தெனாலி மதன்பாப்டைட்டில்ஸ் டாக் 44

‘மதுரைக்கு போகாதடி’ என்ற பாடலைப் பாடியவர்தான் என் மகன் அர்ச்சித். எம்.பி.ஏ. எம்.சி.ஏ. படித்திருக்கிறார். விளம்பரப் படங்கள், குறும்படங்களை இயக்கி நடிக்கிறார். இசையும் அவர்தான்.

சமீபத்தில் சுற்றுச்சூழலை வலியுறுத்தி எடுத்த ஆல்பத்துக்கு செம லைக்ஸ் கிடைத்தது. மத்திய அரசாங்கமே அதைப் பார்த்துட்டு அவர்கள் திட்டத்துக்கு பயன்படுத்திவருகிறார்கள். மகள் ஜனனி ‘வேட்டைக்காரன்’ உள்பட ஏராளமான படங்களில் பாடியிருக்கிறார்.

இப்போது செலக்டிவ்வாக இசை நிகழ்ச்சி நடத்துகிறேன். அந்த நிகழ்ச்சியில் நான் கிடார் வாசிக்கிறேன். மனைவி, மகள், மகன் பாடுகிறார்கள். மகன் குடும்பம், மகள் குடும்பம் என்று நாங்கள் ஜாயிண்ட் ஃபேமிலியாக இருக்கிறோம்.

தெனாலி இருந்தால் வாழ்க்கையில் அனைத்தையும் உங்களுக்கு கொண்டுவரும். உங்களுக்குள்ளும் ஒரு தெனாலி இருப்பான். புத்திசாலித்தனத்துடன் கூடிய நகைச்சுவை உணர்வு இருந்தால் எவ்வளவு பெரிய பிரச்சனைகளாக இருந்தாலும் ‘எதிர்நீச்சல்’ போட்டு, ‘மகளிர் மட்டும்’ என்று அவர்களுக்கான மரியாதை கொடுத்தால் உங்கள் வாழ்க்கை ‘தித்திக்குதே’ என்றுசொல்லும் நிலைக்கு மாறிவிடும்.

நான் பேசுகிற டைட்டில் ‘தெனாலி’. கூர்ந்து கவனித்தால் நான் நடித்த படங்களின் டைட்டில்களும் வரும்.என் வாழ்க்கையில் தெனாலியைப் பார்த்தபோது காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வேன்.காரணம், நான் ஏதாவது ஒரு பெரிய விஷயத்தை சொல்வேன். நான் பெரியவனானதும் புகழ்பெற்ற பத்திரிகைகளில் என்னுடைய பேட்டி வரும் என்று சொல்வேன். அப்போது, கிட்டுவுக்கு இதே வேலைதான், ஓவராக பில்டப் கொடுப்பான் என்பார்கள்.

ஆனால் வாழ்க்கையில் அது உண்மையாக நடந்தபோது வாயைப் பொளந்தார்கள். இந்த மாதிரி என் வாழ்க்கையில் நிறைய சம்பவங்கள் நடந்திருக்கு.ஒரு முறை நண்பர்களிடம் பேசும் போது உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களுக்கு தெரிந்த ஒரு பிரபலமாக வருவேன் என்று சொன்னேன். ஆனால் எந்தத் துறை என்று தெரியாது. அப்போது என் நண்பர்கள் இது செல்ஃப் கான்பிடன்ஸ் இல்லை. ஓவர் கான்பிடன்ஸ் என்றார்கள்.நான் ஜெயித்தபிறகு நீ கில் லாடி என்று பாராட்டுகிறார்கள்.

தெனாலிராமன் சொல்லும் போது முதலில் தப்பாகத் தெரிந்து  பிறகு சரியாக இருக்குமே, அதே மாதிரி என் வாழ்க்கையில் பல விஷயங்கள் நடந்தது.
சாதாரணமாக மக்களிடம் ஒரு அபிப்பிராயம் உண்டு. என்னடா, இவன் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கிறான் என்றும் சீரியஸ்நெஸ் தெரியலைன்னும் சொல்வார்கள்.

எனக்கு கல்யாணம் நடந்து 39 வருடங்கள் கடந்துவிட்டது. நான் கல்யாணம் பண்ணிக்கொண்டபோது என்னடா இவன் விளையாட்டுத்தனமா கல்யாணம் பண்ணிக்கிட்டான் என்றார்கள். இவன் ஒழுங்கா குடும்பம் நடத்துவானா என்று பேசினார்கள். ஏன்னா, என்னுடையது லவ் மேரேஜ்.

அன்று எனக்கு அனுபவம் போதாது என்று பேசினவர்கள் வாழ்க்கையில் இப்போது ஆயிரத்தெட்டு பிரச்சனைகள். ஆனால் இவ்வளவு ஆண்டு கால என்னுடைய திருமண வாழ்க்கையில் எந்தவித மனக்கசப்பும் இல்லாமல் இல்லறம் இனிமையாக நடக்கிறது. மகன், மகள், பேரன், பேத்தி பார்த்துள்ளேன்.

சிரிச்சிட்டே இருக்கிறவன் கெட்டுப் போவதில்லை. ஆனால் கெட்டுப் போனவர்கள் நிறைய பேர் சிரிப்பு இல்லாமல் சீரியஸாக இருந்திருக்கிறார்கள். வாழ்க்கையில் சிரிச்சிட்டு இருப்பது விளையாட்டுத்தனம். ராமரை விட கிருஷ்ணருக்கு ஏன் மரியாதை கொடுக்கிறார்கள். ராமர் சொல்ல முடியாத கீதையை சிரிச்சிட்டே இருக்கிற கிருஷ்ணர் சொன்னார். ராமர் தன்னை மட்டும் கருத்தில் கொண்டு நியாயதர்மத்துடன் வாழ்ந்தார்.

நான் சிரித்துக் கொண்டே இருப்பது முக்கியமல்ல. மற்றவர்களையும் சிரிக்க வைக்கிறேன். சிரிப்பே எனக்குத் தொழிலாக அமைந்தது என் பாக்யம்.  பொதுவாக எல்லோரும் கஷ்டப்பட்டு சம்பாதிப்பாங்க. அப்புறம் வேற இடத்துல வந்து சிரிச்சிட்டு இருப்பாங்க.

ஆனால் கடவுள் என்னை சிரிச்சிட்டே இருக்கும்படியான ஒரு தொழிலையும் அதிலேயே சம்பாத்யத்தையும், மன நிம்மதியையும் கொடுத்திருக்கிறார். இவ்வளவுக்கும் காரணம் எனக்குள் இருந்த தெனாலி. என்னுடைய தந்தையும் ஒரு காரணம். அவர் சிரிப்பு ரொம்பவும் பாப்புலர். இரவு நேரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து சிரிக்கும் போது ஊர் மக்கள் மதுரமித்ரன் ஊர்ல இருக்கிறார் என்று சொல்வார்கள்.

என்னுடைய அப்பா சுதந்திரப் போராட்ட வீரர். ராஜாஜி, காமராஜர், முத்துராம லிங்கத் தேவர் போன்ற தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவர். கடைசி வரை இரண்டு கதர் வேட்டி, கதர் சட்டையுடன் வாழ்ந்து முடித்தார். சம தர்மத்தை கடைப்பிடித்தவர்.

நாங்கள் ஆச்சாரமான குடும்பமாக இருந்தாலும் எல்லா சமுதாயத்தைச்சேர்ந்தவர்களும் எங்கள் வீட்டில் இருப்பார்கள்.என் அப்பா எனக்கு கொடுத்த மிகப்பெரிய சொத்து சிரிப்பு. அது என் வாழ்க்கையில் தொழிலாக அமைந்தது. கே.பி.சாருக்கு நன்றி. கடவுளுக்கு நன்றி.

தொகுப்பு: சுரேஷ்ராஜா

(தொடரும்)