குரு பார்வை மனோஜ்குமார்



டைட்டில்ஸ் டாக் 26

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது சான்றோர் தந்த வரிசை. இதில் தெய்வத்துக்கு முன்பாக குறிப்பிடப்பட்டிருக்கும் குருவின் பார்வை பட்டபோதெல்லாம் என் வாழ்வு ஏறுமுகமாகவே உயர்ந்திருக்கிறது. சோர்ந்த சமயங்களில் குருவால் எழுச்சி பெற்றிருக்கிறேன். துவண்டபோதெல்லாம் நிமிர்ந்திருக்கிறேன்.

ஓர் இயக்குநராக தமிழ் சினிமாவில் கால் செஞ்சுரி அடித்திருக்கிறேன். இதில் எனக்கு மறக்கமுடியாத படமாக அமைந்தது ‘குருபார்வை’. மானசீகமாக என்னுடைய குருக்களையெல்லாம் மனசுக்குள் கொண்டுவந்தே சொந்தத் தயாரிப்பான இந்தப் படத்துக்கு இந்த டைட்டிலை வைத்தேன்.தேனிக்கு அருகில் சிறு கிராமத்தில் பிறந்தேன்.

அரசுப்பள்ளியில் கல்வி. அரைக்கால் டவுசர், மஞ்சப்பை, செருப்பு இல்லாத கால்களோடு அமைந்தது என் கல்விப்பயணம். ஆயிரத்து ஐநூறு பேர் என்னுடைய பள்ளியில் படித்தார்கள் என்று சொன்னால் இன்று யாரும் நம்பமாட்டேன் என்கிறார்கள். இவ்வளவு பேரையும் மேய்க்க எத்தனை நூறு ஆசிரியர்கள் இருந்திருக்க வேண்டும்? எங்களுக்கு மிகக்குறைவான ஆசிரியர்களே இருந்தார்கள்.

எனினும், நிறைவான கல்வியைக் கொடுத்தார்கள்.துறுதுறுப்பான சிறுவன் நான். படிப்பதற்கே எனக்கு ‘மூடு’ வேண்டும். ஆவரேஜான என்னை ‘நீ நல்லா படிக்கிறே’ என்று மனசறிந்து பொய் சொல்லி ஊக்குவித்தவர் ஜானகி டீச்சர். அப்போதெல்லாம் எங்கள் வீட்டு தோட்டத்து மாங்காய்களைப் பறித்து சந்தை யில் கூறுகட்டி விற்று சம்பாதிப்பது என் வழக்கம்.

“சினிமா பார்க்க சில்லறை கிடைக்குதுன்னு நீ இதுலே இறங்கிட்டீன்னா, வாழ்க்கை முழுக்கவே சில்லறைக்கு மாங்காய் பொறுக்க வேண்டியதுதான்” என்று எச்சரித்து என்னை படிப்பின் மீது ஆர்வம் கொள்ளச் செய்தார். அவர் கொடுத்த ஊக்கம்தான் நான் எஸ்.எஸ்.எல்.சி. தேறுவதற்கு காரணம்.

மேல்நிலைப்பள்ளியில் எம்.ஆர்.கணபதி சார் எங்களுக்கு ஆசிரியராக அமைந்தது நாங்கள் செய்த வரம். பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் மாணவர்களைக் கண்டுபிடித்து, தேவையான ஸ்காலர்ஷிப்பை அவரே அப்ளை செய்து வாங்கிக் கொடுப்பார்.

ஜானகி டீச்சரும், கணபதி சாரும் இல்லாவிட்டால் இன்னும் ஊரில் காட்டுவேலைதான் பார்த்துக் கொண்டிருந்திருப்பேன்.பொள்ளாச்சி நாச்சிமுத்து கல்லூரியில் எனக்கு மெக்கானிக்கல் என்ஜினியரிங் கிடைத்தது. அங்கு சீட் பிடிப்பதே கஷ்டம். பழநியில் உள்ள புகழ்பெற்ற தியேட்டர் முதலாளி ஒருவர் சிபாரிசு செய்து சேர்த்தார். அங்கு படிப்பை முடிப்பதற்குள்ளாகவே கோவையில் உள்ள எவரெஸ்ட் என்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இங்கேதான் என்னுடைய இன்னொரு குருவான சொக்கலிங்கம் சாரை கண்டேன்.

இயந்திரங்களை வடிவமைப்பதற்கு பொறுமையாக சொல்லிக் கொடுப்பார். நான் டிசைன் செய்த சில இயந்திரங்கள், டெல்லியில் பெரிய நிறுவனங்களில் இடம்பெற்றிருக்கிறது. திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய்ஸ் பேஸ் சென்டரில் கூட என்னுடைய இயந்திர வடிவமைகளுக்கு இடம் கிடைத்தது.

புகழ்பெற்ற பெல் நிறுவனத்திலும் என் டிசைன்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதெல்லாம் சொக்கலிங்கம் சார் எனக்கு கொடுத்த ஊக்கத்தால் கிடைத்த பரிசுகள். எனக்கு என் மீதே நம்பிக்கை பிறந்த நாட்கள் அவை. சொக்கலிங்கம் சார் இல்லையேல் நான் பாட்டுக்கு இயந்திரங்களோடு இயந்திமாகக் கிடந்திருப்பேன்.

அப்போது கோவையில் ‘கிழக்கே போகும் ரயில்’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. வேடிக்கை பார்க்கப் போனேன். ‘பூவரசம் பூ பூத்தாச்சு, பொண்ணுக்கு  சேதியும் வந்தாச்சு, காவேரி போல பொங்குற மனசு பாடாதோ’ என்று ராதிகா ஒயிலாக  நடனமாடிக் கொண்டிருந்தார். ஷூட்டிங் பிரேக்கில் என்னைக் கவனித்தார் என்னுடைய குருநாதர்களில் ஒருவரான பாரதிராஜா. அவருக்கு நெருங்கிய உறவினன் என்பதால் அருகில் அழைத்துப் பேசினார்.

என்னுடைய வேலை உள்ளிட்ட விஷயங்களை விசாரித்தவர், “டேய், சொந்தப்படம் எடுக்கலாம்னு இருக்கேன். பார்த்துக்க நம்பிக்கையான ஆளு வேணும். நீ மெட்ராசுக்கு வந்துடேன்” என்று அன்புக்கட்டளையிட்டார்.

எனக்கும் சந்தோஷம்தான்.ஆனால்-நான் வேலை பார்த்த நிறுவனத்தில் என்னை விடுவிக்க சம்மதிக்கவில்லை. கோயமுத்தூர்க்காரரும், பிரபல தயாரிப்பாளருமான கே.ஆர்.ஜி. சார்தான் நிறுவனத்தில் பேசி என்னை அனுப்பி வைத்தார். அப்போது கே.ஆர்.ஜி. தயாரிப்பில் ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை பாரதிராஜா இயக்கிக் கொண்டிருந்தார்.

பாரதிராஜா, ‘புதிய வார்ப்புகள்’ படத்தைத் தயாரித்து இயக்கத் தொடங்கியிருந்தார். அதில் நான் புரொடக்‌ஷன் வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்துகொண்டிருந்தேன். ஆனால், எனக்கு இயக்கம் மீதுதான் ஈர்ப்பு இருந்தது. என்னுடைய விருப்பத்தை இயக்குநரிடம் சொன்னேன். “அடுத்த படத்துல பார்த்துக்கலாம்” என்றார்.

சொன்னபடியே ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் என்னை உதவி இயக்குநராக சேர்த்துக் கொண்டார். எப்படி கிளாப் அடிப்பது என்று அவரே எனக்கு சொல்லிக் கொடுத்தார். ராசியான அவரது கையால் பழக்கப்படுத்தியதால்தான் என்னால் இருபத்தைந்து படங்கள் இயக்க முடிந்தது.

அந்நாட்களில் அவர்தான் என் அடையாளம். அவரால்தான் எனக்கு சினிமாவுலகில் அங்கீகாரம் கிடைத்தது. பாரதிராஜாவின் அசிஸ்டென்ட் என்று சொன்னாலே அத்தனை இடங்களிலும் ராஜமரியாதைதான். நான் அவரிடம் வேலை பார்க்கிறேன் என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் என் மாமனார் எனக்கு பெண் கொடுக்கவே சம்மதித்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

உறவுக்காரன் என்பதால் எனக்கு மட்டும் இந்த சலுகையில்லை. அவரிடம் அப்போது வேலை பார்த்த மனோபாலா, மணிவண்ணன், ரங்கராஜன், சித்ரா லட்சுமணன் ஆகியோருக்கும் இதே மாதிரியான அனுபவங்களையே அவர் வழங்கினார்.

என் குருநாதர் பாரதிராஜாவிடம் ‘கடலோரக் கவிதைகள்’ வரை பதினெட்டு படங்களில் பணிசெய்து பாடம் பயின்றேன். இதில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால் அவரிடம் சேர்ந்து கிளாப் அடித்ததும் முட்டம் கடற்கரையில்தான். கடைசியாக இயக்குநர் வாய்ப்பு கிடைத்து அவரிடம் ஆசிபெற்று கிளம்பியதும் அதே முட்டம் கடற்கரையில்தான். அடுத்த வாரமும் உங்களோடு பேசுவேன்.

தொகுப்பு : சுரேஷ்ராஜா

(தொடரும்)