தாத்தா ஹீரோ! பாட்டி ஹீரோயின்!!



கையிலே காப்பு, கழுத்திலே கயிறு, கட்டம் போட்ட லுங்கி, முழங்கை வரை மடித்துவிடப்பட்ட கறுப்புச் சட்டை என்று பக்கா லோக்கல் தாதாவாக டெரர் காட்டுகிறார் எண்பத்தேழு வயசு தாத்தா சாருஹாசன். தம்பி கமல், அரசியலில் பிஸியாகிவிட்டதாலோ என்னவோ, தன்னுடைய அடுத்த சினிமா ரவுண்டை ஜரூராக ஆடத் தயாராகி விட்டார். ‘தாதா 87’ படத்துக்காகத்தான் இவ்வளவு கெத்து.

ஸ்டில்களில் மிரட்டியிருக்கும் இயக்குநர் விஜய்ஸ்ரீ.ஜி-யை ஷூட்டிங் ஸ்பாட்டில் பிடித்தோம்.“சாருஹாசன் ஹீரோ. ஜனகராஜுக்கு மெயின் ரோல். ஸ்டில்ஸை பார்த்தவங்க எல்லாம் ‘நாயகன்’ ரீமேக்கான்னு கேட்குறாங்க. எல்லாருக்கும் ஒரே பதிலைத்தான் சொல்லிக்கிட்டிருக்கேன் ‘இது வேற லெவல் படம்’. நீங்க யூகிக்கிற எதுவுமே படத்திலே இருக்காது. அழுத்தமான கதையோடு ‘தாதா 87’ மிரட்டுவார்” என்று நம்பிக்கையோடு ஆரம்பித்தார்.

“சாருஹாசனை எப்படி பிடிச்சீங்க?”

“இதுவரை அவரை தமிழ் சினிமா பெரும்பாலும் அப்பாவியான கிழவர் வேடத்தில்தான் காட்டியிருக்கு. ‘ஜெய்ஹிந்த்’ படத்துலே மட்டும்தான் எதிர்மறை கேரக்டரில் நடிச்சி கலக்கியிருப்பாரு. அவராலே எல்லா வேடமும் செய்ய முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. நான் கதை சொல்லப் போயிந்தேன்.

‘படத்துல நீங்க தாதா’னு சொன்னதுமே, ஜாலியா ரசிச்சு சம்மதிச்சார். பைபாஸ் ஆப்ரேஷன் பண்ணினவர் அவர்.  கொஞ்சம் நடக்கவே சிரமப்பட்ட நிலையிலும் கரெக்ட்டான டைம் ஷூட்டிங் வந்து நடிச்சு குடுத்தார். சமீபத்தில் நானும் அவரும் ஒரு ஃபங்ஷன் போயிருந்தோம். அங்கே இயக்குநர் மகேந்திரன் சாரும் வந்திருந்தார்.

மேடையில் சாரு சார் சொல்றார். ‘என்னோட முதல் பட இயக்குநர் மகேந்திரனும், கடைசி பட இயக்குநர் விஜய்யும் இந்த விழாவில் இருக்காங்க’னு சொன்னார். அங்கே வந்திருந்த அர்ஜுன் சாரும் என்னை வாழ்த்தினார். இந்தப் பட ஷூட்டிங்கில் சாருஹாசன் சார் அடிக்கடி ‘நான் தாத்தா இல்லடா.. தாதா’னு சொல்லுவார். அதையே படத்திலும் பன்ச் டயலாக்கா வச்சிருக்கேன்.

படத்துல அவருக்கு ஜோடி உண்டு. லவ் சீன்ஸும் உண்டு. அவருக்கு ஜோடியா யாரை நடிக்க வைக்கலாம்னு அவர்கிட்டேயே கேட்டேன். ‘என்னோட கேர்ள் ஃப்ரெண்ட் ஒருத்தர் இருக்கார்’னு அவரே சொன்னார்.

கீர்த்தி சுரேஷ் பாட்டி சரோஜா மேடமும் சாருஹாசன் சாரும் ஃபேமிலி ஃப்ரெண்ட்ஸ். சாருஹாசன் சாரே மேனகாவோட அம்மா சரோஜா மேடத்துக்கிட்டே பேசி நடிக்க சம்மதிக்க வச்சார். இவங்க லவ் போர்ஷன் ஷூட் அன்னிக்கு பாட்டி கூட கீர்த்திசுரேஷும் ஸ்பாட்டுக்கு வந்துட்டாங்க. ஒரு நாள் முழுக்க அன்னிக்கு படப்பிடிப்பில் இருந்து லவ் சீன்ஸை எல்லாம் ரசிச்சு கவனிச்சாங்க.”

“டைட்டிலிலேயே இது தாதா கதைன்னு பளிச்சுன்னு சொல்லிட்டீங்களே?”

“வெறுமனே இதை தாதா கதைன்னு சுருக்கி சொல்லிட முடியாது. சென்னையில் உள்ள இயல்பான, எளிய மனிதர்களைப் பத்தின கதை. பாலாசிங், ஆனந்த்பாண்டியன், ஜெனிபல்லவி, அனுலாவண்யா, நவீன் ஜனகராஜ், கதிர்னு கிட்டத்தட்ட பன்னிரெண்டு நட்சத்திரங்கள் இருக்காங்க. தவிர, படத்துல ஒரு பெரிய சஸ்பென்ஸ் வச்சிருக்கேன்.

அதென்னன்னு படம் வந்ததும் தெரிஞ்சுக்கங்க. லீயாண்டர் லீ மார்டி என்ற அறிமுக இசையமைப்பாளரின் இசை பேசப்படும். ‘சூதுகவ்வும்’ ராஜபாண்டி இதில் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். காசிமேடு பகுதியில் படப்பிடிப்பு நடந்திட்டிருக்கு.  சினிமாவுல நான் ரொம்ப வருஷமா இருக்கேன். பெரிய, சின்ன இயக்குநர்கள்கிட்ட ஒர்க் பண்ணியிருக்கேன். இந்தப்படம்தான் எனக்கு ஒரு பெரிய விசிட்டிங் கார்டாக அமையும்னு நம்புறேன்.”

“ஜனகராஜை மறுபடியும் தேடிப்புடிச்சி கொண்டு வந்திருக்கீங்க...?”

“ஜனகராஜ் சார் காமெடி நமக்கு எவர்க்ரீன் காமெடி. ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்ட்டா’, ‘தங்கச்சியை நாய் கடிச்சிடுச்சுருச்சுப்பா’வெல்லாம் மறக்கமுடியுமா? அவர் கடைசியா நடிச்சு, பத்தாண்டுகள் ஆயிடிச்சி.

இந்தப் படத்துல அவரை நடிக்க வைக்கலாம்னு யோசிச்சா, அவர் அமெரிக்காவில் இருக்கறாரு.. அது இதுனு நிறைய பேர் ஆயிரம் வதந்திகள் சொன்னாங்க. ஒரு வழியா அவர் நம்ம ஊர்லதான் இருக்கறார்னதும் சந்தோஷமாகி அவரை நேர்ல போய்ச் சந்திச்சேன். அவர் மறுபடியும் நடிக்கற ஐடியாவிலேயே இல்லை.

கிட்டத்தட்ட ஆறு மாசமா அவர் வீட்டுக்குப் போய் வற்புறுத்திக்கிட்டே இருந்தேன். முயற்சி வீண் போகலை. நடிக்க சம்மதிச்சார். என் படத்துக்குப் பிறகு இப்போ அவர் விஜய சேதுபதியோட ‘96’ படத்திலும் நடிக்கிறார். ஜனகராஜ் சாருக்கு இதுல ‘கிழக்கு வாசல்’ மாதிரி ஒரு வெயிட்டான ரோல். ஆனா, ஷூட்டிங்ல் அவர் போர்ஷன் எடுக்கும்போது அவர் சீரியஸாகத்தான் பேசுவார்.

ஆனா, யூனிட்ல உள்ளவங்க விழுந்து விழுந்து சிரிச்சிடுவாங்க. இந்தப்படம் அவருக்கு நல்ல ஒரு ரீ-என்ட்ரி படமா அமையும்னு நம்புறோம். அவரை சந்திக்கப் போனதில் நல்ல விஷயமும் நடந்திருக்கு. சாரோட பையன் நவீன் ஜனகராஜ் அறிமுகம் கிடைச்சிடுச்சு. அவர் பி.பி.ஓ. துறையில் ஒர்க் பண்றவர். ஜப்பான் மொழி நல்லா தெரிஞ்சவர். அவரையும் சம்மதிக்க வச்சு இதில் அறிமுகப்படுத்துறேன்.

அஜித் ரசிகரா நடிச்சிருக்கார். சென்னையில் வளர்ந்தவர்னாலும் ஜனகராஜ் சார் மாதிரி சென்னை ஸ்லாங் பேச வரலை. அவருக்கும் டிரெயினிங் குடுத்து சென்னை பாஷையில பேச வச்சிருக்கோம். இந்தப் படத்துல ஒரு ராவான சென்னை மக்களின் லைஃபை அப்படியே கண் முன்னாடி கொண்டு வந்திருக்கோம்.”

- மை.பாரதிராஜா