திரி



பற்றியெரியும் கல்வித்திரி

இது கல்விக்கொள்ளையை கண்டிக்கும் சீஸன். அந்த வரிசையில் இன்னொரு வரவு ‘திரி’.கண்டிப்புக்கும் நேர்மைக்கும் பேர் போனவர் ஜெயப்பிரகாஷ். அவரது மகன் அஷ்வின் அப்படி, இப்படி என்று நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறார். அப்பாவுக்கு மகன் எம்.ஈ. முடித்து புரபசராக வேண்டும் என்பது கனவு. ஒரு முன்விரோதத்தில் கல்லூரி ஓனரின் மகனைப் பகைத்துக் கொள்கிறார் அஷ்வின்.

அந்தப் பகையால் அஷ்வினின் பி.ஈ சர்டிபிக்கேட்டில் நன்னடத்தை சரி யில்லை என்று முத்திரை குத்துகிறார்கள். மாணவர்களை சுரண்டும் கல்லூரி நிர்வாகத்திடம் தனக்காகவும், சக மாணவர்களுக்காகவும் நியாயம் கேட்டு மோதுகிறார். அவருடைய அந்தப் போராட்டம் ஜெயித்ததா? இல்லையா என்பது மீதிக் கதை.

கல்லூரி மாணவன் கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் அஷ்வின். சுவாதி சும்மா வந்து போகிறார். அப்பாவாக வரும் ஜெயப்பிரகாஷ், அம்மாவாக வரும் அனுபமா தங்கள் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். வில்லன்களாக வரும் ஏ.எல்.அழகப்பனும், அஜய்யும் ஓக்கேதான். காமெடி என்கிற பெயரில் சென்றாயன் பண்ணும் அலப்பறை தாங்க முடியலை.

அஜேஷின் பின்னணி இசை படத்தின் வேகத்தை கூட்ட உதவி யிருக்கிறது. வெங்கடேஷின் ஒளிப்பதிவு நன்று. ஸ்டார் பலம் இல்லாமலேயே விறுவிறுப்பான படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் அசோக் அமிர்தராஜ்.