காட்டுக்குள்ளே கலவரம்!



முதல் படத்திலேயே கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு மட்டுமின்றி, படத்தின் பிரதான பாத்திரத்திலும் நடித்து கோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் எம்.என்.கிருஷ்ணகுமார். ‘சவரிக்காடு’ என்கிற இப்படத்துக்கான பிரமோஷன் பணிகளில் பிஸியாக இருந்தவரை சின்ன பிரேக்கில் பிடித்தோம்.“முதல் படத்திலேயே டி.ஆர் மாதிரி கெத்து காட்டுறீங்களே?”

“பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க ப்ரோ. அவர் சாதனையை நெருங்கணும்னா இந்த ஜென்மமெல்லாம் உழைத்தாலும் பத்தாது. சினிமாவுல நான் கத்துக்குட்டி. அதுக்காக மேம்போக்காக இந்தப் படத்தை ஆரம்பிக்கவில்லை. சினிமா எனக்கு தவம் மாதிரி. க்ளாப் போர்டு அடிக்கிறதிலிருந்து ரிலீஸ் வரை சினிமாவின் ஒவ்வொரு தளத்திலும் இயங்கியிருக்கிறேன்.

அந்த தைரியத்தில் தான் துணிந்து இந்த முயற்சியில் இறங்கினேன். டைரக்‌ஷன் தான் என்னுடைய லட்சியம். அப்படி நான் இறங்கும் போது நல்ல உள்ளங்கள் துணைக்கு வந்தார்கள். அப்படித்தான் ‘சவரிக்காடு’ டேக் ஆஃப் ஆனது.”“தலைப்பிலேயே காடு இருக்கு. இதுவும் சுற்றுச்சூழல் அவசியத்தை பேசும் படமா?”

“ஃப்ரெண்ட்ஷிப் முக்கியமா? உயிர் முக்கியமா? என்ற நிலைக்கு தள்ளப்படும் போது ஃப்ரெண்ட்ஷிப்தான் முக்கியம் என்று சொல்லக்கூடிய நண்பர்கள் பற்றிய கதை. நண்பனின் ஊரில் நடக்கும் திருவிழாவுக்காக நண்பர்கள் ஒரு கிராமத்திற்கு போகிறார்கள். திருவிழாவுக்கு வந்த நண்பர்களிடம் அருகில் இருக்கும் காட்டைப் பற்றி சொல்கிறார்கள். நண்பர்களும் வாழ்க்கையில் த்ரில்லிங்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு அருகில் இருக்கும் காட்டுப் பகுதிக்குச் செல்கிறார்கள்.

வன அதிகாரிகளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு காட்டுக்குள் செல்லும் நண்பர்கள் அங்கே எதிர்பாராதவிதமாக சில பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். காட்டிலிருந்து வெளியே வருவதற்கு அவர்கள் எடுக்கும் முயற்சிகளை பரபரப்பான திரைக்கதை விவரிக்கும். முதல் பாதி காமெடின்னா இரண்டாவது பாதி அட்வென்சராக இருக்கும்.

இரண்டாவது பாதியில் வரும் ஒவ்வொரு காட்சியுமே அடுத்து என்ன நடக்கும் என்ற ஆர்வத்தை தூண்டும் விதத்தில் இருக்கும். வீடு, காடுன்னு கதைக்களம் மாறினாலும் ஃப்ரெண்ட்ஷிப்பை போற்றுவது மாதிரி கதை இருக்கும்.”  “நீங்கதான் ஹீரோவா?”

“இது ஹீரோ ஹீரோயின் கதை கிடையாது. நான், ரவீந்திரன், ராஜபாண்டி லீட் பண்ணியிருக்கிறோம். நானே தயாரிப்பாளர், இயக்குநர் என்பதால் எனக்கு அதிகமா முக்கியத்துவமும் மத்தவங்களுக்கு டம்மியாகவும் கேரக்டர் இருக்காது. மூணு பேருக்குமே படத்துல முக்கியத்துவம் இருக்கும். என்னுடன் சேர்ந்து லீட் ரோலில் நடிப்பவர்களுக்கு இதுதான் முதல் படம். ஆனால் படம் பார்க்கும்போது புதுமுகங்கள் என்று சொல்ல முடியாதளவுக்கு அசத்தியிருப்பார்கள்.”
“சாய் ஸ்வாதி?”

“இதுக்கு முன்னாடி அவங்க பண்ணின ‘ஒரு இயக்குனரின் டைரி’க்குப் பிறகு அதிகம் கவனிக்கப்படத்தக்கவங்களா மாறிட்டாங்க. சினிமா அவருக்கு பேஷன். எடுத்துக் கொண்ட கேரக்டருக்கு என்ன நியாயம் செய்ய முடியுமோ அதை துணிச்சலாக செய்வார். இதில் சாய் ஸ்வாதி அவ்வளவு பொருந்தியிருக்கிறார். அவங்களோட பங்களிப்பு அதிகமாக இருக்கும். முக்கியமான வேடத்துல ‘அம்மணி’ ரேணு பண்ணியிருக்கிறார்.”
“சிவகார்த்திகேயன் மாதிரி பெரிய ஹீரோ படம் பண்ற சூரி எப்படி சம்மதித்தார்?”

“அதுக்கு காரணமும் ஃப்ரெண்ட்ஷிப்தான். நானும் சூரியும் ஆரம்பகால நண்பர்கள். ஒரு நாள் இரண்டு நாள் என்று பிரித்துப் பிரித்து கால்ஷீட் கொடுக்குமளவுக்கு பிஸியாக இருக்கும் சூரி சுளையாக வாரக்கணக்கில் இந்தப் படத்துக்காக கால்ஷீட் கொடுத்தார்.

படத்துல மிஸ்டர் ரோமியோ நாட்டியக் குழு ஓனராக வர்றார். மாமு முத்துபாண்டி அவருடைய கேரக்டர் பெயர். அவர் பண்ணும் ஒவ்வொரு சேட்டைகளும் சிரிப்புக்கு உத்திரவாதம். தவிர  ரோபோ சங்கர், சண்முகராஜன், அல்வா வாசு, அம்பானி சங்கர், ‘அவன் இவன்’ ராமராஜன்னு நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுடைய அனுபவமும் படத்தை வேற லெவலுக்கு கொண்டு போய் இருக்கிறது.”“டெக்னீஷியன்ஸ்?”

“ஒளிப்பதிவு கோகுல். ஷூட்டிங்  ஸ்பாட்ல சும்மாவே இருக்கமாட்டார். கடினமான உழைப்பாளி. விஷுவல்ஸ் அள்ளும். இசை இந்திரவர்மன். டான்ஸ் மாஸ்டர் தர் நடித்த ‘போக்கிரி மன்னன்’ படத்துக்கு இசையமைச்சிருக்கிறார். தமிழை கொலை பண்ணாதபடிக்கு பாடல்கள் வருகிறது. நான்கு பாடல்களும் நச்சுன்னு வந்திருக்கு.” “ஃப்ரெண்ட்ஷிப்பை வைத்து புதுசா என்ன சொல்லப் போறீங்க?”

“புதுசா சொல்றதுக்கு எதுவும் இல்லை. ஃப்ரெண்ட்ஷிப் பற்றி நிறைய கதைகள் வந்திருக்கு. அதிலிருந்து வித்தியாசப்பட வேண்டும் என்பதற்காகத்தான் காட்டை களமாக தேர்வு செய்தேன். சமூகத்தில் எத்தனையோ குழந்தைகள் உதவி கிடைக்காமல் அநியாயமாக உயிரை இழந்திருக்கிறார்கள். இந்தப் படத்தைப் பார்க்கும் பெற்றோர் நம் குழந்தைக்கு இப்படியொரு நண்பன் கிடைத்திருக்கக்கூடாதா என்று நினைப்பார்கள்.”

- சுரேஷ்ராஜா