கிடாரி



அட்டகாசம்,அதகளம்!

நட்பு, காதல், துரோகம் போன்ற உணர்வுகளோடு விளையாடிக் கொண்டிருந்த சசிகுமார், பக்கா கமர்ஷியல் ஹீரோவாக ‘கிடாரி’யில் இறங்கி அடித்திருக்கிறார். டைட்டிலின் கம்பீரத்துக்கு ஏற்ப முறுக்கு மீசையும், முரட்டுப் பார்வையுமாக அய்யனார் மாதிரி படம் முழுக்க வலம் வருகிறார்.

படத்தின் முதல் காட்சியிலேயே ஊர்ப்பெரியவர் வேல.ராமமூர்த்தி கொலைமுயற்சிக்கு உள்ளாகிறார். அவரது வளர்ப்பு மகனும், பாடிகார்டுமாக இருப்பவர் சசிகுமார்.

வேல.ராமமூர்த்தியிடம் வேலை பார்ப்பவரும், சம்பந்தியுமான மு.ராமசாமியின் பார்வையில் கதையின் களம் விரிகிறது. யார் கொல்ல முயற்சித்திருப்பார்கள் என்பதற்கு ஒவ்வொரு கிளைக்கதையாக திரையில் சொல்லப்பட, கிளைமேக்ஸ் நெருங்க நெருங்க ரசிகர்களுக்கு மனசு தாறுமாறாக அடித்துக் கொள்கிறது. இறுதியில் சஸ்பென்ஸ் கதை எழுத்தாளர் அகதாகிறிஸ்டியின் நாவல் கிளைமேக்ஸ் போல, யாருமே எதிர்பாராத ஒருவர் சிக்குகிறார். அதன்பிறகு நடப்பதெல்லாம் தடதட எக்ஸ்பிரஸ்.

ஹாலிவுட் காட்ஃபாதர் பாணியில், நம் தென் மாவட்ட நகரங்களின் அதிகார அரசியலை அப்பட்டமாக தோலுரித்திருக்கிறது ‘கிடாரி’. 1980களின் இறுதியில், சாத்தூர் நகரத்தில் கதை நடக்கிறது. இதை ரசிகர்களே யூகித்துக் கொள்வார்கள் என்று தானோ என்னவோ ‘வருஷம் 16’, ‘கார்த்திக் ரசிகர் மன்றம்’ என்று ஏராளமான க்ளூக்களை டைரக்டர் கொடுத்திருக்கிறார்.

வேல.ராமமூர்த்தியும், அவரது பாடிகார்டுமான சசிகுமாரும் நல்லவர்களா கெட்டவர்களா என்றே புரியாமல் பாதி படம் போய்விடுவது பலவீனம். ஆனால், இதுபோன்ற சிறு பலவீனங்களை படத்தில் இடம்பெற்றிருக்கும் நடிகை, நடிகையரின் துல்லியமான நடிப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பிரமாத உழைப்பில் சரிக்கட்டியிருக்கிறார் இயக்குநர்.

சசிகுமாருக்கு, நிகிலா விமல் பக்கா மேட்ச். ரத்தக்களரியான ஊரில் ரோஜாப்பூ மாதிரி இவர்களது காதல். சசிகுமாரை ஏடாகூடமான இடத்தில் நிகிலா கிள்ளுவதும், சசி ரசித்து நிகிலாவின் உதட்டில் ஜூஸ் உறிவதும் தியேட்டரில் இளசுகளின் அப்ளாஸை அள்ளுகிறது. வேல.ராமமூர்த்தி வேல் கம்போடு களமிறங்கும்போது திரை பற்றிக்கொள்ளுமோ என்று அஞ்சுமளவுக்கு வெப்பம்.

கவிஞரான வசுமித்ராவுக்கு இதுதான் முதல் படமாம். மனுஷன், கேரக்டராகவே மாறிவிட்டார். மு.ராமசாமியின் வர்ணனையில்தான் படத்தின் கதையே நடக்கிறது எனுமளவுக்கு அவருக்கு வெயிட்டான ரோல்.எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு உலகத்தரம். நடிகரான தர்புகா சிவா, இப்படத்தில் இசையமைப்பாளராக மாறி பின்னணியிலும், பாடல்களிலும் பின்னியிருக்கிறார்.

புதுமையான திரைக்கதை உத்தி, பக்காவான நடிகர் தேர்வு போன்றவற்றின் மூலம் நேர்த்தியான ஒரு படத்தைக் கொடுத்து, தன்னுடைய முத்திரையை பலமாகப் பதித்திருக்கிறார் முதல்பட இயக்குநரான பிரசாத் முருகேசன்.