மூதாதையர் மீது போர் தொடுக்கும் மனிதர்கள்!



குரங்கு மனிதர்களின் சுதந்திரத்துக்காக போராடத் துவங்கிய சீஸர், தன்னுடைய வாழ்வாதாரத்துக்காக போராடுவதே ‘பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ ஹாலிவுட் தொடர் படங்களின் மூன்றாம் பாகமான ‘வார் ஃபார் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ படத்தின் கரு. சீசர் மற்றும் குரங்கு மனிதக் குழுவினரின் இருப்பிடம் மொத்தமும் போர் மேகம் சூழ ராணுவப் படை இறங்கி தாக்குதல் நடத்துகிறது.

இங்கிருந்து கிளம்பி ஒரு பாதுகாப்பான இடத்திற்குச் செல்லலாம் என முடிவெடுத்து தயாராகும் தருவாயில் சீசரின் மனைவி, மகன் இருவரும் ராணுவ தலைவனால் கொல்லப்படுகின்றனர். தன் கூட்டத்தாரை புது இடம் நோக்கி அனுப்பி வைத்துவிட்டு, பழிவாங்க கிளம்புகிறார் சீசர். அவரது நெருங்கிய நண்பர்களும் அவரோடு இணைகிறார்கள். சீஸரின் நோக்கம் நிறைவேறியதா என்பது மனதை பிசையும் கிளைமேக்ஸ்.

சீசராக நடித்திருக்கும் ஆன்டி செர்கிஸின் நடிப்பு பல இடங்களில் ஆச்சர்யம். சீசர் மட்டுமல்ல, ஒவ்வொரு குரங்கு மனிதர் கதாபாத்திரமும் அவ்வளவு துல்லியம். வில்லனாக வரும் வூட்டி ஹார்ரெல்ஸன் மிரட்டியிருக்கிறார். இவர்களை விட புதிய கேரக்டர்களாக இந்த பாகத்தில் இணைந்திருக்கும் வாய் பேச முடியா சிறுமி நோவா அமைதியான நடிப்பில் கவருகிறாள்.

‘ஏப்ஸ் ஏப்ஸ்களைக் கொல்லாது’ என்பது மாதிரியான புத்திசாலித்தனமான வசனங்கள் படம் முழுவதும் நிறைந்திருக்கிறது.ஹீரோ முன்பாகவே அவரது கூட்டம் துன்புறுத்தப்படுவது, கொட்டும் பனியில் ‘பாட்ஷா’ பட ஸ்டைலில் ஹீரோ கட்டிவைத்து அடிக்கப்படுவது என்று நாம் பார்த்துக் கொண்டிருப்பது ஹாலிவுட் படமா அல்லது தமிழ்ப்படமா என்று சந்தேகம் கொள்ளுமளவுக்கு காட்சிகள்.

படம் ஆரம்பித்து சில நிமிடங்களில் ஏப்ஸ் பேசும் மௌன மொழிகள் நமக்கே புரிய ஆரம்பித்து விடுவது இயக்குநர் மேட் ரீவ்ஸின் புத்திசாலித்தனமான திரைக்கதையமைப்பைக் காட்டுகிறது. மொத்தத்தில் ‘வார் ஃபார் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’ ஏப்ஸ் சீரிஸ் ரசிகளுக்கு ஸ்பெஷல் விருந்து.

- ஷாலினி நியூட்டன்