பண்டிகை



உயிர் பந்தயம்!

ஸ்டார் ஓட்டலில் வேலை செய்யும் கிருஷ்ணாவுக்கு ஃபாரீன் வேலை மீது மோகம். அதற்கு ஏராளமாக பணம் தேவை. குயிக் மணி சம்பாதிக்க ‘பண்டிகை’ எனும் சூதாட்டத்தை அவருக்கு அறிமுகப்படுத்துகிறார் சரவணன். இதன்பிறகு கிருஷ்ணா மற்றும் அவரை சார்ந்தோரின் வாழ்க்கையை இந்த ‘பண்டிகை’ எப்படி பதம் பார்க்கிறது என்பதே கதை.

வித்தியாசமான பெட்டிங் விளையாட்டுக் களத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். கிருஷ்ணா நடிக்க முயற்சித்திருப்பதற்காகவே அவரைப் பாராட்டலாம். படமென்றால் ஹீரோயினென்று ஒருவர் இருக்க வேண்டுமே என்பதற்காகவே ஆனந்தி. சரவணன், மதுசூதனன், கருணாஸ், நிதின் சத்யா, சண்முக ராஜா, ப்ளாக் பாண்டி என கதையில் வரும் அனைவரும் அவரவர் ஏற்றுக்கொண்ட வேடத்துக்கு நியாயம் சேர்க்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அர்வியும், இசை அமைப்பாளர் விக்ரமும்  கடுமையாக உழைத்திருக்கிறார்கள். முதல் பாதியில் விறுவிறுப்பு ஏற்றியிருந்தால் இரண்டாம் பாதி நன்கு எடுபட்டிருக்கும். தான் இயக்கிய முதல் படத்திலேயே முற்றிலும் வேறான கதைக்களனை எடுத்துக் கொண்டதற்காக இயக்குநர் ஃபெ ரோஸை பாராட்டலாம்.