அந்த மாதிரி அனுபவம் எனக்கு இல்லை!காந்தக் கண்ணழகி ஜனனி!

“பள்ளியில் படிக்கும் போது என்ஜினியராகணும்னு நினைத்தேன். கல்லூரியில் சேர்ந்தபிறகு மாடலிங் பண்ண ஆரம்பித்தேன். அப்படியே கவனம் சினிமா பக்கம் திரும்பியது. நான் நினைத்த மாதிரி சினிமா நடிகையாகிவிட்டேன். ரியலி ஐயம் லக்கி’’ ஓப்பனாகப் பேசுகிறார் ஜனனி ஐயர். தொடர்ந்து அவரிடம் பேசியதிலிருந்து...

“என்ஜினியருக்கு படித்த நீங்கள் சினிமாவுக்கு எப்படி வந்தீர்கள்?”

“படிக்கும்போதே மாடலிங் பண்ண ஆரம்பிச்சிட்டேன். அதனாலயே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமானது. ஆனால் வீட்ல நான் டிகிரி முடிப்பதில் கறாராக இருந்தார்கள். நம்ம குடும்பத்துக்கு சினிமா செட் ஆகாது என்றார்கள். எங்கள் குடும்பத்துல டாக்டர்ஸ், என்ஜினியர்ஸ் நிறைய பேர் இருக்காங்க. என்னுடைய பெற்றோர் நான் அதிகமாகப் படிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார்கள்.

தொடர்ந்து படிப்பிலும் கவனம் செலுத்தினேன். இப்போ, எங்க வீட்லேயே நான், என் தங்கை என்று இரண்டு என்ஜினியர்ஸ் இருக்கோம். ஒருவேளை  சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் இந்நேரம் சாப்ட்வேர் என்ஜினியராக அமெரிக்காவில் இருந்திருப்பேன். படிக்கும்போதே எனக்கு முன்னணி நிறுவனத்தில் ப்ளேஸ்மென்ட் கிடைத்தது. ஆனால் என் கவனம் சினிமாவில் இருந்ததால் வேலைக்குப் போக பிடிக்கவில்லை. பாலா சாரின் ‘அவன் இவன்’ படம் கிடைத்ததும் சினிமாதான் என் வாழ்க்கை என்று முடிவெடுத்தேன்.”

“இப்போது நடிக்கும் படங்கள் பற்றி சொல்லுங்களேன்?”
“அடுத்தடுத்து ‘விதிமதி உல்டா’, ‘பலூன்’ படங்கள் ரிலீசுக்கு ரெடி. ‘விதிமதி உல்டா’வில் என்னுடைய கேரக்டர் பெயர் திவ்யா. இது டார்க் காமெடி படம்.  நேரத்தை மையமாகக் கொண்ட படம். ‘ஃபைனல் டெஸ்டினேஷன்’ மாதிரியான ஒரு ஜானர். இந்தப் படத்தில் எனக்கு இரண்டு டைமன்ஷன் இருக்கும். முதல் பாதியில் ஒரு மாதிரியும், இரண்டாவது பாதியில் வேறு மாதிரியும் இருக்கும்.

படம் முழுக்க வரக்கூடிய கேரக்டர். ‘டார்லிங்-2’வில் ரமீஸ் ராஜாவுக்கு ஜோடியா பண்ணியிருக்கிறேன். ரமீஸ் கூச்ச சுபாவம் உள்ளவர். ரொம்ப பேசமாட்டார். கடின உழைப்பாளி. புரஃபஷனலா இருப்பார். ரொமான்ஸ் சீன்ஸ் அதிகமா இருக்காது. நார்மலா காதலர்களுக்கு என்ன லிமிட் இருக்குமோ அதுதான் படத்துல இருக்கும்.

முத்தக் காட்சி மாதிரி நெருக்கமான காட்சிகள் இருக்காது. கருணாகரன், சென்றாயன்னு நிறைய பேர் படத்துல இருக்காங்க. பாடல்கள் செமயா வந்திருக்கு. நியூ கம்மர் அஷ்வின் மியூசிக் பண்ணியிருக்கிறார். பாடல்கள் யூடியூப்ல நல்ல ரீச். பாடல்களுக்காகவும் இந்தப் படம் பேசப்படும்.

‘பலூன்’ல என்னுடைய கேரக்டர் பெயர் செண்பகவல்லி. என்னுைடய போர்ஷன் 1980ல் நடக்கிற மாதிரி காட்டுவாங்க. ஜெய்க்கு ஜோடியா பண்றேன். ஜெய் பலூன் வியாபாரி. மலைக் கிராம பொண்ணா வர்றேன். பாவாடை சட்டைதான் காஸ்டியூம். வெகுளியான கேரக்டர்னு நினைக்க வேண்டாம். செண்பகவல்லி ரொம்பவும் போல்டான பெண்.

இந்தக் கேரக்டருக்காக ஸ்ரீதேவியை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக்கொண்டேன் என்று சில ஊடகங்களில் செய்தி வந்தது. அது உண்மை அல்ல. ‘மூன்றாம் பிறை’ படத்தை குளிர்ப் பிரதேசத்தில் எடுத்திருப்பார்கள். அதுக்கு ஏற்றமாதிரி தேவி மேடம் காஸ்டியூம்ஸ் இருக்கும். அதுபோல்தான் இந்தப் படத்தில் குளிர்ப் பிரதேசம், என்னுடைய காஸ்டியூம்ஸ் இருக்கும்.

லுக் ரெஃபரன்ஸ்க்காக அப்படி சொன்னேன். அதைத்தான் திரித்து எழுதிவிட்டனர். மற்றபடி அவங்க கேரக்டருக்கும் என்னுடைய கேரக்டருக்கும் சம்பந்தம் இல்லை. ஊட்டி, கொடைக்கானலில் அதிகாலை நான்கு மணிக்கு படப்பிடிப்பு நடந்தபோது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. இந்தப் படங்களைத் தவிர ‘தொலைக்காட்சி’ படத்தையும் முடிச்சிருக்கிறேன்.”

“உங்கள் ப்ளஸ் என்று நீங்கள் கருதுவது?”

“என்னுடைய கண்கள். முதல் படமான ‘அவன் இவன்’ படப்பிடிப்பில் யூனிட்ல உள்ள அனைவரும்  என் கண்கள் அழகாக இருக்கிறது என்று சொன்னார்கள். நீங்களும் அப்படித்தான் இன்ட்ரோ கொடுத்தி ருக்கீங்க. மற்றபடி யார் மனதும் புண்படாமல் பேசவது என் குணம். அதே சமயம் தைரியமான பொண்ணு. யாரும் என்னை ஏமாத்த முடியாது.”

“சினிமாவில் உங்க லட்சியம்?”

“சினிமாவில் எதையும் முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. லக் மட்டுமில்லாமே டைமும் சரியாக அமைய வேண்டும். நாம் நினைத்தது கிடைக்காத போது மனம் சோர்ந்துவிடக்கூடாது. அதில் நான் ரொம்ப க்ளியராக இருக்கிறேன்.

வாய்ப்புகள் வந்தால் படங்களில் நடிப்பேன். வரலைன்னா அதுக்காக ஃபீல் பண்ணமாட்டேன். சினிமாவுக்கு வரும்போதே அந்த மாதிரி மென்டாலிட்டியுடன் தான் வந்தேன். எனக்குப் பிடித்திருந்தால் படங்கள் பண்ணுவேன். மற்றபடி நம்பர் ஒன் நடிகை, டாப் டென் நடிகைகள் பட்டியலில் இடம் பிடிக்கணும் என்று நினைத்ததில்லை.”

“போட்டியை எப்படி சமாளிக்கிறீர்கள்?”

“நான் யாருக்கும் போட்டி இல்லை, எனக்கும் யாரும் போட்டி இல்லை. நடிப்பு எனக்கு பிடிச்சிருக்கு. நான் பண்ணும் படங்கள் பிடிச்சிருக்கு. என் வேலை பிடிச்சிருக்கு. எனக்கு அது போதும். யாரோடும் எனக்கு போட்டி இல்லை. நான் கொஞ்ச படங்கள் தான் பண்ணியிருக்கிறேன். அப்படியிருந்தும் ஆடியன்ஸுக்கு ஜனனின்னா யாருன்னு தெரியுது.

எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல்தான் நடிக்க வந்தேன். அப்படி இருந்தும் மக்கள் மனசுல இடம் பிடிச்சிருக்கேன்னா அதுவே பெரிய சாதனையாக நினைக்கிறேன். சினிமா என்பது கடல் மாதிரி. இங்கு யார் வேண்டுமானாலும் நடிக்க வரலாம். அவர் வந்துட்டா நம்ம வாய்ப்பு பறிபோய்விடுமோ என்ற அச்சம் தேவையில்லை.”

“தமிழ் பேசத் தெரிந்தவங்களுக்கு சினிமாவில் வரவேற்பு எப்படி இருக்குது?”

“தமிழ் பேசத் தெரிந்த பெண்களுக்கு இன்னும் வாய்ப்புகள் அதிகமாகக் கொடுக்கலாம். தமிழ் பேசும் பெண்களுக்கு வாய்ப்புகள் கம்மியாகத்தான் இருக்குன்னு நினைக்கிறேன். இந்தக் கேரக்டருக்கு இவங்கதான் செட் ஆவாங்கன்னு இயக்குநர்கள்தான் முடிவு பண்ணுகிறார்கள். தனிப்பட்ட விதத்தில் தமிழ் பேசத் தெரிந்த நம்மூர் பெண்களுக்கு அதிகமாக வாய்ப்புகள் கொடுக்கலாம் என்பது என்னுடைய கருத்து.

நான் பண்ணவேண்டிய சில படங்கள் கை நழுவிப் போனது. ஆனால் அது இந்தக் காரணத்துக்காகத்தான் கிடைக்கவில்லை என்று நான் எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கு வாய்ப்பு வரலையே என்று யோசிக்காமல் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று அடுத்த வேலைக்கு போய் விடுவதுதான் என் நேச்சர். இப்படியொரு நிலை சினிமாவில் மட்டும் இல்லை, எல்லா இடங்களிலும் இது நடக்கிறது.”

“வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்?”
“இன்றைய தேதி வரை பாலா சார் இயக்கத்தில் நடித்த ‘அவன் இவன்’ படம். பாலா சார் அக்ரிமென்ட் பேப்பரை கையில் கொடுத்து ‘நீங்கள் வீட்டில் போய் படித்துப் பார்த்துவிட்டு கையெழுத்து போடுங்கள்’ என்று சொன்ன அந்தத் தருணம்தான் வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவமாக நினைக்கிறேன். அந்த சந்திப்புதான் என் வாழ்க்கையில் திருப்புமுனை கொடுத்தது.”

“தென் இந்திய சினிமாவில் பாலியல் வன்மங்கள் நடப்பதாக ராதிகா ஆப்தே, தமன்னா போன்ற நடிகைகள் சொல்வது உண்மையா?”

“அந்த மாதிரி அனுபவத்தை இதுவரை நான் சந்திக்கவில்லை. அப்படி சந்தித்திருந்தால்தான் அதைப்பற்றிச் சொல்ல முடியும். மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக கருத்து கூற முடியாது. சினிமா மட்டுமில்ல, எங்கேயும் நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ, எப்படி பேசுகிறோமோ அதை வைத்துதான் நமக்கான மரியாதை உறுதி செய்யப்படுகிறது. எனக்கு சினிமாவில் சில தோழிகள் இருக்கிறார்கள்.

அவர்கள் சொல்லியும் அப்படி நான் கேள்விப்படவில்லை. ஏழு வருடங்களாக நடித்து வருகிறேன். சினிமாவுக்கு வந்த நாள் முதல் இப்போது வரை தவறான கண்ணோட்டத்துடன் யாரும் என்னிடம் பழகவில்லை.”

- சுரேஷ்ராஜா