ரூபாய்



லாரி நிறைய பணம்!

ஒரு பைனான்ஸ் கம்பெனியிலிருந்து கோடிகளைக் கொள்ளையடிக்கிறார் ஹரீஷ் உத்தமன். போலீஸ் சோதனையிலிருந்து தப்பிப்பதற்காக, பணத்தை அருகே நிற்கும் மினி லாரியில் வைக்கிறார். அந்தப் பணம் யார் கையில் சிக்குகிறது என்பதை ஒரு பயணக் கதையாக சொல்லியிருக்கிறார்கள்.

சமீப வருடங்களாக ஆங்கிலப் படங்களைப் போலவே தமிழிலும் பயணக் கதைகள் பெருகி வருகின்றன. அவ்வகையில் இந்த ‘ரூபாய்’ திரைப்படமும் வித்தியாசமான களனில் ரசிகர்களுக்கு சுவாரஸ்யமாக கதை சொல்லுகிறது.

‘கயல்’ சந்திரன், ‘கயல்’ ஆனந்தி இருவரும் இனிமேல் ‘ரூபாய்’ சந்திரன், ‘ரூபாய்’ ஆனந்தி என்று அழைக்கப்படுமளவுக்கு எதார்த்த நடிப்பை அள்ளி இறைக்கிறார்கள். கடன் தொல்லையால் கலங்கிப் போயிருப்பவர்களுக்கு கத்தை கத்தையாக ரூபாய் நோட்டு கிடைத்தால் என்ன ஆகும் என்பதை சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்கள் மிகச் சரியாக பிரதிபலிக்கின்றன. ஆனந்தியின் மீது காதல்கொள்ளும் சந்திரன், அவருக்காக எதையும் செய்யத்துணிவது, நண்பனிடம் சண்டைபோடுவது என கேரக்டருக்கு வலு சேர்க்கிறார். அழகும் நடிப்பும் இணைந்திருப்பதால், ஆனந்தி, அத்தனை காட்சிகளிலும் மனம் கவர்கிறார்.

ஹரீஷ் உத்தமன் ரத்தக்கறை ஆடையுடன் வெறிபிடித்து அலையும் கொடூர கொலைகாரனாக அசத்தல் நடிப்பை வெளிப்படுத்துகிறார். மிரட்டலான வில்லனாக நடித்திருக்கிறார். ஆணி அடிக்கும் மிஷினால் பலரை பரிதாபம் இல்லாமல் கொலை செய்யும் கொடூர வில்லனாகவே தெரிகிறார். ஆர்.என்.ஆர்.மனோகர், மாரிமுத்து,வெற்றிவேல் ராஜா ஆகியோரது நடிப்பும் கவனம் ஈர்க்கின்றன.

‘டாங்கு டக்கர டோங்கு பாப்பர ஜிப்பா’ என்றெல்லாம் கடுப்பேற்றாமல், கடன்கொடுத்தவர்களுக்கு கல்தா கொடுக்கும்  கதாபாத்திரத்தில் அடக்கிவாசித்து சபாஷ் பெறுகிறார் சின்னி ஜெயந்த். பரணிபாபு என்கிற மினி  லாரியும் ஒரு கதாபாத்திரமாகவே காட்டப்படுகிறது. நேர்த்தியான ஒளிப்பதிவை நிறைவாக வழங்கியிருக்கிறார் வி.இளையராஜா.

பிரபு சாலமனுக்காக கூடுதல் உழைப்பை கொடுத்திருப்பது இமான் இசையில் தெரிகிறது. யுகபாரதி வரிகளில் நான்கு பாடல்களும் தனித்தனி சுகம். ‘சாட்டை’ அன்பழகன் இயக்கம், ‘கயல்’ சந்திரன் மற்றும் ‘கயல்’ ஆனந்தி நடிப்பு, இமான் இசை, பிரபு சாலமன் தயாரிப்பு என்பதால் படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. அதை பூர்த்தி செய்திருக்கிறார் இயக்குநர்.