால்ட்டா பண்ணுவார். சில சமயம் இயக்குநர் அவரிடம் இப்படித்தான் நீங்கள் நடிக்க வேண்டும் என்று சொல்கிறபோது அப்படியே கேட்பார். அதேமாதிரி வரலட்சுமி சரத்குமாரிடம் இயக்குநர் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று கூறியதும், அவரைப் பார்த்து ‘போய்யா’ என்று ஜாலியாக கூறிவிட்டார். சீரியசாகவும், ஜாலியாகவும் ஒருத்தரை ஒருத்தர் சீண்டிக்கொண்டு எங்க படப்பிடிப்பு நடந்தது.”

“லிப் லாக் காட்சியில் நடிக்க அடம்பிடித்தீர்களாமே?”

“அய்யா நடிக்கமாட்டேன்னுதான் அடம் பிடித்தேன். உங்க கேள்வியே வில்லங்கமா இருக்கு. என்னுடைய மகன் தீரன், இப்போ சிறுவன். என்னை ரோல்மாடலாக பார்க்கிறான். நான் எதை செய்தாலும் அதை அவன் உடனே இமிட்டேட் பண்ணுகிறான். நான் படத்தில் லிப் லாக் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அதே போல் பள்ளிக்கு சென்று டிரையல் பார்த்தால் நமக்குத்தான் பிரச்சனை.

அதனால் இப்போது அதுபோன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன். நிச்சயம் எதிர்காலத்தில் லிப்லாக் காட்சியில் நடிப்பேன். அதுவரை கதை சொல்ல வரும் இயக்குநர்கள் அனைவரும் எனக்காக லிப்லாக் காட்சிகளை கதையிலிருந்து நீக்கிவிட வேண்டாம் என்பதுதான் என்னுடைய அன்பு வேண்டுகோள்.”
“டெக்னிக்கல் டீம் பற்றி?”

“நான் ‘க்ஷணம்’ படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளேன் என்பதை முதன் முறையாக ட்விட்டரில் அறிவித்தேன். முதல் பாராட்டாக  என் நண்பரான  விஜய் ஆண்டனி என்னை தொலைபேசியில்  தொடர்பு கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தார்.  ‘படத்துக்கு டைரக்டர் ஃபிக்ஸ் பண்ணியாச்சா’ என்று கேட்டார். ‘இல்லை, இன்னும் முடிவு பண்ணவில்லை.

பார்த்துக்கொண்டு இருக்கிறோம்’ என்றேன். அப்போது அவர் நடித்துக்கொண்டிருந்த ‘சைத்தான்’ படத்தின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி என்னிடம் கூறினார். அதன் பின் நான் பிரதீப்பை சந்தித்து பேசினேன். நாங்கள் முதல் முறை பேசும்போது படத்தைப் பற்றி அதிகம் பேசவில்லை. தமிழைப்பற்றியும் அதன் வரலாறு பற்றியும்தான் அதிகம் பேசினோம்.

பிரதீப் ஏன் படத்தைப் பற்றி, கதையைப் பற்றி அதிகம் எண்ணிடம் பேசவில்லை என்று அடுத்த நாள் நான் அவரிடம் கேட்டபோது, ‘நான் உங்கள் பாடி லாங்குவேஜை நோட் பண்ணிக் கொண்டிருந்தேன். உங்களை படத்தில் எப்படி ஹேண்டில் பண்ணுவது என்று எனக்குத் தெரியவேண்டும் அல்லவா’ என்று கூறினார்.

 படம் ஆரம்பிக்கும்போது என்னை புதுவிதமாகக் காட்டவேண்டும் என்று கூறினார். சொன்னது போல என்னை நிஜமாகவே வேறமாதிரி காட்டியுள்ளார். சைமனின் இசையில் பாடல்கள் அனைத்தும் நன்றாக வந்துள்ளது. ‘யவன்னா’ பாடல் அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. அருண்மணி பழனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். என்னை மட்டுமல்ல, படத்தில் நடித்த அனைவரையும் நன்றாக வேலைவாங்கினார் இயக்குநர் பிரதீப்.”

“அப்பா என்ன சொல்கிறார்?”

“அப்பா எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்திருக்கிறார். நான் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும் என்பதால் எப்போதும் சப்போர்ட் பண்ணுவார். படம் ஆரம்பித்த பிறகுதான் ஒரிஜினல் படமான ‘க்ஷணம்’ பார்த்தார். சமீபத்தில் அப்பாவுக்கு ‘சத்யா’ படத்தைத் திரையிட்டோம். படம் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகச் சொன்னார்.”

- சுரேஷ்ராஜா