பக்கா ஹிட்டுக்கு பயணக்கதை!



சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்! மாணவன் 10

பயணம்தான் மனித நாகரிக வளர்ச்சிக்கு அத்தியாவசியமான செயல்பாடு.ஹாலிவுட்டோ, கோலிவுட்டோ.. பயணக் கதைகள் மக்களுக்கு திகட்டியதே இல்லை. தாங்கள் வாழ்நாளில் செல்லவே வாய்ப்பில்லாத இடங்களையும், மனிதர்களையும், கலாச்சாரத்தையும் திரையில் காண்பதை விரும்பாதவர் இருக்கவே முடியாது. ஆங்கிலத்தில் ‘ரோட் மூவிஸ்’ என்றொரு வகையே உண்டு.

தமிழில் பயணம் குறித்த கதைகள் கொஞ்சம் அரிதுதான். அதற்கு நிவாரணமாகத்தான் விதவிதமான லொக்கேஷன்களில் பாடல் காட்சிகளை நுழைத்து ரசிகர்களை குஷிப்படுத்துகிறார்கள்.

தமிழில் இத்தகைய ரோட்மூவிக்கு பெரிய வரவேற்பினை ஏற்படுத்திக் கொடுத்த படம், 1966ல் வெளிவந்த ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’. இந்தப் படத்தின் புதுமையான கதையால் கவரப்பட்ட பாலிவுட்டார், பிற்பாடு இந்தியில் ‘பாம்பே டூ கோவா’ என்று ரீமேக் செய்தார்கள். அங்கே அமிதாப்பச்சன் நடித்தார்.

படத்தின் ஹீரோ ரவிச்சந்திரன் சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு பஸ்ஸில் பயணிக்கிறார். ஹீரோயின் கல்பனா ரவுடிகளிடமிருந்து தப்புவதற்காக அதே பஸ்ஸில் வருகிறார். இருவருக்குள்ளும் லவ்வு பற்றிக் கொள்கிறது.

பஸ்ஸின் கண்டக்டர் நாகேஷ், டிரைவர் கருணாநிதி, பயணிகளான வீரப்பன் - மனோரமா தம்பதியினர் மற்றும் அவர்களது மகன் ‘பக்கோடா’ காதர் என்று ஏராளமான பாத்திரங்களும், கிளைக்கதைகளுமாக களை கட்டியது ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’.

பயணக்கதைகளை எழுதுவது சுலபம். நிறைய பாத்திரங்களையும், சம்பவங்களையும் விலாவரியாக எழுதுவதற்கான இடம் கிடைக்கும். புதிய களங்களையும், மனிதர்களையும் அறிமுகப்படுத்துவதின் மூலம் நிறைய ஆச்சரியங்களை காட்சியில் கொடுக்கலாம். வெற்றிக்கான குறைந்தபட்ச உத்தரவாதத்துக்கு ‘பயணம்’ என்கிற கரு கை கொடுக்கும்.

2010ல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ‘பையா’ இதற்கு நல்ல உதாரணம். தமன்னாவை கண்டதுமே காதலில் விழுகிறார் கார்த்தி. கார்த்தியை ஒரு டிரைவர் என்று கருதிக்கொள்ளும் தமன்னா, ஒரு பிரச்னையில் இருந்து தப்ப அவரை மும்பை வரை கார் ஓட்டிவரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். சாலை வழியே பயணிக்கும் கதையில் கார்த்தி, கார்த்தியின் நண்பர்கள், தமன்னா, தமன்னாவின் பிரச்னை என்று விறுவிறு வேகத்தில் சுவாரஸ்யமாக கதை சொல்லி மகத்தான வெற்றியை எட்டினார் லிங்குசாமி.

சமீபத்தில் நீங்கள் செய்த ஒரு பயணத்தை (அது சென்னை டூ திருப்பதியாகக் கூட இருக்கலாம்) சிறுகதையாக எழுதிப் பழகிப் பாருங்களேன். பஸ்ஸில் ஏறியதிலிருந்து நீங்கள் கண்டவை, கேட்டவை உட்பட திருப்பதியில் மொட்டை அடிக்கும் தொழிலாளி வரை அந்தக் கதையில் கேரக்டர்களாக அமையலாம்.

(கதை விடுவோம்)