அங்கீகாரத்துக்காக போராடும் திருநங்கை சினேகா!



‘தர்மதுரை’யின் வாட்ச்வுமனுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து கொண்டே இருக்கின்றன. “நூறு படங்களில் நடிச்சா கூட இவ்வளவு புகழும், அடையாளமும் கிடைக்காது. ஒரே படத்தில் இதை எனக்கு பெற்றுக் கொடுத்த அண்ணன் சீனுராமசாமிக்கு எப்படி நன்றிக்கடன் செலுத்தறதுன்னே தெரியலை” என்று நெகிழ்ந்து கொண்டிருந்த செல்வி சினேகாவை, சமாதானப்படுத்தி பேசினோம்.“உங்க பின்னணி”

“ஊரு சிவகாசி. அப்பா அம்மா வெச்ச பேரு ஜீவா. சீனுராமசாமிண்ணே வெச்ச பேரு செல்வி சினேகா. எங்க வீட்லே நாங்க மொத்தம் நாலு பேரு. பட்டாசுக் கம்பெனியில் வேலை பார்த்து எங்களை காப்பாத்தினாங்க பெற்றோர். ஒண்ணாங்கிளாஸோடு என் படிப்பு முடிஞ்சது. பயங்கர வறுமை. உள்ளூரிலேயே சில காலம் வேலை பார்த்தேன்.

என்னோட எட்டாவது வயசில் கோயமுத்தூரில் ஒரு நகைக்கடையில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கே சில காலம்தான். அங்கே என்னோட பழகினவங்க ஒரு மாதிரியா இருந்தாங்க. வீட்டுல பிரச்னையைச் சொன்னதும் திரும்ப கூப்பிட்டுக்கிட்டாங்க. சிவகாசியில் ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை. இங்கேயும் என்னை கேலியும், கிண்டலுமா வதைச்சாங்க. சிவகாசி வாழ்க்கை எனக்கு போதும்னு முடிவெடுத்துட்டு ஒரு அரை டவுஸர், மூணு சட்டை, இருநூறு ரூபா பணத்தோட மெட்ராசுக்கு பஸ்ஸை பிடிச்சேன்.

இங்கே வந்தப்புறம் டீக்கடை வேலை, கோயம்பேட்டுல மூட்டை தூக்குற வேலைன்னு செஞ்சிக்கிட்டிருந்தேன். அப்போ டீனேஜோட மிடிலில் இருந்தேன். அதுவரை என்னை கேலி செஞ்சிக்கிட்டிருந்தவங்க, திடீர்னு பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பிச்சாங்க. அப்புறம் கேப்டனோட மண்டபத்தில் கொஞ்சநாள் எச்சையிலை எடுத்துக்கிட்டிருந்தேன். என்னோட சின்சியாரிட்டியை பார்த்த ஒருத்தர் ஹவுஸ்கீப்பிங் வேலையிலே சேர்த்துவிட்டார். வடபழனியில் ஒரு ஸ்வீட் ஸ்டாலில் சுத்தம் செய்யுற வேலை.

பக்கத்துலேயே ஒரு டான்ஸ் ஸ்கூல். நடனத்தில் ஆர்வம் வந்து கத்துக்க ஆரம்பிச்சேன். அப்புறம் நிறைய ஸ்டேஜ் ஷோ. கிளாசிக் டான்ஸில் தொடங்கி ஐட்டம் சாங் வரை பக்காவா ஆடுவேன் என்பதால் ரொம்ப குயிக்காவே இம்ப்ரூவ் ஆனேன். அப்போ திடீர்னு திருவிழாக்களில் கலைநிகழ்ச்சி என்கிற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதாக சர்ச்சை எழுந்ததால், எனக்கு புரோகிராம் கிடைக்காம போயிடிச்சி.”
“அப்புறம்?”

“நடனக்குழு நண்பர் ஒருவர் மூலமா சின்னத்திரை நடிகை லேகாவிடம் மேக்கப் அசிஸ்டென்டா வேலைக்கு சேர்ந்தேன். அதையடுத்து உமா, சுகுணான்னு நிறைய நடிகைகள் என்னை வேலைக்கு சேர்த்துக்கிட்டாங்க. அப்படியே சினிமாவுக்குள்ளேயும் நுழைஞ்சேன். ஸ்ரேயா, தமன்னா, ரம்யா, ரிச்சா கங்கோபாத்யாயா, வாமிகா... இவங்களுக்கெல்லாம் மேக்கப் அசிஸ்டென்டா இருந்திருக்கேன்.

இந்த வேலை கிடைக்காத காலத்தில் சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டம். அதை சரிக்கட்ட நடிக்கலாம்னு முடிவுக்கு வந்தேன். சான்ஸ் கேட்க போனப்போ எதிர்கொண்ட கேலியும், கிண்டலும் ஏராளம். ‘ஆணா இருந்தா தம்பி ரோல், பொண்ணா இருந்தா தங்கச்சி ரோல். உனக்கு என்ன ரோல் கொடுக்கறது?’ன்னெல்லாம் குத்தலா கேட்பாங்க. நடிக்கற ஆசையே போச்சி.”

“அப்புறம் ‘தர்மதுரை’யில் எப்படி?”“இந்தப் படத்துலே நடிச்ச விஷாலினிக்கு மேக்கப் அசிஸ்டென்டாதான் போனேன். ஒருநாள் திடீர்னு டைரக்டர் சீனுராமசாமியும், கேமராமேன் சுகுமாரும் என்னிடம் ‘நடிக்கிறியா?’ன்னு திடீர்னு கேட்டாங்க. இவங்க கேலி பண்ணுறாங்களோன்னு கூட தோணிச்சி. எனக்கு அங்கே வேலை முடிஞ்சி சென்னைக்கு வந்துட்டேன்.

ஒருநாள் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் சாரோட ஆபீஸில் இருந்து போன். ‘சீனுராமசாமி உங்களை உடனே குற்றாலத்துக்கு வரச்சொல்லியிருக்காரு. ஆபீஸ் வந்து டிக்கெட் வாங்கிக்குங்க’ங்குறாங்க. என்னாலே நம்பவே முடியலை.முதல் ஷாட்டே பெரிய ஹீரோவான விஜய்சேதுபதியோடு. சுத்தி பெரிய கூட்டம் வேடிக்கை பார்க்குது. ஸ்டார்ட் சொன்னதுமே பயத்துலே உளறிட்டேன்.

விஜய்சேதுபதி அண்ணன்தான் தனியா கூப்பிட்டு சமாதானமாப் பேசினாரு. ‘ஒரு அண்ணன்கிட்டே எப்படி பேசுவியோ அதுமாதிரி எங்கிட்டே பேசு. என்னைப் பாத்து பயப்படாதே’ன்னாரு. ஹீரோவே என்கிட்டே அன்பா நடந்துக்கிட்டதாலே ஒட்டுமொத்த டீமுமே என்மேலே தனி கவனம் செலுத்தினாங்க. கடைசிநாள் ஷூட்டிங் முடிஞ்சி வர்றப்போ ‘ஐ லவ் யூ தங்கச்சி’ன்னு வாழ்த்தி வழியனுப்பி வெச்சாரு விஜய் சேதுபதியண்ணன்.”
“ரிலீஸுக்கு அப்புறம் எப்படி ஃபீல் பண்ணுறீங்க?”

“திக்குத் தெரியாத காடு மாதிரி இருந்த என் வாழ்க்கை இப்போதான் சரியாகியிருக்கு. ‘தர்மதுரை’க்காக எட்டு திக்கிலிருந்தும் பாராட்டுறாங்க. ஊர்லே படம் பார்த்து என் குடும்பமே போனில் பேசி உணர்ச்சிவசப்பட்டாங்க.

முன்னாடியெல்லாம் ஃபேஸ்புக்கில் என்னை யாருமே கண்டுக்க மாட்டாங்க. படம் வெளிவந்தப்புறம் என்னோட ஃபாலோயர்ஸ் லிஸ்ட் ஆஞ்சநேயர் வால் மாதிரி நீண்டுக்கிட்டே இருக்கு. ஒரே படம், என்னோட ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாத்தியிருக்கு.

எல்லாத்துக்கும் காரணம் அண்ணன் சீனுராமசாமிதான். இவரு இல்லேன்னா என் வாழ்க்கையே சீரழிஞ்சிருக்கும்.”“சமூகம் உங்களை மாதிரி திருநங்கைகளை எப்படி நடத்துது?”“எங்களுக்கு வேலை கொடுக்குறதையே குற்றமா பார்க்குறாங்க. வாடகைக்கு வீடு கூட கிடைக்காது. மத்தவங்களுக்கு 2000 ரூபாய் வாடகைன்னா எங்களுக்கு 4000 ரூபாய். மத்தவங்களுக்கு ஒரு யூனிட் கரண்டு 4 ரூபாய்னா, எங்களுக்கு 8 ரூபாய்.

அரசாங்கம் எங்களை மூணாவது பாலினமா அங்கீகரிச்சிருக்கு என்பது மட்டுமே ஆறுதல். சீனு ராமசாமி மாதிரி முற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் மட்டுமே எங்களை ஆதரிக்கிறாங்க. எங்களுக்கு வேலையே கிடைக்கிறதில்லை என்பதால், கிடைக்கிற வேலையை டபுள் சின்சியாரிட்டியோட செய்வோம். கவுரவமான வேலை கிடைக்காததாலேதான் திருநங்கைகள், வேற மாதிரி வேலைக்கு போக வேண்டியிருக்கு.”
“அடுத்த வாய்ப்புகள்?”

“சில படங்களில் கூப்பிட்டிருக்காங்க. ‘ஆக்கம்’, ‘பப்பரப்பாம்’னு அடுத்தடுத்து பிஸியா இருக்கேன். மேக்கப் அசிஸ்டென்டா இருக்கற நான், மேக்கப் வுமனா ஆகணும் என்பதுதான் லட்சியம். ஆனா, அசோசியேஷன் கார்டு வாங்கவே ரெண்டு லட்ச ரூபாய் செலவாகும். அதுக்கான காசை சம்பாதிக்கத்தான் நடிக்கவே வந்திருக்கேன்னு கூட சொல்லலாம்.”

- சுரேஷ்ராஜா
படங்கள் : ஆர்.கோபால்