விபச்சார வழக்கில் கைதாகி, ஐந்தாண்டுகள் போராடி தன்னை நிரூபித்த நடிகை



2011 ஜனவரி. ஓர் ஐந்து நட்சத்திர ஓட்டலில் விபச்சாரம் செய்ததாக கூறி புகழ்பெற்ற கதாநாயகியான யமுனாவை பெங்களூர் போலீஸார் கைது செய்தார்கள். சென்னை, பெங்களூர், ஹைதராபாத் நகரங்களில் தொடர்ச்சியாக இதேமாதிரி நிறைய நடிகைகள் கைது செய்யப்பட, ஊடகங்கள் அலறின.

தொண்ணூறுகளில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து தெலுங்கு மற்றும் கன்னட ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தவர் யமுனா. திருமணமாகி, இரண்டு மகள்களுக்கு தாயான பின்னர் மீண்டும் நடிக்க வந்தார். டிவி மெகாசீரியல்களில் மும்முரமாக நடித்துக் கொண்டிருந்த நிலையில்தான் திடீரென்று பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.

ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அந்த வழக்கு பற்றி சமீபத்தில் தெலுங்கு இணையதளம் ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார் யமுனா.“பெங்களூர் கிரைம் பிராஞ்ச் போலீசார் என்னை விசாரிக்க அழைப்பதாக போன் வந்தது.

என்ன ஏதுவென்று தெரியாமல் பதட்டத்துடன் அவர்கள் முன் போய் ஆஜரானேன். சாதாரணமாகத்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். என்னைப்பற்றியும் நான் நடித்த படங்களைப் பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். திடீரென்று சில தாள்களில் மிரட்டி கையெழுத்து வாங்கினார்கள். என்னை கைது செய்வதாக அறிவித்தார்கள்.

என்னுடைய உறவினர்கள் வழக்கறிஞரோடு வந்து பெயில் எடுக்கும்வரை ஏன் கைது, எதற்கு கைது என்றே புரியாமல் அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்றேன்.பின்னர்தான் தெரிந்தது, நான் செய்யாத குற்றம் ஒன்றுக்காக கைது செய்யப்பட்டேன் என்பது.

அதற்குள்ளாக ஊடகங்கள் என்னைப் பற்றி இல்லாததும், பொல்லாததுமாக இட்டுக்கட்டி செய்திகள் பரப்ப, அப்படியே இடிந்து போனேன். தற்கொலை செய்துகொள்ளலாமா என்கிற எண்ணம் வந்தது.

ஏனெனில் எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த கெட்ட பெயர், என்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதித்துவிடுமோ என்று அச்சப்பட்டேன். அதே நேரம், அந்த குழந்தைகளுக்காகவே உயிரோடு இருந்தாக வேண்டும் என்கிற யதார்த்தம்தான் என்னை தற்கொலை உணர்வில் இருந்து மீட்டது.

என்னுடைய இளைய மகள் மிகவும் சிறுவயதாக இருந்ததால், அவளுக்கு ஏதும் தெரியவில்லை. ஆனால், பெரிய மகள்தான் இடிந்து போயிருந்தாள். இரண்டு ஆண்டுகள் சரியாக யாரிடமும் பேசாமல் எப்போதும்   எதையோ பறிகொடுத்தது மாதிரியே உலவிக் கொண்டிருந்தாள். வெளியே தலைகாட்டவும் முடியவில்லை. உற்றார், உறவினர்களின் நல்லது கெட்டதுகளில் கலந்து கொள்ள இயலாதவாறு ஆகிவிட்டிருந்தேன்.

கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியாக கோர்ட்டு படிக்கட்டுகள் ஏறி போராடித்தான் என்னை நிரூபிக்க முடிந்தது. நான் போகவே போகாத இடத்தில் நான் இருந்ததாக கூறி வழக்கு தொடுக்கப்பட்டது என்பதை ஆதார பூர்வமாக என்னுடைய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் நிரூபித்தார். அதைத் தொடர்ந்தே 2015ல் ட்ரிப்யூனல் கோர்ட்டு என் மீது தொடுக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது.

என்னை கைது செய்தபோது என்னுடைய போட்டோவை நிமிடத்துக்கு நிமிடம் டிவியில் ஒளிபரப்பி பரபரப்பு ஏற்படுத்திய ஊடகங்கள், நான் நிரபராதி என்று நிரூபித்ததையும் அப்படியே ஒளிப்பரப்பாக்கி இருக்க வேண்டுமில்லையா? அது நடக்கவில்லை.

ஒரு பொய் வழக்கில் என்னுடைய வாழ்க்கையின் ஐந்தாண்டுகளைத் தொலைத்துவிட்டேன். என்னுடைய துறை சார்ந்தவர்கள் மட்டுமின்றி, வேறு சிலரும் சேர்ந்து செய்த சதிவேலைகளின் காரணமாக நான் மட்டுமின்றி, என் குடும்பமே அவதிப்பட்டது” என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார் யமுனா.

யமுனாவின் இந்த நெடிய வீடியோ பேட்டி வெளியாகி, இணையதளங்களில் வைரலாகியிருக்கிறது. அந்த காலகட்டத்தில் இதே குற்றத்தைக் கூறி கைது செய்யப்பட்ட மற்ற நடிகைகளின் மீதும் இதனால் ரசிகர்களுக்கு திடீரென அனுதாபம் ஏற்பட்டிருக்கிறது.

- யுவகிருஷ்ணா