மெடிக்கல் ஸ்டூடண்ட்ஸை துரத்தும் அமானுஷ்யம்!



‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’, ‘செளகார்பேட்டை’ படங்களுக்குப் பிறகு வி.சி.வடிவுடையான் இயக்கும் படம் ‘பொட்டு’. இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக இருந்தவரை லஞ்ச் ப்ரேக்கில் மடக்கிப் பிடித்தோம். “பேய்க் கதையை விடமாட்டீங்க போலிருக்குதே?”

“நீங்கள் ‘செளகார்பேட்டை’ படத்தை மனதில் வைத்து கேட்கிறீர்கள். ஆனால் இது பத்தோடு பதினொன்றாக வரும் பேய்ப் படமாக ஓரம் கட்ட முடியாது. ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ படத்தில் எப்படி ஒரு  கதை இருந்ததோ அதுபோல் இதில் ஒரு அழுத்தமான கதையோடு வந்திருக்கிறேன். ஒரு இயக்குநராக எனக்கு தனி அடையாளத்தை இந்தப் படம் பெற்றுத் தரும்.”

“ஷார்ட்டா கதையை சொல்லுங்களேன்?”
“ஒரு மெடிக்கல் காலேஜ் பின்னணியில் நடக்கிற கதை இது. ஒரே கல்லூரியில் படிக்கும் மூன்று பேர் அமானுஷ்ய சக்தியால் பாதிக்கப்படுகிறார்கள். அந்தப் பிரச்சினைகளை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? பிரச்சினையிலிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறேன்.”

“எல்லா மேடைகளிலும் பரத் இந்தப் படத்தை தூக்கிப் பேசுகிறாரே?”
“அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கேன். ‘பாய்ஸ்’ படத்தில் ஆரம்பித்து சமீபத்தில் வெளிவந்த ‘ஸ்பைடர்’ படம் வரை பரத் எத்தனையோ படங்களில், எத்தனையோ கெட்டப் பண்ணியிருக்கிறார். ஆனால் இதில் முற்றிலும் வேறு ஒரு பரத்தை பார்க்கலாம். பாடிலேங்வேஜ், டயலாக் மாடுலேஷன், கெட்டப் என்று டோட்டலாக அவருடைய கேரக்டர் புது டைமன்ஷன்ல இருக்கும். அடிப்படையில் பரத் சிக்ஸ் பேக் ஜிம் பாடியை மெயின்டெயின் பண்ணுபவர். அதே உடல்வாகுடன் இந்தப் படத்தில் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்டா வர்றார்.

பரத்திடம் ஒரு இயக்குநராக எனக்கு பிடிச்ச விஷயம் அவருடைய அர்ப்பணிப்பு. எவ்வளவு கஷ்டமான சீன் கொடுத்தாலும் அதை சிரிச்ச முகத்தோடு ‘ஓ.கே நான் ரெடி’ என்று சொல்வார். அந்தரத்தில் தொங்குவதாக இருந்தாலும் சரி, குதிப்பதாக இருந்தாலும் சரி எல்லாத்துக்கும் ஒடிவந்து  முன்னாடி நிற்பார். படப்பிடிப்பு சமயத்தில் டோட்டல் டீமுக்கும் அவர்தான் எனர்ஜி டானிக். மனுஷன் எப்பவுமே பரபரப்பா இருப்பார். ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்ததைப் பார்த்த போது எங்களுக்கு சித்தம் கலங்கிடுச்சி.

இந்தப் படத்தில் ஒரு காட்சியில் லேடி கெட்டப்ல வர்றார். அதுக்காக உடலில் இருக்கும் ரோமங்களை மழிக்க வேண்டும். அதிகமாக சிரமப்பட்டுத்தான் அந்தக் காட்சியில் நடித்தார். அவருடைய உழைப்புக்கு பலனாக இந்தப் படம் பரத்துக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமையும்.” 

“நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கேன்னு ஒரே படத்துல மூணு ஹீரோயின்?”

“கண்ணு வைக்காதீங்க பாஸ். இது ஒரு திகில் படமாக இருந்தாலும் கமர்ஷியல் படம். அந்த வகையில்தான் படத்துல மூணு ஹீரோயின் வர்றாங்க. நமீதாவை இதுவரை கிளாமர் குயினாகத்தான் பார்த்திருப்பீங்க. இதில் கிளாமர் இல்லாத க்யூட் நமீதாவைப் பார்க்கலாம். அவங்களுடைய கேரக்டருக்கான லுக், காஸ்டியூம் என்று எல்லாமே அவங்களே டிசைன் பண்ணிட்டு வந்தாங்க.

நமீதா போர்ஷன் எடுக்கும் போது ரொம்பவே சிரமப்பட்டோம். பகலாக இருந்தாலும் சரி, இரவாக இருந்தாலும் சரி எப்போது படப்பிடிப்பு நடத்தினாலும் கூட்டம் கூடிவிடும். சில நேரங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸை கூப்பிடுமளவுக்கு நிலைமை விபரீதமாக மாறிடும். அந்த மாதிரி சமயங்களில் நமீதா பொறுமையாக இருந்து எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

இனியா, சிருஷ்டி டாங்கே இருவரும் கல்லூரி மாணவிகளாக வருகிறார்கள். ஒரு கமர்ஷியல் படத்தில் ஹீரோயினுக்கு என்ன முக்கியத்துவம் இருக்குமோ அதுதான் அவர்களுடைய கேரக்டருக்கும் இருக்கும். நாலு சீனுக்கு வந்து போகிற மாதிரி இருக்காது. இனியாவைப் பொறுத்தவரை ஆக்‌ஷன் காட்சிகளில் ரிஸ்க் எடுத்து நடித்தார்.

பரத் அப்பாவாக வரும், தம்பி ராமையா, அம்மாவாக வரும் ஊர்வசி, ஓட்டல் உரிமையாளராக வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் காமெடி ஏரியாவில் தூள் கிளப்பியிருக்கிறார்கள். இவர்களுடன் சாயாஜி ஷிண்டே, மன்சூரலிகான், சுவாமிநாதன் ஆகியோரும் இருக்கிறார்கள்.”
“ஹாரர் படத்துக்கு டெக்னீஷியன் பலம் அதிகமா தேவைப்படுமே?”

“அந்தக் கவலையே எனக்கு இல்லை. ஒரு விறுவிறுப்பான ஹாரர் படத்துக்குத் தேவையான டெக்னீஷியன் டீமை என்னுடைய தயாரிப்பாளர்கள் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் அமைத்துக் கொடுத்தார்கள்.

இசை அம்ரீஷ். பட்டையைக் கிளப்பற மாதிரி பாடல்கள் கொடுத்திருக்கிறார். என்ன விசேஷம்னா, கதைக்குப் பொருத்தமா எல்லாப் பாடல்களும் வந்திருக்கு. பேக்ரவுண்ட் மியூசிக்கிலும் பிரமாதமா ஸ்கோர் பண்ணியிருப்பார். எடிட்டர் எலிசாவுக்கு இந்தக் கதை சீன் பை சீன் மனப்பாடமாகத் தெரியும். எந்த ஷாட் எங்கே இருந்தால் நல்லா இருக்கும்னு ரசிச்சி ரசிச்சி எடிட் பண்ணிக்கொடுத்தார்.

செந்தில் தம்பிரான் வசனம் எழுதியிருக்கிறார்.இது ஒளிப்பதிவுக்கு முக்கியத்துவம் உள்ள படம்.  பகல் காட்சிகளை விட இரவுக் காட்சிகளைப் படமாக்குவதில் சவால்கள் அதிகமாக இருக்கும். அந்தவகையில் ஒளிப்பதிவாளர் இனியன் ஜே. ஹாரிஸின் திறமை பேசப்படும் விதத்தில் இருக்கும்.

படத்துல மொத்தம் நான்கு சண்டைக் காட்சிகள். தவிர படம் முழுவதும் ஆக்‌ஷன் சீக்குவன்ஸ் இருந்து கொண்டே இருக்கும். சூப்பர் சுப்பராயன் அதை கச்சிதமாக பண்ணிக்கொடுத்தார். சென்னை, கொல்லிமலை உள்பட ஏராளமான லொகேஷன்களில் படப்பிடிப்பு நடந்தது.
கொல்லிமலையில் 2000 அடி உயரத்தில் உள்ள கிராமத்தில் சில காட்சிகளை எடுத்தோம்.

வாகனங்கள், மின்சாரம் இல்லாத ஊர் அது. அடிவாரத்திலிருந்து நடந்துதான் ஊருக்குள் செல்ல வேண்டும். படப்பிடிப்புக் கருவிகளை ஆர்ட்டிஸ்ட் உட்பட எல்லாரும் பகிர்ந்துகொண்டு அங்கு படப்பிடிப்பை நடத்தினோம். அந்தக் காட்சிகள் படத்தில் ஹைலைட்டாக இருக்கும்.”

-சுரேஷ்ராஜா