விஷாலை கேலி செய்கிறார்கள்!‘திருட்டு பயலே -2’ படத்துல பாசிட்டிவ்வான கேரக்டரில் நடித்து பாராட்டுகளை அள்ளிக் கொண்டிருக்கிறார் செளந்தரராஜா. அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்தவரிடம் பேசினோம்.“சசிகுமார், விஜய சேதுபதி போன்ற நடிகர்கள் சப்போர்ட் இருந்தும் உங்கள் வளர்ச்சி வேகம் எடுக்கவில்லையே?”

“சசிகுமார், விஜய சேதுபதி இருவருமே நண்பன் என்ற அடிப்படையில் அவர்கள் படங்களில் நடிக்க கூப்பிடுகிறார்கள். தொடர்ந்து அவர்கள் படங்களில் நடிப்பது இயக்குநர்கள் கையில்தான் இருக்கிறது. ஒரு நடிகராக அழுத்தமான கேரக்டரில் நடித்து பெயர் வாங்க வேண்டுமானால் அது இயக்குநர்கள் கையில் தான் இருக்கிறது. எனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக என்னைத் தேடி வரும் இயக்குநர்கள் படங்களில் நடிக்கிறேன். நானும் எனக்கு பிடித்த இயக்குநர்கள் படங்களில் நடிக்கிறேன்.”

“விஜய சேதுபதி உங்களை ஹீரோவாக வைத்து ஒரு படம் தயாரிக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறதே?”

“நானும் விஜய சேதுபதியும் பன்னிரெண்டு வருட கால நண்பர்கள். விஜய சேதுபதியை என் நண்பன், உசுரு என்று என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். நான் தயாரித்த குறும்படத்தில்தான் எங்கள் நட்பு ஆரம்பித்தது. சேதுவுக்கு என் வளர்ச்சி மீது அக்கறை ஜாஸ்தி. சினிமாவில் தொடர்ந்து கற்றுக்கொள். உனக்காக ஒரு விஷயம் பண்ணுவேன் என்று சொல்லியிருக்கிறார்.

அந்தவகையில் எனக்கு வரும் வாய்ப்புகளை சேதுவிடம் டிஸ்கஸ் பண்ணி நடிக்கிறேன். சேதுவும் தன் நல்லது, கெட்டதை முதல் ஆளாக என்னிடம் பரிமாறிக்கொள்வதுண்டு. மற்றபடி யூகங்களின் அடிப்படையில் பதில் சொல்ல முடியாது. அப்படி நடக்கும்போது எங்களுடைய நட்பின் ஆழத்தை எல்லோரும் புரிந்து கொள்வார்கள்.”“அடுத்து?”

“இப்போ ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ படத்தில் காமிக் வில்லன் ரோல். முதன் முறையாக இந்தப் படத்துல காமெடி ட்ரை பண்ணியிருக்கிறேன். ‘கள்ளன்’ படத்தில் மெயின் வில்லன். நட்புக்காக ஆர்.கே.சுரேஷுடன் ‘பில்லா பாண்டி’யில் கெளவரவ வேடம். ‘அருவா சண்ட’ படத்தில் மெயின் வில்லன். ‘அபிமன்யு’ படத்தில் ஹீரோவா பண்றேன். பாலகிருஷ்ணன் சார் இயக்கும் ‘எம்.ஜி.ஆர்.வாழ்க்கை வரலாறு’ படத்தில் முக்கியமான கதாபாத்திரம். பாண்டிராஜ் டைரக்‌ஷனில் கார்த்தி நடிக்கும் படத்திலும் கமிட்டாகியிருக்கிறேன்.”

“நீங்கள் ஹீரோவா, வில்லனா அல்லது கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டா?”

“எனக்கே நான் எந்த இடத்தில் இருக்கேன்னு தெரியலை. ஆனால் நல்ல நடிகன் என்று பெயர் எடுக்க விரும்புகிறேன். செளந்தர் நல்லா நடிக்கிறான் என்று பெயர் வாங்க வேன்டும். ‘தங்க ரதம்’ படத்தில் வில்லனாக பண்ணினேன். ‘சத்ரியன்’ படத்தில் மஞ்சிமா மோகனுக்கு அண்ணனாக நடித்திருப்பேன். இப்படி எனக்கு வரும் வாய்ப்புகளில் பெஸ்ட்டான வாய்ப்பை செலக்ட் பண்ணி நடிக்கிறேன்.

அதையும் தாண்டி ஒரு நடிகனுக்கு பிசினஸ் என்று சொல்லக்கூடிய மேஜிக் தேவைப்படுகிறது. என்னதான் நல்லா படம் எடுத்தாலும் ஆடியன்ஸை தியேட்டருக்கு வரவழைக்க வேண்டும். அந்த மேஜிக் நடந்தால் மட்டுமே நம்மை ஹீரோ மெட்டீரியலாக பார்ப்பார்கள். மற்றபடி ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்க ஆசை.”“யாருக்கு வில்லனாக நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?”

“கண்டிப்பாக என் நண்பன் விஜய சேதுபதியுடன் ஒரு படத்திலாவது வில்லனாக நடிக்க வேண்டும்.”“பிடித்த நடிகை?”“சமந்தா, லக்ஷ்மி மேனன் இருவரும் என்னுடைய ஃபேவரைட். ஆக்‌ஷன் கலந்த எமோஷனல் கேரக்டர் எனக்கு நல்லா வரும். அந்த மாதிரி படங்கள் அவர்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.”“எந்த மாதிரி கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கிறீர்கள்?”

“பொழுதுபோக்குப் படமாக மட்டுமில்லாமல், சமூகத்துடன் கனெக்ட் பண்ற மாதிரியான படங்கள் பண்ணினால் நல்லா இருக்கும். ஏன்னா, அந்த மாதிரி படங்கள் இப்போது குறைந்துவிட்டது. அம்மா சென்டிமென்ட், புருஷன், பெண்டாட்டி பாசம் போன்ற படங்கள் இப்போது வருவதில்லை. காதல், நட்பு குரோதம், வன்முறை மாதிரியான படங்களைத்தான் அதிகமாக எடுக்கிறார்கள். வாழ்க்கையைச் சார்ந்த படங்களில் பண்ணணும்.”
“சொந்தமாக படம் தயாரிக்கும் ஐடியா இருக்கா?”

“அப்படியொரு ஐடியா இருக்கு. ஆனால் டைரக்‌ஷன் பண்ணுவேனான்னு தெரியலை. அந்தப் படம் செளந்தரிடம் இவ்வளவு திறமையா என்று இண்டஸ்ட்ரியைத் திரும்பிப் பார்க்க வைக்கும். வெளிநாட்டு வேலைக்குப்பிறகு சென்னைக்கு வரும் போது நாற்பது லட்சம் கொண்டு வந்தேன். அஞ்சு வருஷத்துல எல்லா பணமும் காலி. யாரும் என்னை ஏமாற்றவில்லை. குறும்படங்களுக்கு செலவு பண்ணினேன். இப்போது இரண்டாவது முறையாக சினிமா எடுத்து ரிஸ்க் எடுக்கப் போகிறேன்.”“இவங்க டைரக்‌ஷன்ல பண்ணணும்னு விஷ் லிஸ்ட் ஏதாவது...?”

“பாலா அண்ணன் படத்துல நடிக்கணும். இப்போது பிசினஸ் வேல்யூ பொறுத்து ஸ்டார் காஸ்டிங் பண்ணுகிறார்கள், ஏன்னா, சினிமா அப்படியொரு நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. கே.பாலசந்தர் சார், தர் சார், மகேந்திரன் சார், பாரதிராஜா சார் காலங்களில் சினிமா இயக்குநர்களின் சினிமாவாக இருந்தது. யாரை வேண்டுமானாலும் நடிக்க வைப்பார்கள், அப்போது கதைதான் ஹீரோ. இயக்குநர்தான் கேப்டன். இப்போது ஹீரோவின் பிடியில் சினிமா இருக்கிறது. புதுமுகங்களை நடிக்க வைக்க தயக்கம் காண்பிக்கிறார்கள்.”

“உங்களை மாதிரி நடிகர்களுக்கு பொதுவெளியில் வரவேற்பு எப்படி இருக்கிறது?”

“சென்னை போன்ற மாநகரங்களில் ஒரு சிலபேர் அடையாளம் கண்டுகொள்கிறார்கள். ஓப்பனாக சொல்ல வேண்டுமானால் பெரிய வரவேற்பு இல்லை. கிராமப்புறங்களில் கட்டிப்பிடித்து தங்கள் அன்பை வெளிக்காட்டியிருக்கிறார்கள்.”“விஷால் எங்கே போனாலும் செட் ப்ராப்பர்ட்டி மாதிரி கூடவே இருக்கிறீர்கள். ஒரு நிர்வாகியாக விஷாலின் செயல்பாடு எப்படி இருக்கிறது?”

“விஷால் எனக்கு அண்ணன் மாதிரி. பலபேர் விஷாலின் நடவடிக்கைகளை கேலி, கிண்டல் பண்ணுகிறார்கள். இது வழக்கமாக வளர்ந்த நடிகர்களுக்கு வரும் பிரச்சனை. அப்படி விமர்சனங்கள் வருவது தனிப்பட்ட விரோதமாகவும் இருக்கலாம். எப்போது ஒருவர் தப்பை தட்டிக் கேட்கிறாரோ அப்போது தவறானவனாக சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால் வெளியே இருந்து பார்ப்பதைவிட கூடவே இருந்து பார்க்கும்போதுதான் அவர்கள் எந்தளவுக்கு நேர்மையானவர்கள் என்று தெரியும்.

அந்த வகையில் விஷால் அண்ணனிடம் நான் பார்த்து வியந்த விஷயங்கள் மனிதநேயமும், தைரியமும். எங்கள் இரண்டு பேருடைய சிந்தனைகளும் ஒரே மாதிரி இருப்பதால் தொடர்ந்து டிராவல் பண்ண முடிகிறது. விஷாலின் உதவும் மனப்பான்மை வெளியே தெரிந்தது கம்மி. தன்னுடைய அறக்கட்டளை மூலம் ஏராளமான குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்.

திறமை இருந்தும் வறுமையின் காரணமாக முறையான பயிற்சி, உபகரணங்கள் இல்லாத விளையாட்டு வீரர்களுக்கு உதவி பண்ணுகிறார். அவருடைய அறக்கட்டளையின் உறுப்பினர் என்ற அடிப்படையில் யாருக்கு என்ன உதவி செய்திருக்கிறார் என்று புள்ளிவிவரத்துடன் என்னால் சொல்ல முடியும். சினிமாவின் முன்னேற்றத்துக்காக ஒரு நிர்வாகியாக இதுவரை யாருமே எடுக்காத முயற்சிகளை துணிச்சலாக எடுத்து வருகிறார்.”

- சுரேஷ்ராஜா