தயாரிப்பாளரை காமெடியன் ஆக்கிய இயக்குநர்!



“நிறைய புராணப்படங்கள் பார்த்திருப்போம். அதில் மகாவிஷ்ணு, சிவபெருமானின் திருவிளையாடல்களை சொல்லும் படங்கள்தான் அதிகம் வந்திருக்கு.

எனக்குத் தெரிஞ்சு தமிழில் பிரம்மாவின் பெருமைகளை சொல்லும் படங்கள் வந்ததில்லைனு நினைக்கறேன். ‘விஷ்ணுவும், சிவனும் காத்தல், அழித்தல் பண்றதால ஒருவித அச்சத்தோடு அவங்கள ஃபாலோ பண்ணவேண்டிய கட்டாயத்தில் இருக்கோம்ஆனா, நம்மள படைச்சதோடு பிரம்மாவின் கடமை முடிஞ்சிடுச்சே...

அப்புறம் ஏன் அவரை வழிபடணும்னு நினைக்க ஆரம்பிச்சிட்டோம் போல... அதனால் தான் பிரம்மாவின் கோவில் கூட அரிதாகத்தான் அங்கொண்ணும் இங்கொண்ணுமாகத்தான் இருக்கு.

ஆனா, பிரம்மாவிடமும் நிறைய திருவிளையாடல்கள் இருக்கு’’ - எடிட்டிங் பரபரப்புக்கிடையே உற்சாகம் பொங்க பேசுகிறார் புருஷ்விஜயகுமார். நகுல், நீதுசந்திரா, ஆஷ்னா ஜாவேரி நடிக்கும் ‘பிரம்மா.காம்’ படத்தின் அறிமுக இயக்குநர் இவர்.
“ஆத்தாடி. ‘திருவிளையாடல்’ காலகட்டத்துக்கே அழைச்சிட்டு போயிடுவீங்க போலிருக்கே...?”

“புராணப் படமா எதிர்பார்த்துடாதீங்க ப்ரோ. இது கலர்ஃபுல்லான ஃபேன்டஸி காமெடி. அடுத்த சீன் இதுவாகத்தானிருக்கும்னு நீங்க நினைக்கற யூகம் எதுவும் இதுல இருக்காது. ஜாலியான ஒரு கன்டென்ட் வச்சிருக்கேன்.

திடீர்னு உங்க முன்னாடி கடவுள் தோன்றினால் என்ன நிகழும்? ‘உனக்கு வேண்டும் வரம் கேள்’னு நம்மை கடவுள் கேட்பார். ‘என்ன வரம் நமக்கு தேவைன்னு கடவுள் தெரிஞ்சு வச்சுக்க மாட்டாரா?’னு நமக்குள்ளேயே சில நேரங்களில் கேள்வி எழும் இல்லையா! அந்த சந்தேகத்துக்கான விடையைத் தான் ‘பிரம்மா.காம்’ல சொல்லியிருக்கோம்.

சின்னச் சின்ன விஷயத்துக்கும் எமோஷனல் ஆகுற..  பிரமிக்கற, கண்கலங்குற, அப்செட் ஆகுற ஒரு சாதாரண பையனோட வாழ்க்கையில் நடக்கற விஷயங்கள்தான் கதை. என்னோட ஹீரோவுக்கு பெரிய பாடிபில்டர் லுக் தேவைப்படல. சாதாரண பையன் லுக் இருந்தா போதும். அதுக்கு நகுல் சார் ரொம்ப பொருத்தமா இருந்தார். அவர் வருஷத்துக்கு ஒரு படம் பண்ணினாலும் பேசப்படக்கூடிய படமாகத்தான் பண்ணுவார்.

நகுலைத் தவிர பாக்யராஜ் சார், கௌசல்யா, சோனா, சித்தார்த்விபின், நீதுசந்திரா, ஆஷ்னா ஜாவேரி, ஜெகன், மொட்டை ராஜேந்திரன்னு நிறைய பேர் இருக்காங்க. இந்தப் படம் தொடங்குறதுக்கு முன்னாடி ஒரு நல்ல டெக்னிக்கல் டீம் அமையணும்னு கவனமா இருந்தேன். அடுத்தடுத்து என்னோட ட்ராவல் அந்த டீமோட அமையற சூழல் இருக்கணும்.

அப்படி ஒரு டீம் எனக்கு கிடைச்சிருக்கு. ‘தில்லுக்கு துட்டு’ கேமராமேன் தீபக்குமார் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். அவரை நகுல் தான்  அறிமுகப்படுத்தினார். பிரமாதமான லைட்டிங் நாலேஜ் உள்ளவர். படத்துல கிராபிக்ஸ் ஒர்க், மேஜிக் சீன்ஸ் நிறைய இருக்கு. அத்தனையையும் அழகா விஷுவல் பண்ணியிருக்கார். ‘காஷ்மோரா’ சாபு ஜோசப் சாரின் எடிட் படத்துக்கு பெரிய தூண்.”
“நீது சந்திரா கம்பேக் போல..?”

“அவங்க தமிழ்ல தொடர்ந்து நடிக்க ஆர்வமா இருக்காங்க. நீது இதுல பாலிவுட் நடிகையா வர்றாங்க. மும்பையிலிருந்த அவங்ககிட்டே கதை சொல்றதுக்காக போன் பண்ணினேன். ‘நேர்ல வந்து கேட்கிறேனே’னு மறுநாளே சென்னை வந்து கதை கேட்டாங்க. ஸாங் ஷூட் அப்போ சமிக்கி வேலைப்பாடுகள் அதிகம் வச்ச ஒரு சேலை அணிந்து ஆடினாங்க. பாட்டு முடிஞ்சதும்தான் தெரிஞ்சது ஷார்ப்பான அந்த சமிக்கிகள் உரசி, நீது உடம்பில் அங்கங்கே இரத்தக்கோடு விழுந்திடிச்சி.

அந்த வலியையும் பொருட்படுத்தாம ஆடினாங்க. படத்தோட கடைசி சீன் வரை நீது வர்றாங்க. அதே மாதிரி ஆஷ்னா, இதுல மாடலிங் பொண்ணு. ஏற்கெனவே அவங்க மாடல்னால படத்துல கலக்கியிருக்காங்க. முதன்முதலில் அவங்கள கமிட் பண்ண போனப்போ அவங்களுக்கு செம ஃபீவர். அவங்க காய்ச்சல் குணம் ஆகுற வரை, அவங்களுக்காக நாங்க காத்திருந்தோம்.”
“என்ன சொல்றார் பாக்யராஜ்?”

“நான் சின்ன வயசில இருந்து பார்த்து பிரமிச்ச ஒருத்தர் பாக்யராஜ் சார். அவர்கிட்ட நான் கதையைச் சொன்னதும், ரொம்ப இம்ப்ரஸ் ஆனார். டப்பிங் அப்போ ஒரு மணிநேரம் படத்தை பார்த்துட்டு, சின்னச்சின்ன சேஞ்சஸ் சொன்னார். அவர்கிட்ட யாரோ ‘டைரக்டர் ரொம்ப பதட்டமா இருக்கார்’னு சொல்லியிருப்பாங்க போல. ரொம்ப ஃப்ரெண்ட்லியா என்கிட்ட பேசினார். ‘ட்ரெயிலர் நல்லா கட் பண்ணுங்க. எந்த பயமும் வேணாம். படம் ரொம்பவே நல்லா வந்திருக்கு.’னு தோள் தட்டி என்கரேஜ் பண்ணினார்.

சோனா, கௌசல்யா ரோல்கள் பேசப்படும். இன்னொரு விஷயம் - படத்துல மொட்டை ராஜேந்திரன் பையன் கேரக்டர்ல நடிக்க நிறைய பேரை பார்த்தேன். யாருமே செட் ஆகலை. பணக்கார வீட்ல இருக்கற லூசு பையன் கேரக்டர் அது. அன்னிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு இந்தப் படத்தோட தயாரிப்பாளர் கணேஷ்கார்த்திகேயன் சார் வந்திருந்தார்.

அவரைப் பார்த்ததும் முடிவு பண்ணிட்டேன், ராஜேந்திரன் பையன் கேரக்டருக்கு நூறு சதவிகிதம் பொருத்தமா இருப்பார்னு. அமெரிக்காவில் பெரிய பிசினஸ்மேன் அவர். அவர்கிட்ட நடிக்கக் கேட்டதும், ‘அந்தக் கேரக்டரா?’னு ஜெர்க் ஆனார். நான் பிடிவாதம் பிடிச்சு, அவரை நடிக்க வச்சிருக்கேன். இப்போ டப்பிங், எடிட்டிங்ல பார்க்குற எல்லாருமே ‘அந்த கேரக்டர்ல நடிச்சிருக்கறது யாரு?’னு ஆச்சரியமா விசாரிக்கறாங்க.”

“சித்தார்த் விபின் இசையமைக்கற படத்துல எல்லாம் நடிக்க ஆரம்பிச்சிட்டாரா?”
“அப்படி சொல்லிட முடியாது. விபின் இதுல செகண்ட் ஹீரோ மாதிரி. புரொட்யூசருக்கு அடுத்து நான் கதை சொன்னது ஹீரோவுக்குக் கூட இல்லை. சித்தார்த் விபினுக்குத்தான். முதல்ல நடிக்கறதுக்குதான் கேட்டிருந்தேன்.

ஒரு காபி ஷாப்ல அவருக்கு கதை சொன்னேன். அப்புறம் ஆறுமாசத்துக்குப் பிறகுதான் இந்தப் படத்தை தொடங்கினேன். நீங்களே மியூசிக் பண்ணிடுங்கனு சொல்லி, சிச்சுவேஷன்களை சொல்ல ஆரம்பிச்சேன். ஆனா, சித்தார்த்துக்கு ஆறுமாசத்துக்கு முன்னாடி சொன்ன கதை, சீன்ஸ் எல்லாமே நினைவு வச்சிருந்தார். ‘நீங்க வருவீங்கனு தெரியும். பாடல்கள் ரெடி பண்ணி வச்சிட்டேன்’னு சொல்லி என்னை ஆச்சரியப்படுத்தினார்.”
“உங்களப் பத்தி சொல்லுங்க?”

“எங்க குடும்பத்துக்கும் சினிமாவுக்குமான நெருக்கம் அதிகம். எங்க தாத்தா தேவநாத ஐயங்கார் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம்கிட்ட அசோசியேட்டா இருந்தவர். ‘ஆயிரம் தலைவணங்கிய அபூர்வ சிந்தாமணி’ல கூட அவர் நடிச்சிருக்கார்.

எங்க அம்மா கஸ்தூரி, நாடக நடிகை. சங்கரதாஸ் சுவாமிகளோட கடைசி காலகட்ட நாடங்கள்ல எங்க அம்மா நிறைய நாடகங்கள்ல நடிச்சிருக்காங்க. சினிமாவில் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையோடு இருந்தாங்க. ஆனா, எனக்கு அவங்கள பார்த்துதான் சினிமா ஆசை வந்தது.

குழந்தை நட்சத்திரமா நிறைய படங்கள் நடிச்சேன். அப்புறம் டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் இருந்திருக்கேன். அதன் பிறகு விகடன் டெலிவிஸ்டாஸ்ல அசோசியேட் ஒர்க், ஷெட்யூல் டைரக்டர்னு என்னோட சிறகுகள் விரிஞ்சது.

சன் டி.வி.யோட ‘சூப்பர் குடும்பம்’ல கூட எக்ஸிகியூட்டிவ்வா ஒர்க் பண்ணியிருக்கேன். அந்த அனுபவங்களோட அடுத்த கட்டமா சினிமாவிற்கு வந்திருக்கேன். ‘பிரம்மா.காம்’ எனக்கான சிறந்த அடையாளமாக இருக்கும்னு நம்புறேன்.”

- மை.பாரதிராஜா